Wednesday, June 30, 2004

கருப்புச் சட்டைகளின் கன்னித் தீவு கதை

காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா? தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா? ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்கிற லிஸ்ட்டில் சேருமோ என்கிற சந்தேகத்தில் இருந்தது - உயர்நீதி மன்ற கிளையை மதுரையில் ஆரம்பிச்சுடுவாங்களா? மாதாமாதம் ஒரு தேதியை சொல்வார்கள். அந்த தேதியில் ஒன்றுமே நடக்காது. திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது என்றுகூட டிவியில் சொல்ல மாட்டார்கள். நாகர்கோயிலில் ஒருத்தனை வெட்டிவிட்டு சென்னை வரை கேஸ் சம்பந்தமாக அலைய நேருவது என்பது கிட்டதட்ட ஆயுள் தண்டனையை அனுபவிப்பது மாதிரிதான். உயர்நீதிமன்றத்தின் கிளை சென்னையிலேயே இருக்கும் பட்சத்தில் சமானியர்களுக்கு மேல் முறையீடு என்பதெல்லாம் காஸ்ட்லி சமாச்சாரம்.

மதுரையில் ஒரு கிளை வரப்போகிறது என்கிற அறிவிப்பை பார்த்ததுமே பலருக்கு கிலி வந்துவிட்டது. முதலில் உயர்நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பு வந்தது. ஜூனியர்களும், இன்னும் திருமணமாகதவர்களும் மதுரைக்கு மூட்டை கட்டியே ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்லி கிட்டதட்ட மிரட்டி வைத்தார்கள். பெரும்பாலான ஊழியர்கள் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை பெரிதாகவில்லை. ஏற்கனவே நிறைய கேபின்கள் காத்து வாங்குவதால் நீதிபதிகளை மதுரைக்கு அனுப்புவதிலும் ஒரு பிரச்சினை. நடுவே சம்மர் ஹாலிடேஸ் வேறு வந்து தொலைத்தது. ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து வந்தால் இப்போது வழக்கறிஞர்களின் போராட்டம்.

கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பித்து கொள்ளிடம் வரைக்கும் உள்ள மாவட்டங்கள் மதுரை கிளையின் வரம்புக்குள் வருகின்றன. வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோவை, வேலு¡ர் போன்ற மாவட்டங்களும் சென்னையை சேர்ந்த பகுதிகள் மட்டும்தான் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் வரம்புக்குள் வருகின்றன. மதுரைக்கு மாற்றக்கூடாது என்று சென்னை வழக்கறிஞர்களும் மதுரை கிளையை உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று மதுரை பகுதி வழக்கறிஞர்களும் போராடுகிறார்கள்.

சரி, இதில் வழக்கறிஞர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? கிளையண்டுக்கு நல்ல காலம்னா வக்கீலுக்குதான் கஷ்டகாலமாச்சே!

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில்தான் கலவரம், வெட்டு குத்து எல்லாம் அடிக்கடி நடந்து கிரிமினல் வழக்கெல்லாம் ஜாஸ்தியா இருக்குமாம். நம்ம பொழப்பை கெடுக்கிறாங்கப்பான்னு சென்னை வக்கீல்களுக்கு ஒரு ஆதங்கம். நம்ம பொழப்பை இன்னும் கெடுக்கிறாங்களேன்னு மதுரை வக்கீல்களுக்கு ஆதங்கம். அட தேவுடா! கருப்பு சட்டைங்க கிட்டேயிருந்து மக்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்!