Monday, November 08, 2004

பியர்லஸ் தியேட்டர்
மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

அரசியல்வாதிகள் வந்துபோகும் இடமாக இருந்து பின்னர் பஸ் ஸ்டாண்டாக மாறி, தற்போது சகலமுமாக (அதாவது சாக்கடை!) இருக்கும் நகரப்பூங்கா. அதற்கு எதிராக ஓடாத தண்ணீரோடு ஒரு சாக்கடை கால்வாய். கால்வாயின் கரையோரத்தில் பல ஹீரோக்களை பள்ளிக்கொள்ள செய்த இந்த தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருஷமாகப்போகிறது. எண்பதுகளின் வெள்ளி விழாப்படங்கள் இங்கேதான் வெளியாகின. திரிசூலம், சகலகலாவல்லவன், முந்தானை முடிச்சு, அம்மன் கோயில் கிழக்காலே, மனிதன், வேலைக்காரன், தளபதி, எஜமான், பாட்டி சொல்லை தட்டாதே, தேவர் மகன், பாட்ஷா, முத்து, படையப்பா... லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

சாதாரண நடிகர் நடித்த படம் கூட இரண்டு வாரம் ஓடும். தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில் பியர்லஸ் தியேட்டரில் படம் பார்ப்பதும் ஒரு சம்பிரதாயம். அப்படிப்பட்ட நாட்களில் கியூவில் நின்று அடித்து பிடித்து படம்பார்ப்பவர்களில் நிறைய பேர் வடகரை முஸ்லீமாக இருப்பார்கள். இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது அம்மா, அப்பா சகிதம் 'சகலகலாவல்லவன்' படம் பார்த்திலிருந்து 'படையப்பா' கடைசிநாள் கடைசிகாட்சி பார்த்தது வரை தியேட்டரோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்ப்பதே சுகமாக இருக்கும். பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளி நாளில் 'தளபதி'யை தரிசிக்கப் போய் கூட்ட நெரிசலில் சட்டையை கிழித்துக்கொண்டதை தீபாவளி நேரங்களில் அவ்வப்போது ஞாபகத்துக்கு வரும்.

இதுவரைக்கும் பலான படம் எதுவும் இந்த தியேட்டரில் ரீலிஸாகவில்லை என்பது ரொக்கார்ட். மேற்காணும் ஸ்டில் 'போஸ்' என்னும் புதுப்படம் ரீலிஸான ஒரு சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு எடுத்தது என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். எந்தப்படமாக இருந்தாலும் ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

இப்போதும் 'பியர்லஸ்' அப்படியேதான் இருக்கிறது. ஆனால், பார்க்க வருகிறவர்கள்தான் குறைந்து போய்விட்டார்கள். என்றைக்காவது ஒரு நாள் படம் பார்க்க என்றில்லாவிட்டாலும் தியேட்டரை பார்க்கவாது உள்ளே போய் பார்த்துட்டு வரணும்!

15 comments:

 1. நியாபகம் வருதே...நியாபகம் வருதே...நியாபகம் வருகிறதே...! 'அதிசயப்பிறவி' பார்க்க போன போது எதிரில் உள்ள இருட்டு மைதானத்தில் ஒரு படு பாதாள குழியில் அடிபட்டு, அப்படியும் விடாமல் ரத்தம் சொட்டச்சொட்ட தலைவர் படம் பார்த்த நியாபகம் வருதே...கல்லூரியின் கடைசி நாளில் கூட்டமாக பார்த்த 'காதலன்' படம் நியாபகம் வருதே!!

  ReplyDelete
 2. அன்பு ராம்கி,
  பியர்லஸ் தியேட்டர் என்னாலும் மறக்க முடியாத ஒரு தியேட்டர். சகலகலா வல்லவன்,போக்கிரி ராஜா, முந்தானை முடிச்சு, முதல் மரியாதை, மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன் போன்ற படங்கள் எல்லாவற்றையும் பியர்லெஸில் தான் பார்த்தேன். இன்னும் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்...இருப்பினும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் அவை! நல்ல தியேட்டர்...இருக்கைகளி கூட நன்றாய் பராமரிக்கப்பட்டிருக்கும்! எனது உறவினர் ஒருவர் அங்கே ஆப்பரேட்டராய் வேலை செய்ததால்...கேபின் வரை உள்ளே சென்று, பல படங்கள் பார்த்திருக்கிறேன். இந்ட்ய்கப் பதிவுக்கு நன்றி.

  - அழியா அன்புடன் அருண்

  ReplyDelete
 3. அப்படியே நடுவுல தூணுங்களாய் இருக்குமே, அந்த தியேட்டரைப் பற்றியும் எழுதுங்க ராம்கி,
  இப்படிக்கு,
  மாயவரத்து மருமகள்

  ReplyDelete
 4. சம்சாரம் அது மின்சாரம் - நான் பாத்த மொத படம். என்ன இருந்தாலும் கிருஷ்ணா பேலஸ் மாதிரி வராது :)))

  (அதாரு மாயவரத்து மருமகள்? உஷாவா?)

  ReplyDelete
 5. யாரது எங்க ஊரு மருமகள்...?! சுந்தரம் 'மில்' பத்தி எழுத சொல்றீங்களா?!

  அது என்ன சுந்தரம் 'மில்'..?! புது படம் ரிலீஸான உடனே ஒட்டுற போஸ்டரிலே, 'மாயுரம் சுந்தரம் தியேட்டரில்' அப்படீன்னு ஒட்டாம, 'மாயுரம் சுந்தரம்மில்..' என்று ஒட்டுவாங்க...அந்தக் காலத்திலே அத படிச்சிட்டு நான் அது என்ன சுந்தரம் 'மில்' அப்படீன்னு போட்டிருக்கு, அது தியேட்டர் இல்லையான்னு கேள்வி கேட்டிருக்கேன்..என்னோட பிரெண்டு ஒருத்தன் அது என்ன சுந்த 'ரம்'? அப்படீன்னு கேட்டான்கிறது வேற விஷயம்!அது யாருங்க 'உஷா'?! Mrs. Arun பேரு ரஷிதா அப்படீன்னு படிச்சதா நியாபகம்...அது Mrs. Arun செஞ்ச posting இல்லையா?!

  ReplyDelete
 6. சித்தர்காடு 'சத்தியமூர்த்தி', காளி 'வெங்கடேஸ்வரா' தியேட்டரையெல்லாம் விட்டுட்டீங்களே ராம்கி!

  ReplyDelete
 7. யோவ்..வேற வேலை இல்லையா...

  தியேட்டருக்கு கூட்டம் வரலைங்கிறதுதான் பெரிய கவலையா..??

  அது சரி...உமக்கு கவலை வர்றதுல நியாயமிருக்கு...:-(

  ReplyDelete
 8. சம்சாரம் அது மின்சாரம் - நான் பாத்த மொத படம். என்ன இருந்தாலும் கிருஷ்ணா பேலஸ் மாதிரி வராது =
  அனுப்புநர்: வாசன்

  மேலோட்டமாக பதிவுகளை பார்க்க வந்தேன்.ஊர் விடயங்கள்,ஆர்வமில்லாத தமிழ் சினிமா என்றாலும் கொக்கி போட்டு பதிலெழுத சொல்கிறது!!! பொறுத்துக்கொள்ளுங்கள் ராம்கி.

  பரி,சொன்னால் நம்ப மாட்டீர்கள்..நான் கடைசியாக கொட்டகையில் பார்த்த தமிழ்ப்படம் நீங்க சொல்லியுள்ள படம்தான்..!!
  86வது வருடத்தில் பியெர்லெஸில் போட்டிருந்தார்கள்.திருமணம் முடிந்து, உறவினர்களுடன் சேர்ந்து எங்காவது போக இங்கே போனோம்..

  ஐந்தாறு படங்கள் கோமதியில் பார்த்துள்ளேன்...சுந்தரம் கொட்டகையில்,தீ அல்லது நெருப்பு ங்கிற ரசினிகாந்த் படம் தீபாவளி அன்று பார்த்தது அப்ப பெருமையாய் இருந்தது!!
  மேனேஜர் உறவினர்.

  சீர்காழி 4 இஸ்டார் கொட்டகை ரொம்ப தமாஷாய் இருக்கும்..4வது கீழ் ஸ்டார்..சிமெண்ட் தரை..காலை படங்கள் பத்து படம் பார்த்திருப்பேன்..35 காசு டிக்கெட்..
  2தடவை ரஷ்ய படம் போட்டான்கள்..ஒரு எழவும் யாருக்கும் புரியலை..இடைவேளைக்கு பின் படம் ஆரம்பித்தால் சிகப்பு கொடியை நட்டுவிட்டு ஒரு ஆள் மண்டையைப் போடுகிறான்..அவ்வளவுதான் படம் முடிந்தது..கொடுத்த காசுக்கு இன்னும் 1 மணி நேரமாவது படம் வேண்டாமான்னு சொல்லிக் கொண்டு மெதுவாக கூட்டம் கலைந்தது..லோரல்-ஹோர்டி படத்தின் டப்பாவை மாற்றிப் போட்டார்கள், ஒருதடவை.பாதியில் ஆரம்பித்து,ஆரம்பத்திற்கு சென்று ஒருவழியாக முடிந்தது.

  இன்னொன்று:

  தரை டிக்கெட்டில் வெற்றிலை பாக்கு எச்சிலை துப்ப சில மணல் கொட்டிய சிமெண்ட் தொட்டிகள் இருக்கும்..ஒருதடவை படம் ஆரம்பிக்கும் முன் கதவிற்கு முன் ஒரு தொட்டியை நகற்றி வைத்தார்கள் 3 உருப்படாத தென்பாதி பொடி(தடி)யன்கள்...பளிச் வெயிலில் வந்த ஒரு ஆள், திரை முடிய இருட்டில் கண்தெரியாமல் சொதக் என்று தொட்டியில் காலை வைத்துவிட்டு," எவண்டாவன்ன்#@^^&* மற்றபிற கீழத்தஞ்சை செம்மொழியில் கத்திவிட்டு காலை கழுவ ஓடினான்...

  போதும்..

  ReplyDelete
 9. நான் பியர்லஸில் பார்த்த படம் - கமலின் தூங்காதே தம்பி தூங்காதே. ரஜினியின் எந்தப் படத்திற்கோ போட்டியாக எடுக்கப் போய், ஊத்திக்கொண்ட படம் (அந்தக் கால அளவு படி). ஆனாலும் பியர்லஸ் தியேட்டரில் நல்ல கூட்டம் இருந்தது. மற்ற தியேட்டர்களைவிட கொஞ்சம் விஸ்தாரமான தியேட்டர்.

  போஸ் மாதிரியான டப்பா படங்களை விசிடியில் பார்க்கவே மக்கள் யோசிக்கும்போது தியேட்டருக்கு எப்படி வருவார்கள்.

  - அலெக்ஸ்

  ReplyDelete
 10. மாயவரத்தான் - 'தளபதி' மேட்டரை எழுதி கொஞ்ச நஞ்ச குக்கரையும் குறைச்சுக்கணுமான்னு ரொம்ப யோசிச்சேன். ஹை, நீங்களும் நம்ம கட்சிதானா?!

  அருண் - பல படங்களை கேபினிலேயே பார்த்துட்டு அரண்டு போய் அப்படியே ஓடி வந்திருக்கேன்னு சொல்லுங்க!

  உஷா - மேடம், கேள்விய பார்த்தாலே தெரியுது, கல்யாணத்துக்கு அப்புறம் உங்க 'சிங்கம்' கூட சினிமா பார்க்கப்போன முதல் தியேட்டர் அதுதானா?

  'வேலைக்காரன்' என்கிற ஒரே ஒரு படம்தான் இதுநாள் வரைக்கும் மயிலாடுதுறையில் ஓரே சமயத்தில் வெவ்வேறு ரெண்டு தியேட்டர்களில் வெளியாகி சக்கைப்போடு போட்டதுங்கிறத சங்கதி மூக்கனுக்காக!

  பரி - கிருஷ்ணா பேலஸ்தான் புடிக்குமா? பார்ட்டி பலே (பலான?) ஆளுதான்னு புரிஞ்சுபோச்சு!

  வாசன் - சுந்தரத்தில் நீங்க பார்த்தது 'தீயை'. 'நெருப்புன்னு' ஒரு டப்பிங் படம் இருக்கு. அதை பார்த்தீங்கன்னா அதுக்கப்புறம் தமிழ் படங்களையே பார்க்க மாட்டீங்க!

  அலெக்ஸ் பாண்டியன் - போஸ் எப்படிப்பட்ட படம்னு எனக்கு தெரியாது. இருந்தாலும் ரீலிஸான அன்னிக்கே இப்டியா? எப்படி இருந்த தியேட்டர் இப்படி ஆயிடுச்சே!

  ReplyDelete
 11. நீங்க என்ன நினைக்கிறீங்க? (ஆங்கிலம், தமிழ் யூனிகோடு அல்லது டிஸ்கியில் நேரடியாக

  ReplyDelete
 12. Ramki....appdiye....BCC pathi ezhuthunga.

  ReplyDelete
 13. சவால்

  என்ற படம் இந்த தியேட்டரில் ரொம்ப நாளாய் ஓடிக்கொண்டு இருக்கிறதே , ஞாபகம் இருக்கா உங்களுக்கு ?

  ReplyDelete