Monday, July 26, 2004

சிங்கார சென்னை டூ சிங்கப் பெருமாள் கோயில்மதம் என்பதை வெறும் கோட்பாடாகவோ அல்லது கருத்தியலாகவோ கருதும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இல்லை. மதம் என்றாலே சடங்குகளும் நம்பிக்கைகளும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. ஓட்டு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகளுக்கோ மதம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.  உண்மையான நாத்திகம், மதத்தின் பெயரால் நடக்கும் சடங்குகளை விமர்சிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் மதத்தை விட நாத்திகம் நலிந்து போய்விட்டதாகத்தான் சொல்ல வேண்டும். மதத்தின் உள்ளார்ந்த தத்துவம் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு கோயில் என்பது மன நிம்மதியை அள்ளித் தரும் ஒரு ஸ்தலம் மட்டுமே. அப்படியொரு நிம்மதி தாம்பரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சல்லிசாக கிடைப்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சென்னைக்கு திரும்பும் வழியில் சிங்கப் பெருமாள் கோயிலை கடக்கும்போதெல்லாம் அரைத் தூக்கத்தில்தான் இருந்திருக்கிறேன். ஊருக்கு போகும்போதும் அப்படியே. மலைக்கோயில்னு பாரா ஸார் சொன்னதும் மெயின் ரோடிலிருந்து லோக்கல் பஸ், வேன் பிடித்து குறைந்த பட்சம் ரெண்டு வாய்க்கால் ரெண்டு மலையாவது தாண்டிதான் போக வேண்டியிருக்க வேண்டும் என்கிற நினைப்பு பஸ்ஸிலிருந்து இறங்கிய இரண்டாவது நிமிஷத்திலேயே பஸ்பமானது.  

மலையை மறைத்து கோட்டைச்சுவர் கட்டிக்கொண்டு ஜம்மென்று மெயின் ரோட்டுக்கு ரொம்ப பக்கமாகவே  சிம்பிளாக காட்சி தருகிறார் பாடலாத்ரி நரசிம்மர். மலையை குடைந்து கட்டிய கோயில் மாதிரிதான் தெரிகிறது. மெயின் ரோட்டுக்கு பக்கத்திலிருந்தும் கோயில் அநியாயத்துக்கு அமைதியாய் இருக்கிறது. திருவல்லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் மணிக்கணக்கில் நின்று நெருக்கியடிக்கும் கூட்டத்தில் நீந்தி சந்நிதிக்கு போய் ஆத்மார்த்த தரிசனமாக இல்லாமல் அவசர சடங்காக செய்யும் விஷயமெல்லாம் சட்டென மனசுக்குள் வந்து போகிறது. கூட்டமும் கூச்சலும் இல்லாமல் சென்னைக்கு வெகு சமீபத்திலிருக்கும் இதுவோ என்னைப்போலவே பலருக்கும் (முக்கியமாக சக கோயிந்தசாமிக்களான சுவடு ஷங்கருக்கும் கிருபா ஷங்கருக்கும்) ஆச்சரியங்களை அள்ளிக் கொடுக்கிறது. 

காலத்தின் கட்டாயம், கோயிலின் உள்தரையை மொசைக்கால் மொழுக வைத்திருக்கிறது. பச்சைமா மலைதான்னு நினைக்கிற மாதிரி எங்கு பார்த்தாலும் சந்நிதிக்குள்ளேயே துளசியின் படையெடுப்பு. பாராவின் உபயத்தால் பிரசாதமாக வந்த தோசையை பிய்க்கும்போதுதான் ஸ்ரீரங்கத்து ஞாபகம் வந்தது.

திருச்சிக்கு போகும்போதெல்லாம் அப்பா ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போவார். ஸ்ரீரங்கம், அப்பா பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவின் கைப்பிடித்து பிரத்யட்சனம் வந்தால் சக்கரத்தாழ்வார் சந்நிதி வாசலில் தோசை கிடைக்கும். ஆறிப்போய் காய்ந்து இருந்தாலும் தோசையில் கமகம வாசனைக்கு குறைவிருக்காது. தொட்டுக்கொள்ள என்று எதுவும் தேவையே இல்லை. மறக்காமல் ரெண்டு வாங்கி பத்திரமாய் பையில் மடித்து வைத்துக்கொள்ளும் அப்பாவை பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கும்.  அம்மா வார்த்த தேசை வேகாமலிருந்தாலே விசிறியடிக்கும் அப்பாவா இது!  இன்றைக்கும் திருச்சிக்கு போகும்போதெல்லாம் ஸ்ரீரங்கத்து தோசைக்கு அப்பா, ஆட்டோகிரா·ப் போட மறப்பதேயில்லை.

சிங்கப் பெருமாள் உறையும் கோயில், சின்னக் கோயில்தான். ஆனால், மலையோடு ஈஷிக்கொண்டிருக்கும் கோயிலும் வித்தியாசமான விஸ்தார பிரகாரமும் மனசை ஈர்க்கிறது. மலைக்கோயில் என்றாலே எனக்கொரு தனி கிரேஸ். எங்க ஊர்ப்பக்கம் இல்லாத சமாச்சாரம் என்பதாலோ என்னவோ!  ஆலமரத்தடி பிள்ளையாரிலிருந்து கெங்கையம்மன் கோயில் வரை எங்கும் நிறைந்திருக்கும் அதே சங்கதி இங்கும் உண்டு.  கல்யாணமாகாதவர்களுக்கும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் தொட்டில் கட்டினால் உடனடி பலன் உண்டாம்.  எல்லா செண்டரிலும் எடுபட்டாகணுமேன்னு ஐட்டம் வைக்கும் கமர்ஷியல் மசாலா டைரக்டரின் குயுக்தி!

திரும்பி வரும்போதும் நரசிம்மரின் தேஜஸ் மனசில் நிற்கிறது. பஸ் பிடிச்சு பேட்டைக்கு வந்து தண்ணீர் புடிச்சு துணி துவைச்சாக வேண்டும்!

இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோ கமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு தொலைநோக்குப் பார்வை ஜாஸ்திதான். இல்லாட்டா சென்னை மாதிரியான இந்திரலோகத்துக்கு போகவே மாட்டேன்னு ஜகா வாங்கியிருக்க மாட்டாரே!

No comments:

Post a Comment