Wednesday, July 28, 2004

டிக்கெட்டோபியா!

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கும் நடராஜா சர்வீஸை நம்பியிருப்பவர்களுக்கும் இந்த வியாதி வரவே வராதுன்னு தலையிலடிச்சு சொல்லலாம். பஸ்ஸில் உள்ளே நுழைந்ததும் ஐம்பது ரூபாயை நீட்டினால் கண்டக்டர்  புன்னகையை தொலைப்பார். சிடுசிடு கண்டக்டர் கொடுக்கிற டிக்கெட்டை வாங்கிறதுங்கிறது சத்தியமா ஒரு தனி கலை. சென்னைக்கு வந்த புதுசில் இந்த வித்தை தெரியாமல் டிக்கெட்டை காற்றில் பறக்கவிட்டபோதுதான் பேட்டையின் பிரபல கெட்ட வார்த்தை எனக்கு பரிச்சயமானது. அதற்கப்புறம்தான் நண்பனின் மூடுமந்திரம் வொர்க் அவுட்டானது. 'டிக்கெட்டை எந்த கண்டக்டரும் கையில தரமாட்டான்டா. திணிப்பான். நீதான் சரியாக புடிச்சுக்கணும்'

கண்டக்டர் எச்சில் தடவி மேப் போட்ட டிக்கெட்டை வாங்கி மேல் சட்டை பாக்கெட்டில் வெச்சுக்கறதுதான் நம்ம பழக்கம். நெருக்கியடிக்கிற கூட்டத்தில் இடுப்பையே (சத்தியமா என் இடுப்புதானுங்கோ!) தேட முடியாதபோது பாண்ட் பாக்கெட்டை எங்கே தேடுறது? வாராவாரம் அழுக்குச் சட்டையை தண்ணியில் முக்கி எடுக்கும்போது கொச கொசவென பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், சிவப்பு என சகல வர்ணங்களிலும் சட்டை பாக்கெட்டில் முத்திரை குத்தப்பட்டிருக்கும். ட்ரீட்மெண்ட் குடுக்கிறதுக்கு மிஸ்டர் ரின் இல்லாட்டி மிஸ்டர் வொயிட்தான் வரணும். வந்தாலும் ரொம்ப நேரம் மல்லு கட்டியாகணும். சரி, வாங்குற டிக்கெட்டை எங்கேதான் வெச்சுக்கணும்? இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாத சங்கதி.

மட்டமான பிரிண்டிங் குவாலிட்டியோட தம்மா துண்டு சீட்டை எவன் கண்டுபிடிச்சதுன்னு எக்குதப்பா கேள்வி கேட்க உங்களுக்கும் தோணும். ஆனா, பஸ்ஸை விட்டு இறங்கினதும் எல்லா மறந்துடும். மறக்காம அந்த டிக்கெட்டை¨யும் எடுத்து கடாசிட்டா பிரச்சினையில்லைதான். ஆனா, யாரு ஞாபகம் வெச்சுக்கிறது? அஞ்சு ரூபா டிக்கெட் வாங்கிட்டு சைதாப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் போனாலே பிரமாதமான சைஸ்ல கெட்டியான கடிதாசியில டிக்கெட் தர்றானுங்க நம்ம லல்லுவோட சிஷ்யனுங்க. ஆனால், நூத்து பத்து ரூவாய்க்கு மாயவரத்துக்கு டிக்கெட் வாங்குனாலும் இந்த மாதிரி மஞ்சள், பச்சை கலர் ஜிங்குசான்னு காத்துல பறக்குற மாதிரி ஒரு டிக்கெட்டை கொடுத்து அதையும் கஷ்டப்பட்டு ஒரு எட்டு மணி நேரமாவது பத்திரமா வெச்சுக்கிறது சாதாரண விஷயமா என்ன? ராத்திரி நேரத்துல அவசரத்துக்கு எங்க இறங்கினாலும் பாக்கெட்டை தொட்டு இருக்குதா இல்லையான்னு பத்திரமா பார்த்துக்கிட்டே இருக்கணும்.  தாம்பரம் வர்றதுக்கு முன்னாடியே எப்பவாது செக்கிங் இன்ஸ்பெக்டருங்க வேற நம்ம கோழி தூக்கத்தை கலைச்சுட்டு இந்த வஸ்து இருக்குதான்னு அதிகாலை நேரத்துலேயும் பொறுப்பா கடமையை கவனிப்பாங்க.

என்னதான் இண்டர்நெட்டு, கம்ப்யூட்டரு, தஸ்சு புஸ்சு இங்கீலசுக்காரங்க வந்தாலும் இதெல்லாம் மாத்த முடியாத சமாச்சாரம்னு நினைச்சு நானும் நொந்துகிட்டு டிக்கெட் வைச்சுக்கிறதுக்கு ஒரு இடத்தை தேடிக்கிட்டேயிருக்கேன். நல்ல இடமா தெரிஞ்சா நீங்களும் எனக்கு சொல்லுங்க பாஸ்!

No comments:

Post a Comment