Wednesday, December 29, 2004

கடலோர கிராமங்கள் - தற்போதைய நிலவரம்



கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலிருக்கும் முகாம்களில் உணவு, உடை, மருந்துகள் போன்ற உதவிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடைகளை பொறுத்தவரையில் ஏராளமாக குவிவதால் மேற்கொண்டு சேகரிப்பது....தற்போதைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். எனவே, அன்பர்கள் சேகரித்த பழைய ஆடைகளை ஆங்காங்கே வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் நேரத்தில் நானே வந்து வாங்கிக்கொள்கிறேன். இவ்வார இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துபின்பு நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்து இணைய நண்பர்கள் போன் மூலம் தங்களது அனுதாபங்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். நண்பர் பி.கே.சிவகுமாரின் உதவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆயிரம் பெட்ஷீட்கள் இணைய நண்பர்கள் சார்பாக கரூரிலிருந்து பெறப்பட்டு பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கடற்கரையோர கிராமங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இரண்டு நாட்களில் முழுமை பெற்றுவிடும்.

சீர்காழி பகுதியில் புதுக்குப்பம் என்ற கிராமத்தில் மீனவர் குப்பம் அழிந்ததால் 600 பேர் இறந்துவிட்டனர். பூம்புகாரை சுற்றியிருக்கும் மேலையூர், வாணகிரி போன்ற கிராமப்பகுதிகளிலும் வெகு சிலரே எஞ்சி இருக்கின்றனர். சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள கிழக்கு கடற்கரையோர கிராமத்தில் 500 மீட்டர் தொலைவிலிருக்கும் எல்லா இருப்பிடங்களும் அழிந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து சடலங்களையும் மீட்டுவிட முடியும் என்றே சம்பந்தப்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தற்போது போதுமான உதவிகள் கிடைத்துவருகின்றன. இதே நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று நம்பலாம்.

எனவே, இணைய நண்பர்கள் நிதியுதவி செய்வதற்கு கால அவகாசம் நிறைய இருக்கிறது. பத்து நாட்களில் நிஜமான நிலை தெரிந்து விடும். அதற்கு பின்னர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று நம்புகிறேன். இணைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.