Friday, May 21, 2004

எதுவும் நிரந்தரமில்லை!

'காலப் போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது என்ற விஞ்ஞான உண்மையை வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதே சொல்லிவிட்டார்கள். 'மாறும் வரை பொறுத்திரு' என்பதே இந்து மதத்தின் உபதேசம். வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒரு நாள் பக்குவம் பெறுவான், அதுவரை அவனை நாம் சகிப்போம் என்பதே இந்து மதத்தின் சாரம். இந்து மதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக்கொண்டு போகும்போது வேறு மதங்களுக்கு அந்த சிறப்பில்லை என்று கருதக்கூடாது. நான் ஒர் இந்து என்ற முறையில் எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன். அவை பிற மதங்களில் இருக்கலாம் நான் மறுக்கவில்லை. 'சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதன்று எண்ணி ஆராவாரம் செய்கிறான். உண்மை ஞானம் உதித்துவிட்டால், பிற மதங்களை அரவணைக்கிறான்' என்கிறார் பரமஹம்சர். உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்து மதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருதக்கூடாது. 'என் மனைவி அழகானவள்' என்று சொன்னால் 'அவன் மனைவி கோரமானவள்' என்று அர்த்தமல்ல'

- கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமத'த்திலிருந்து...

கண்ணதாசனால் ஏசு காவியத்தையும் எழுத முடியும்; இந்து மதத்தின் அருமை பெருமைகளை பற்றியும் ஏழுத முடியும் என்பது அசாதாரணமான விஷயம். வெறும் சினிமா பாடலாசிரியராகவே இருந்துவிடாமல் வேறு தளங்களிலும் புயலென புகுந்து புறப்பட்ட கண்ணதாசனின் பன்முகத்தன்மை சிலிர்க்க வைக்கிறது. கண்ணதாசனுக்கு பிறகு வந்து வைரமுத்து அவ்வப்போது சில ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார். சினிமா தவிர விகடனில் வந்து அசத்துவதோடு நின்று விடுகிறார் வாலி.

புதிய தலைமுறை பாடலாசிரியர்களோ சினிமா உலகத்தை தாண்டி வர முயற்சிப்பதேயில்லை. சினிமாவில் கூட ஒரே பந்தில் சிக்ஸர் அடித்த மு.மேத்தாவுக்கு கிடைத்த மாதிரியான வாய்ப்புகள் (உ.ம் 'வேலைக்காரன்') மற்ற பாடலாசிரியர்களுக்கு கிடைப்பதும் இல்லை. இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு நாலைந்து கவிஞர்கள் பாட்டெழுதுகிறார்கள். இளையராஜாவுக்கு பின்னர் இசையமைப்பாளர்களும் பாட்டெழுதுவதில் போட்டிக்கு வந்துவிட்டார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தரமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தாராம் முன்னாள் கம்யூனிஸ்ட் பழனிபாரதி! பொழப்புக்காகத்தான் பாட்டெழுதுகிறேன்னு காளிதாசன் வெளிப்படையாக சொன்னாலும் லட்சியம் எதையும் வெறும் பேச்சளவுக்காவது வெச்சுக்கக் கூடாதா? கபிலனும் தாமரையும் நம்பிக்கையளித்தாலும் தொடர்ச்சியான படைப்புகளை தருவதில்லையே!

எது எப்படியோ, வாலிக்கும் வைரமுத்துவுக்கும் சரியான வாரிசுகள் இதுவரைக்கும் வரவில்லை. அதைத்தான் நம்பவே முடியவில்லை!