சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின்படி உலகிலேயே சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்திராத கெளரவம். முதலிடத்தை இலங்கையும் இரண்டாமிடத்தை நேபாளம் பெற்றிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈராக் போர் மற்றும் சார்ஸ் பீதியினால் உலகிலேயே அமைதியான பகுதியாக தெற்கு ஆசிய நாடுகள் இருந்ததுதான் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க காரணம். இதனால் இலங்கையில் 23.7 சதவீதமும் நேபாளத்தில் 14.8 சதவீதமும் இந்தியாவில் 14.6 சதவீத வளர்ச்சியும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் சுறுசுறுப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணியில் 23 சதவீத ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. போர் பற்றிய பயங்களெல்லாம் இலங்கையில் நீங்கிவிட்டது. இந்தியா இரண்டாமிடத்தை மிகக்குறைந்த புள்ளிகளில்தான் கோட்டை விட்டிருக்கிறது. ஆகா, நமக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்ட மாதிரிதான் தெரிகிறது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தமிழோவியத்துல எழுதியிருந்தேன். போன வருஷம் சுற்றுலா வளர்ச்சி கிடுகிடுவினு உயர்ந்த மாதிரி இருந்ததுக்கு காரணம் வாஜ்பாய் அரசு அல்ல; சார்ஸ் பீதிதான் தெளிவா தெரியுது. உலகத்திலேயே பாரிஸ் நகருக்குதான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமா இருக்குதாம். 80 மில்லியன் மக்கள் பாரீஸ் பார்க்கிறதுக்கு வர்றாங்களாம். நம்மூருக்கு வர்றவங்கள வெறும் 3 மில்லியன் மட்டும்தான். கம்யூனிஸ கோட்டை மாதிரி இறுக்கமா இருந்தாலும் சீனா, இந்தியாவை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டது. 33 மில்லியன் மக்கள், சீனாவை சுத்திப் பார்க்க வர்றாங்கங்கிறது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.
சுற்றுலாத்துறையின் மூலம் உலகெங்கிலும் கிடைக்கும் வருமானம் 4.6 டிரில்லியன் என்கிறது ஒரு என்டிடிவியின் செய்தி. இதில் இந்தியாவின் பங்கு வெறும் 4 பில்லியன் மட்டும்தான். இருப்பினும் இந்தியா சுற்றுலாத்துறையில் இன்னும் ஒரு 15% வளர்ச்சி பெறமுடியும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது அதே செய்தி. ஆனால், வெளியுறவு, உள்துறை, சுற்றுச்சுழல், நிதி எனப் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் மட்டுமே இது சாத்தியம்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஆந்திராவின் அதிரடி அரசியல்வாதி ரேணுகா செளத்ரியின் பொறுப்பில் தற்போது சுற்றுலாத்துறை. எதிர்பார்ப்பது போல 15% வளர்ச்சி இந்திய சுற்றுலாத்துறைக்கு கிடைக்குமா என்கிற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.... சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் ஈட்டும் யுக்தியே இந்தியாவுக்கு புதுசுதானே என்கிறார். ஜம்பது ஆண்டுகளில் காங்கிரஸால் செய்ய முடியாததை ஜந்து ஆண்டுகளில் பாஜக செய்திருக்கிறது என்ற பிரமோத் மகாஜனின் காமெடிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!