உதவி செய்வதையே கடமையாக நினைத்து சுனாமி துயர் துடைக்க ஓடோடி வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் தொனியில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. நேரில் பார்க்கும் மனிதர்களே நம்மீது நம்பிக்கை வைக்காத காலத்தில் நேரடியாக அறிமுகம் ஆகாவிட்டாலும் என்மீது நம்பிக்கை வைத்து, வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை நிவாரண நிதியாக அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தவும் மறந்துவிடாத இணைய அன்பு உள்ளங்களுக்கு நன்றி சொல்வது அவர்களை கெளரவப்படுத்தும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. சுனாமிக்காக போய்வந்த பகுதிகளை பற்றியே இன்னும் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அதையெல்லாம் எழுத மறந்தாலும் பரவாயில்லை; உதவிகரமாக இருந்தவர்கள் பற்றி எழுதாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. இதை தயவு செய்து யாரும் 'நன்றி'யாக எடுத்துக்கொள்ளவேண்டாம். 'திரும்பி பார்க்கிறேன்' என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்!
சுனாமி வந்த சென்னை மாநகரத்தின் அந்த கறுப்பு ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே என்னுடைய செல்பேசி...பிஸி. சுனாமியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய லாபம், நண்பர் வட்டாரம் நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய அளவில் விரிவடைந்ததுதான்.
பத்ரி சேஷாத்ரி - மனிதர் அநியாயத்துக்கு ஆல்ரவுண்டராக இருக்கிறார். சுனாமி பாதிப்புக்குள்ளான நேரத்தில் லேப்டாப்பையும் செல்போனையும் கீழே வைக்கவில்லை. இந்தியா என்றில்லாம் இலங்கை, இந்தோனேஷியா சுனாமி தாக்குதல் பற்றியெல்லாம் சொல்லி பெரிய அளவில் நிவாரணப் பணிகளைச் செய்தவர். மணிக்கொரு தரம் போன் செய்து நிலைமையை கேட்டு சில ஆலோசனைகளையும் சொன்னவர்.
பி.கே.சிவகுமார் - ஒரு சாயங்கால நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு 30 பெட்ஷீட்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக சொன்னவர், மணிக்கொரு தரம் தொலைபேசி சொன்ன பெட்ஷீட்களின் எண்ணிக்கை பங்கு சந்தை மாதிரி தாறுமாறாக எகிறியது. விடியற்காலையில் பிகேஎஸ் சொன்ன கடைசி ஸ்கோர் 1740. இதையெல்லாம் ஓரே நாளில் ஏற்பாடு செய்ததுமில்லாமல் கரூரிலிருக்கும் தன்னுடைய உறவினரையும் தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து என்னுடைய வேலையையும் எளிதாக்கி இருந்தார். பி.கே.எஸ்ஸோடு கைகோர்த்த நண்பர்கள் குழுவில் நமது இணைய நண்பர்களான அருண் வைத்தியநாதன், கணேஷ் சந்திரா, காசி, மெய்யப்பன், நரேன், பரிமேலழகர், ஸ்ரீகாந்த், சுந்தர் பசுபதி, வாசன், வெங்கட் என எல்லோரும் அடக்கம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பெறுமானமுள்ள பெட்ஷிட்கள், 10000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் என இணைய நண்பர்களின் சுனாமி நிவாரண நிதி இதுவரை இரண்டு லட்சத்தை தாண்டியிருக்கிறது.
உஷா ராமச்சந்திரன் - பாதிப்புகள் பற்றி விபரம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட நாளிலிருந்து கேவிஆர் கல்யாண ரிஷப்ஷன் வரை சுனாமி பற்றி பேசும்போதெல்லாம் ஆர்வம் காட்டியவர். உஷா என்றாலே ஊக்கம் என்பது புது இணைய மொழி. இதை பின்னூட்டங்களில்லாத வலைப்பூக்கள் நிச்சயம் வழிமொழியும்.
ரோஸா வஸந்த் - சுனாமி நிவாரணப் பணிகளை வெறும் விவாதங்களோடு நிறுத்திவிடாமல் அதை ஒருங்கிணைத்து நிரந்தரமாக ஒரு விவாதக்களத்தை ஏற்படுத்தியதுடன் எங்கேயோ ஜப்பானிலிருந்து கொண்டு சுனாமி பற்றிய விபரங்களை கேட்டு இன்றும் தனிமடலில் தொடர்பு கொண்டு விசாரிக்கும் வித்தியாசமான ஜீவன்.
ராஜேஸ்வரன் - மயிலாடுதுறை நகரத்தின் முக்கியமான காண்டிராக்டர். ரஜினி மன்ற பொறுப்பாளர். சொந்த வேலையையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை கூட்டிக்கொண்டு என்கூடவே இருந்து சுனாமி நிவாரணப்பொருட்களை பிரித்து, அடுக்கி, ஏற்றி... என எல்லா வேலைகளையும் இரவு பகல் பாராமல் செய்தவர்.
முருகையன் - என்னுடைய சைதாப்பேட்டை ரூம்மேட். நிவாரணப் பொருட்களுக்கு கொஞ்சம் தேவையிருக்கிறது. எடுத்துக்கொண்டு வரமுடியுமா என்கிற எஸ்எம்எஸ் செய்திக்கே ஏக சுறுசுறுப்பு காட்டி பெட்டியும் மூட்டையுமாக மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டில் வந்திறங்கி நிவாரணப்பணிகளில் உதவி செய்தவர். நண்பர்களை ஒழுங்குபடுத்தி தரங்கம்பாடி, காரைக்கால் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல உதவிகரகமாக இருந்தவர்.
தியாகராஜன் - மயிலாடுதுறை பஞ்சாயத்து ஆபிஸில் பொறுப்பான உத்தியோகம். சுனாமி நேரத்தில் 24 மணி நேர அரசுப்பணி. நாகை மாவட்டத்தில் எந்தந்த இடங்களில் என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை வானிலை அறிவிப்பு மாதிரி எனக்கு தெரிவித்துக்கொண்டிருந்தவர். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் என்னுடன் இணைந்து, மீட்பு பணியிலிருக்கும் தனது நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்து சரியானவர்களுக்கு பொருட்கள் சென்று சேர மூலகர்த்தாவாய் இருந்தவர்.
அண்ணாத்துரை - காமேஸ்வர கடலோரமாக வீடு. தலைஞாயிறு பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி. சுனாமி தாக்குதலுக்கு பின்னரும் ஊரைவிட்டு போய்விடாமல் அங்கேயே இருந்து நிவாரணங்களை செய்து வருபவர். யார் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர், யாரெல்லாம் நம்மை ஏமாற்றுகிறவர்கள் என்பதையெல்லாம் எடுத்து சொல்லி 'நாட்டு நடப்பை' நம்மிடம் விளக்கியவர்.
தேங்காய் எண்ணெய், சோப், பாய்கள் வாங்கி விநியோகம் செய்யவும் கரூரிலிருந்து பெட்ஷீட்களை எடுத்துக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கவும் நிதியளித்து உதவியவர்களிடமிருந்த ஓரே ஒற்றுமை. 'தேவைப்பட்டா.. சொல்லுங்க... அனுப்பி வைக்கிறேன்' என்று சொன்னதுதான்.
நிவாரண நிதி கொடுத்தவர்கள்:-
என்னுடைய கல்லூரித் தோழி திருமதி ஹேமலதா
எங்க ஊர் மாயவரத்தான்
யளனகபக மரத்தடி கண்ணன்
தோழி உஷா ராமச்சந்திரன்
கொள்ளிடம் வாஸன் பிள்ளை
என்றென்றும் அன்புடன் பாலாஜி
பெயர் வெளியிட விருப்பமில்லாத ஒருவர்
பத்ரி சேஷாத்ரி
சிங்கை ஜெயந்தி சங்கர்
சோமு குமார்
ஆரம்பத்தில் பழைய துணிகள் தேவைப்பட்டதால் நண்பர்களோடு களமிறங்கியிருந்தேன். 24 மணி நேரத்திற்குள் சைதாப்பேட்டை ரூமுக்குள் இருக்க இடமில்லாமல் ஆகிவிட்டது. தான் வேலை பார்க்கும் மகளிர் கல்லூரியிலிருந்து பழைய துணிகளை சேகரித்து ஒரு ஆட்டோவில் அனுப்பிவிட்டார் எனது கல்லூரித் தோழி ஹேமலதா. சென்னையிலிருக்கும் அமெரிக்க நண்பர் சுரேஷின் மனைவி ஷார்மிளாவோ இன்னொரு காரில் மூட்டை மூட்¨யாக துணிகளை அனுப்பிவைத்துவிட்டார். இதையெல்லாம் எடுத்து, பிரித்து பார்ஸல் சர்வீஸ் மூலம் ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
தத்தெடுப்பது குறித்து ஆர்வத்துடன் தனிமடல் அனுப்பிய எம்.கே.குமார், அவ்வப்போது நாகை பகுதி செய்திகளை தெரிவித்துக்கொண்டிருந்த அறுசுவை பாபு, இணையத்தளத்தில் சுனாமி நிவாரண நிதி குவிந்து கொண்டிருந்த நேரத்தில் எனக்கு லீவு கொடுத்து என்னுடைய பணிகளில் 'ரஜினி முலாம்' வந்துவிடக்கூடாது என்கிற வைராக்கியத்திற்கு துணை நின்று, தூர நின்று வேடிக்கை பார்த்த wwww.rajinifans.com நண்பர்கள்.....
தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை விசாரித்து ஆலோசனைகளையும் சொன்னவர்களின் லிஸ்ட் பெரிது. கவிஞர் வைத்தீஸ்வரன், தளபதி சத்தியநாராயணா, சி·பி வெங்கடேஷ், எஸ்.கே, ஐகாரஸ் பிரகாஷ், என்றென்றும் அன்புடன் பாலாஜி, பொயட் ராஜ்குமார், ஆசாத், கிரிதரன், சுரேஷ் கண்ணன், திருமலை, எல்லே ராம், அமெரிக்காவிலிருந்து பரி, அருண் வைத்தியநாதன், மூக்கு சுந்தர் பாங்காங்கிலிருந்து மாயவரத்தான், பெங்களூரிலிருந்து ஷைலஜா, கணேஷ். தனிமடலிலும் இணைய விவாத மேடையிலும் என்னை ஊக்கப்படுத்திய இணைய நண்பர்கள்....
எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் வந்த விசாரிப்புகளும், ஊக்கங்களும்...
90களில் வாசிக்க ஆரம்பித்த என் தலைமுறையினர்களுக்கு மாலன், சுதாங்கன், இரா.முருகன், பாரா, வெங்கடேஷ் போன்ற எழுத்துலக பிரம்மாக்களை பார்ப்பதும் அவர்களோடு உரையாடுவதுமே பெரிய விஷயம். சாதாரண வாசகனான என்னை ஏதோ இருபது வருஷம் பழகிய நண்பர் ஸ்தானத்தில் வைத்து சுனாமி சமயத்தில் அடிக்கடி செல்பேசி, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்னது....
ஊருக்கு வந்தும் கொஞ்ச நேரம் கூட வீட்டில் இருக்கமாட்டேங்கிறானே என்றெல்லாம் புலம்பாத அம்மா, பெட்ஷீட் மூட்டைகளை போர்வை, தரைவிரிப்பு என்று வகைவாரியாக பிரித்தெடுக்கும் வேலையில் என் நண்பர்களோடு தானும் சேர்ந்து கொண்டு உதவியதுடன் நோட்டும் கையுமாக அலைந்து பெட்ஷிட் கையிருப்பு பற்றி கமெண்ட்ரி கொடுத்த அப்பா, பரீட்சைக்கு படிக்கும் நேரத்திலும் உதவிக்கு வந்த உடன்பிறப்புகள்...
சோகமயமான சுனாமி நேரத்திலும் என்னை பரவசப்படுத்திய தருணங்கள் இவை.