Tuesday, May 18, 2004

பொது சவால் சட்டம்?!

பொது சிவில் சட்டத்தை 1937க்கு முன்னாலே கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு அது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்திருக்காது என்பது சில பேரின் கருத்து. பொது சிவில் சட்டம் என்றவுடன் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரான விஷயம் என்கிற கருத்து மீடியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற சிறுபான்மை மதத்தினர் வாய்திறக்காமல் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

மதம் என்பது வெறும் கேட்பாடு மட்டுமல்ல சடங்ககுகளும் அதன் உள்ளடக்கம்தான். கோட்பாடுகளை ஏற்கும்போது சடங்குகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. மத வித்தியாசமின்றி எல்லா சடங்குகளையும் விமர்சிக்கும் துணிச்சல் இன்று யாருக்குமில்லை. மத கோட்பாடுகளைப் பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம். மூட நம்பிக்கையை ஏன் நம்மால் விமர்சிக்கமுடியவில்லை? ஒரு மதவாதியாக இருந்துகொண்டே தனது மதத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கவே முடியாதா? நம்பிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது. தனது மதத்தில் இருக்கும் ஓட்டைகளை விமர்சித்த மகாத்மா காந்திஜியையே விமர்சனம் செய்து தாளித்து விட்ட நாடு இது.

இந்து மதத்தில்தான் அதிகமான மூட நம்பிக்கைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணுரிமை சம்பந்தபட்டவற்றில் இஸ்லாம் தான் இந்த விஷயத்தில் முன்னுக்கு நிற்கிறது. எல்லா மதத்திலுமே சடங்குகள் பெண்ணுக்கு எதிராகவே இருக்கின்றன என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு மாதர் சங்கங்களும் மூடி மறைத்துவிடுகின்றன. அப்படியே எதிர்ப்பவர்களும் தலாக் விவாகரத்து முறையை மட்டும்தான் கண்டிக்கிறார்கள். உண்மையில் தலாக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சமுதாய பெரியவர்கள் முன்னிலையில் சொன்னால் மட்டுமே இது சாத்தியம். தலாக் சொல்ல விரும்பும் தம்பதிகளுக்கு இடையே பெற்றோர்கள் சமரசம் செய்து வைத்தாக வேண்டும் என்பதும் ஒரு கட்டாயம். இன்னொரு விஷயம் முஸ்லீம் ஆண்டுகள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'தலாக்' என்னும் வார்த்தைப் பதம்தான் எல்லோருக்கும் பரிச்சயம். முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'ரகுலரி' பற்றி சுத்தமாக யாருக்கும் தெரிவதில்லை.

சரி, பொது சிவில் சட்டம் எப்போது சாத்தியப்படும்? அது தேவைதானா? சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அது 2037க்கு மேலும் தொடரக்கூடும் என்பதுதான் வேடிக்கை.