கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக்கூடியவனாக நினைக்கப்பட்டிருக்கிறேன். பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார். ஆனால் ஓரே மாதிரிக் கேள்விகள். அல்லது ஓரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள். உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன். இப்போது பதில்களை எழுதிக் கொடுத்துவிடுவது அதனால்தான்.
- அசோகமித்திரன். நன்றி - நவீன விருட்சம்
எழுத்துலகில் அரை செஞ்சுரி அடித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் தன்னடக்கம்தான். என் மனைவி இதையெல்லாம் பார்த்தால் என்ன இது என்று அற்பமாக பார்ப்பாரே என்பதை முகபாவத்துடன் அவர் சொன்ன விதம் காலாகாலத்துக்கும் மறக்காது. அந்த நகைச்சுவையும், அலங்காரமில்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லும் நடையும் வாசகர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களையும் கவர்ந்திருக்கிறது. அசோகமித்திரன் நிச்சயம் ரைட்டர்ஸ் ரைட்டர்தான்!
ஏகப்பட்ட இரைச்சலின் பின்னணியில் அசோகமித்திரனை படிக்க வைத்ததும், அவரது முகத்துக்கு நேராக காமிரா ஆங்கிள் வைத்து சினிமாத்தனம் காட்டியதும் அம்ஷன்குமாரின் குறும்படம் கொடுத்த எரிச்சல். அசோகமித்தரன் கையெழுத்துப் போடும் ஸ்டைலிலேயே டைட்டிலை அமைத்தது வித்தியாசமான ஐடியா. ஆடியன்ஸ் எல்லோரும் குறும்படத்தை கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் துறுதுறவென்று இருந்த தனது பேரனை கட்டுக்குள்க் கொண்டுவருவதிலேயே அசோகமித்திரன் சிரத்தையாக இருந்தார்.
அசோகமித்திரனின் எழுத்துநடையிலேயே ஒரு மினி லெக்சர் கொடுத்து அசத்தியது சுந்தர ராமசாமி! இலக்கிய உலகத்தில் அபூர்வமான நேரம் அது. சு.ராவின் ஸ்டைலான எள்ளல் கொஞ்சம் தூக்கலாக இருந்தது என்கிற முணுமுணுப்புகளை ஒதுக்கிவிடலாம். எத்தனையோ முறை கமல்ஹாசன் என்கிற படைப்பாளியை பாராட்டியிருந்தாலும் பரஸ்பரம் ரஜினி என்கிற படைப்பாளியை பாராட்ட கமல்ஹாசனுக்கு இருக்கிற தயக்கத்தையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் ச்சும்மா!
அவசரமாக பேசினாலும் ஆழமாக பேசியது பால்சக்கரியா. மலையாளிகளை விட தமிழ்நாட்டுக்காரங்க எவ்வளவோ மேல் என்கிற ரீதியில் அவர் எழுதியிருந்த காலச்சுவடு கட்டுரைதான் ஞாபகத்துக்கு வந்தது. அசோகமித்திரனின் 'தண்ணீர்' பற்றி அழகான ஆங்கிலத்தில் பேசினார். அடிக்கடி சென்னை தண்ணீரை விரும்பி வாங்கி குடித்தார்....அபூர்வ பிறவி!
அசோகமித்திரன் டீ மட்டும்தான் சாப்பிடுவார்; சுந்தர ராமசாமி காபி மட்டுமே சாப்பிடுவார் என்கிற அதிமுக்கிய பிரத்யேக தகவ¦ல்லாம் கைவசமுண்டு. எழுதினால் அடிக்க ஆள்வரும் என்பதால் எஸ்கேப்பாகிவிடுகிறேன். நேரமில்லாததால் ஞானக்கூத்தனின் கவிதைக்கான பொழிப்புரை கிடைக்கவில்லை. மேடையிலிருந்த பரபரப்பில் கவிஞர் வைத்தீஸ்வரனின் பேச்சையும் கவனிக்க முடியவில்லை. ஆறு மாதங்களாக தேடிக்கொண்டிருந்த அழகிய சிங்கர் வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டார். நிறைய இணைய தலைமுறையை பார்த்தில் வந்த ஆச்சர்யம் அவரது முகத்தில் மிச்சமிருந்தது. கூடிய சீக்கிரம் இணைய தலைமுறைக்கு நவீன விருட்சமும் வழிகொடுக்கும் என்று நம்பலாம்.
பாராட்டு விழா நடக்கும் நாளில் அசோகமித்திரன் பற்றி 'கதாவிலாச'த்தில் வந்தது, நம்மைப் போலவே எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் ஆச்சர்யம்தானாம். உருவத்திலும் பேச்சிலும் படு இளமையாக இருக்கிறார் பிரபஞ்சன். இரா.முருகன், வெங்கடேஷ், சோம. வள்ளியப்பன் தலைமையில் இணைய நண்பர்கள் ஒருபக்கம். வழக்கம்போல பிரகாஷ்ஜி, சுரேஷ்ஜி, சித்ரன், சுவடு ஷங்கர் எல்லோரும் ஆஜர். புதிதாக அறிமுகமான டோண்டு ராகவனையும் உருப்படாதது நாராயணணையும் (என்ன தலைப்பைய்யா அது?) நேரில் பார்த்தது கூடுதல் போனஸ். எதிர்பார்த்திருந்த முக்கியமான இணைய நண்பர்களை காணவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு கிழக்கு பதிப்பகத்தில் அர்ச்சனை ஒன்று காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறியத்தருகிறேன்.
நிகழ்ச்சி ஆரம்பித்து கவிஞர் வைத்தீஸ்வரன் எல்லோரையும் வரவேற்றுப் பேசியதும் ஒரு பத்துப் பேர் பின் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அடுத்துப் பேச வந்தது காலச்சுவடின் கர்த்தா. திடீர் விருந்தினர்கள், சு.ராவின் பேச்சிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் காட்டி உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். சு.ரா பேசி முடித்து மேடையை விட்டு கீழிறங்கி உட்கார்ந்து கொண்டதும் பின்வரிசையே காலியாகிவிட்டது. டயமாயிடுச்சுன்னு கிளம்பிட்டாங்களோ என்னவே?!
கொசுறு - எளக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு இன்னும் யாராவது சொல்லிட்டு இருக்காங்களா?!