Friday, December 03, 2004

மொட்டை

ஏர் பிடித்த உழவன் மாதிரி லாவகமாக கத்தியை வைத்து சரசரவென்று இழுத்து போய்க்கொண்டே இருப்பார். தலையிலிருந்து பொத் பொத்தென்று முடிக்கற்றைகளாக தரையில் விழும். கூடவே கண்ணீர் துளிகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் அசெளகர்யமாக இருக்கும். நாலே நிமிஷத்தில் 'முடிஞ்சுடுச்சுப்பா'ன்னு சொல்லும்போது இன்னும் கொஞ்சம் இழுக்கக்கூடாதான்னு சின்னதா ஒரு ஏக்கம்! சட்டையில்லாத உடம்பில் ஒட்டிக்கொண்ட முடிகளை தட்டி தூக்கிவிட்டுவிட்டு நிற்பவரிடம் சில சில்லறைகளை(?) நீட்டுவார் அப்பா. சோகமாய் சட்டையை சுருட்டிக்கொண்டே அப்படியே நடத்தியே அழைச்சுக்கிட்டு கோயில் குளத்தை நோக்கி நடக்கும்போது இப்பவே குல்லா வாங்கி தரமாட்டாரான்னு தோணும். ஆனா, மனுஷன் வாயே திறக்காம குளத்துக்கு போய் மிச்சம் மீது இருக்கும் டவுசரையும் கழட்டி விட்டு பொம்பளைங்க முன்னாடியே குளத்தில் இறங்கி குளிக்கச் சொல்வார். முங்கி எழுந்து வந்ததும் கையோடு கொண்டு வந்திருக்கும் அரைச்ச சந்தனத்தை தலையில்.... தடவ மாட்டார், சின்னதம்பி பிரபு மாதிரி மொட்டைத் தலையையே மிருதங்கமாக்கிவிடுவார். சந்தனத்தின் குளிர்ச்சியும், கொஞ்ச நாளைக்கு எண்ணெய் தடவி தலையை சீவ வேண்டாமே என்கிற நினைப்பும் சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா, அடுத்த நாள் ஸ்கூலில் சக மாணவியர்கள் முகத்தில் வரும் நமுட்டுச் சிரிப்பை பார்க்கும்போது முகமே பேஸ்தடிச்சு போய்டும்!

ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் மொட்டை ஒரு இனிய அனுபவம்தான். மொட்டை என்கிற சடங்கு சரியா, தப்பான்னு தெரியலை. இந்து மதம் என்றில்லாமல் மற்ற மதங்களிலும் நேர்த்திக்கடனாக மொட்டை போடுவதில் ஏதோ சைக்காலஜிக்கல் காரணம் இருக்கும்னுதான் நினைக்கிறேன். மொட்டை அடிப்பது இப்போ கொஞ்சம் காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது. கலோக்கியலா பேசும்போது மொட்டையடிக்கிறது என்பதற்கே வேற அர்த்தம் வந்துவிட்டது. சின்ன வயசில் நிறைய தடவை மொட்டை போட்டிருக்கேன் (போடும்படி ஆக்கப்பட்டிருக்கேன்!). வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பிச்சு, பழனி, சமயபுரம்னு எட்டாங்கிளாஸ் வர்றதுக்குள்ளேயே நாலு மொட்டை. நாடு இருக்குற இன்றைய நிலைமையில முக்கியமான மொட்டையாக நான் நினைக்கிறது நாகூரில் அடிச்சதைத்தான். லேட்டஸ்ட் மொட்டை, போன வருஷம் திருப்பதியில் 'கவனிச்சு' போட்டது! திருப்பதியில் மட்டும் ஏன்தான் மொட்டையடிச்சதும் சந்தனம் தடவ மாட்டேங்கறாங்களோ தெரியலை! கடலூர் பக்கம் கெமிக்கல் கம்பெனியில் வேலைசெய்யும் என்னோட ·பிரண்ட், முடியிலிருந்துதான் நிறைய கம்பெனியில் பிஸ்கெட் தயாரிக்க புரோட்டீன் எடுக்கிறாங்கன்னு ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு 'உவ்வே' வரவழைச்சான். எத்தனையோ கேள்விகளை ஆனந்த விகடனில் மதனிடம் கேட்டிருந்தாலும் இன்னும் என் நண்பர்களின் ஞாபகத்திலிருக்கும் ஓரே கேள்வி...

'மொட்டையடித்தால் மீசையையும் எடுக்க வேண்டுமா?'

'லேடீஸ் என்றால் அவசியமில்லை!''ப்பூ.... வலைப்பூ ஆரம்பிச்சு இன்னியோட ஒரு வருஷமாச்சே! இன்னிக்கு பார்த்தா இப்படியொரு மேட்டர் எழுதறது?!'

6 comments:

 1. ஒரு வருஷம் ஆச்சா..?! வாழ்த்துக்கள்..! ஒரு வருஷத்திலே உருப்படியா எழுதினது எவ்வளவுன்னு கணக்கெல்லாம் எடுத்து உட்டுடாதீங்க...அப்புறம் எனக்கு ஒரு வருஷம் ஆகும் போது கஷ்டமாயிடும்.

  - மாயவரத்தான்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ராம்கி!!
  ..aadhi

  ReplyDelete
 3. Saw your question in Thuglak dated Dec 1, 2004 - Nalliravu Kaithukal Thevaiyaa? Thanks, PK Sivakumar

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராம்கி!

  மொட்டைன்னதும் எனக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்கு. எப்ப இந்தியா வரேனோ அப்ப!

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 5. நன்றி பிகேஎஸ், துளசி, ஆதி. எல்லோருக்கும் நன்றி. மயவரத்தானே... நான் கணக்குல ரொம்ப வீக். அதுலேயும் இப்படியொரு கணக்குல ரொம்ப ரொம்ப வீக். பயப்படவே பயப்படாதீங்க!

  ReplyDelete