Saturday, January 01, 2005

புத்தாண்டு தினத்தில் மீட்பு நடவடிக்கைகள்

இன்று புத்தாண்டு தினம் என்பதால் மீட்பு நடவடிக்கைகள் மெதுவாகவே ஆரம்பித்தன. சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரையிலான கடற்கரையோரங்களில் மீட்பு நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறைவு பெற்றுவிட்டன. அரசும் புணர் நிர்வாணப் பணிகளை ஆரம்பித்துவிட்டது. பகுதியில் உயிருடன் இருப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு ஆரம்பித்துவிட்டது. அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் ஷிப்ட் முறையில் டூட்டி போடப்பட்டுள்ளது. தற்போது தரங்கம்பாடியிலிருந்து வேளாங்கண்ணி வரையிலிருக்கும் பகுதிகளில் சடலங்களை மீட்பது மும்முரமாக தொடர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரத்தின் படி நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் மட்டும் 83 சடலங்கள் மீட்கப்பட்டு அங்கேயே எரியூட்டப்பட்டதாக தகவல். கடற்பரப்பில் முற்றிலுமாக புதைந்திருக்கும் சடலங்களை தோண்டியெடுப்பது அநாவசிய வேலை என்பதால் புதைந்தும் புதையாமலும் இருக்கும் சடலங்களை மட்டும் தோண்டியெடுத்து எரியூட்டுகின்றனர். இது தவிர கடலிலிருந்து சில சடலங்களும் கரையோரமாக ஒதுங்க ஆரம்பிப்பதுதான் புது தலைவலி.

கடலூர் பகுதியிலிருந்து வரும் செய்திகள் நேற்று நான்கு இலங்கையைச் சேர்ந்த சடலங்கள் கரையோரம் ஒதுங்கியதாக தெரிவிக்கின்றன. நாகை பகுதியில் மட்டும் 19 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு முகாமிற்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை பொறுப்பாளராக நியமித்துள்ளார்கள். பெரும்பாலான தமிழக அமைச்சர்கள் இங்கேதான் முகாமிட்டுள்ளனர். சாந்தஷீலா நாயரின் நேரடி கண்காணிப்பில் அரசு இயந்திரம் சுறுசுறுப்பாகவே இயங்குகிறது. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை.

உணவு, உடை விஷயங்களை தவிர்த்து சின்ன சின்ன உதவிகளில் எல்லோரும் கவனமெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கடைகளில் ஒரு ரூபாய்க்கு விற்கும் தேங்காய் எண்ணெய், ஐந்து ரூபாய் ரின் சோப், இரண்டு ரூபாய் ஹமாம் சோப் போன்றவற்றை வாங்கி மக்களுக்கு தர ஆரம்பித்துள்ளார்கள். உள்ளூரிலிருக்கும் முகாம்களுக்கு நானும் 50 தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ரூபாய் ஹமாம் சோப்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். சென்னையிலிருந்து பத்ரி தொடர்பு கொண்டார். பத்ரியின் மூலமாக குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய், குளியல் சோப்களை வாங்கிய எனது நண்பர் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்.

நண்பர் பி.கே.சிவகுமாரின் முயற்சியால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 1740 பெட்ஷீட்களுக்கான ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். இவற்றை கரூர் நகரத்துக்கு சென்று டெலிவரி எடுத்து வரவேண்டும். தற்போதைய சூழலில் புது துணிகள் குவிந்தாலும் முகாம்களில் அவற்றை பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வசதியில்லாததால் ஒரு வாரம் கழித்து விநியோகித்தால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே புதன்கிழமைக்கு பின்னர் டெலிவரி எடுப்பதாக கரூரிலிருக்கும் பி.கே.சிவகுமாரின் உறவினருக்கு தகவல் சொல்லிவிட்டேன். நாகையிலிருந்து வலைபதியும் நண்பர் அறுசுவை பாபுவும் அவரது பகுதிகளில் சில பெட்ஷிட்களை விநியோகிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

தன்னார் தொண்டு நிறுவனங்களும் உணவு, உடை தவிர மற்ற பொருட்களை வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று சில இடங்களில் தனியார் குழுக்களின் சார்பில் பூட்டுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் புது பாத்திரங்கள் வழங்கப்பட்டன. இருந்தாலும் தொடரும் சுனாமி பயத்தால் மீனவர்கள் தங்களது வழக்கமான இடங்களுக்கு சென்று சமைக்கும் அளவுக்கு மனதளவில் தயாராகவில்லை. சில இடங்களில் உணவு, உடைகளெல்லாம் வேண்டாம்; கட்டுமரங்கள் வாங்க உதவி செய்தாலே போதும் என்று உதவி கோர தொடங்கியிருக்கிறார்கள். உணவுகளை பொறுத்தவரையில் அசைவ உணவுகளை சாப்பிட்டு பழக்கப்பட்டு போனவர்களால் புளிசாதத்தையும் தயிர்சாதத்தையும் கிரகிக்க முடியவில்லை!

இன்று சீர்காழி-காரைக்கால் சாலையில் ஆக்கூரிலிருந்து ஆறு கிமீ தொலைவிலிருக்கும் சின்னங்குடி கிராமத்திற்கு சென்று வந்தேன். மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் தரங்கம்பாடியிலிருந்து காரைக்கால் வரையிலான பகுதிகளுக்கு நாளை சென்று வரலாம் என்றிருக்கிறேன். மதியம் பத்ரியை தொடர்பு கொண்டபோது கடல் அலைகளுக்கு தங்களது பாடப்புத்தகங்களை பறிகொடுத்த மாணவர்களுக்கு ஒரு வாரம் கழித்து புதிதாக பாடப்புத்தகங்களை வாங்கிக்கொடுக்கலாம் என்றார். ஆனால், மாலையே தமிழக அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு வந்துவிட்டது. அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளை அரசே தத்தெடுத்து புதிதாக காப்பகங்களை கட்டி பாதுகாத்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கணக்கிலிருக்கும் தொகை பற்றிய விபரங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். பணம் அனுப்பிய நண்பர்கள் தயவு செய்து மின்னஞ்சலில் எனக்கு விபரமாக தெரிவிக்கவும்.

Hemalatha, Chennai - Rs. 2500/-
Mayavarathaan - Rs.2000/-
By cash - Rs.2000/-
(don't know the name)
யளனகபக கண்ணன் - Rs. 5000/-

ஆக மொத்தம் ரூ. 11,500/-

இதுவரை செலவழிக்கப்பட்டவை பற்றிய விபரங்கள்

கார் வாடகை - 600/-
டீஸல் செலவு - 588/-
மருத்துவ செலவு - 360/-
பாய்கள் - 4000/-
தேங்காய் எண்ணெய், சோப் - 200/-
இதர செலவுகள் - 330/-
மொத்தம் - 6078/-

தற்போதைய கையிருப்பு - 5422/-

திரு. வாசன் அவர்கள் அனுப்பிய தொகையை தேவைப்படும்போது அவரது உறவினரிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். உஷா மேடம் அனுப்பிய தொகை இன்னும் எனது வங்கிக்கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. யாராவது விடுபட்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

5 comments:

 1. உங்களைப் போன்று இன்னும் சில ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் போதும்,தமிழகம் தலை நிமிர.கடல் கொந்தளிப்பின் இழப்புகளிலிருந்து மட்டும் என்றில்லை..
  கோவில் உண்டியல்களின் கோடி,கோடியாய் கொட்டுபவர்கள்,வைரகீரிடம் சாற்றுபவர்களிடையே உங்களைப் போன்று ஓரிருவர் தோன்றினாலும் நல்லது.

  நன்றி.

  ~வாசன்

  ReplyDelete
 2. வாசனை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 3. ராம்கி,
  டிஸ்போஸபிள் ஸிரிஞ்ச் களுக்குச் சில இடங்களில் பஞ்சம் இருப்பதாகக் கேள்வி. இதையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

  ReplyDelete