Wednesday, December 22, 2004
காலத்தின் கோலம்
எமர்ஜென்ஸி வார்டில் இருக்கும் பேஷண்ட் மாதிரி இழுத்து கட்டிவிட்ட மப்ளரையும் மீறி வரும் கடுங்குளிரை தாங்காமல் அப்படியே போர்வையை உடம்பில் சுத்திக்கொண்டு அம்மாவோடு களமிறங்கி, காய வைத்த காபி பொடியை தூவி விட்ட காலமெல்லாம் நினைவுக்கு வருகிறது. கோலம் போடுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சின்ன வயதில் குடியிருந்த தெருவில் சொற்ப வீடுகளென்றாலும் எல்லோருடைய வீட்டிலும் கலர் கலரான கோலங்கள் காணக் கிடைக்கும். கலரில் கோலம் போடுவதற்கு அம்மாவுக்கு வராது. ஆனால், சிக்கலான மாவு கோலத்தையே மணிக்கணக்கில் சிரத்தையாக போடுவாள். பெரும்பாலான நாட்கள் கலர் இல்லாமல் மாவு கோலமாக இருப்பதால் சக நண்பர்களின் டெய்லி விசிட்டில் எங்கள் வீட்டு கோலம் வரவே வராது. எங்க அம்மா மாதிரி யாருக்கும் சிக்கலான கோலம் போட வராது என்று நான்தான் வலியப் போய் சொல்லி 'கொள்கை பரப்பு செயலாளர்' வேலை பண்ணுவேன். அதெல்லாம் அந்த காலம்.
கொஞ்ச காலத்தில் அந்த மாவு கோலத்தில் இருக்கும் ஆர்வமும் போய், மகள் போடும் கோலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் அம்மா. உடன்பிறப்புக்கோ முதல்நாள் ராத்திரியே பேப்பரில் பிராக்டீஸ் பண்ணிக்கொண்டு களத்திலிறங்குமளவுக்கு ஆர்வம். இப்போது குடியிருக்கும் தெருவில் யாருக்கும் கோலம் போடுவதில் பெரிதாக ஆர்வமில்லை. அதனால் போட்டியில்லாமல் ஏதோ பெயருக்கொரு கோலம். நாளைக்கு என்னவெல்லாம் மாறப்போகிறதோ?
மார்கழி ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் எங்க பேட்டையில் ஒரு கலர் கோலத்தை கூட கண்ணில் பார்க்க முடியவில்லை. போன வாரம் நங்கநல்லூர் போய்விட்டு பேட்டை திரும்ப ராத்திரி பதினோரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரி நேரத்திலும் சீரியல் பார்த்துவிட்டு தாய்க்குலங்கள் சிரத்தையாக கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ராத்திரியே 'முறைவாசல்' பண்ணி கோலம் போட்டுவிட்டு படுத்துவிடுவதுதான் சிட்டி ஸ்டைலாம்! கஷ்டப்பட்டு அம்மா போடும் கோலத்தை உடன்பிறப்பு கடைக்குட்டி பத்தே நிமிஷத்தில் சைக்கிள் விட்டு அழித்த காலம் நினைவுக்கு வருகிறது. சிட்டி அம்மாக்கள் போடும் கோலம் எப்படியும் பத்து மணி நேரமாவது இருக்குமே!
காலம் காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை விட்டுவிடாமல் இப்போதைய லை·ப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி பின்பற்றும் நம்மூர் சிட்டி அம்மாக்களை நினைத்தால் பெருமையாத்தான் இருக்குது!