மாயவரத்தில் வெங்கட்ராமன் டாக்டரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதுவும் திவான்பகதூர் தி.அரங்கச்சாரியார் தேசீய மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்களுக்கு அந்த குள்ளமான, குண்டான உருவமும் கீச்சு குரலையும் மறக்கவே முடியாது. சின்னவயதில் உடம்பெல்லாம் ஊதிப்போய் புசுபுசுவென்று என்ன வியாதியென்றே தெரியாமலிருந்த எனக்கு ஏதோதோ ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த நிமிஷம் வரை உயிரோடு இருக்க காரணமாக இருக்கிறவர். எந்த வியாதிக்கும் ஊசியை கையிலெடுக்காத டாக்டர்; ஆனால் சாதாரண காய்ச்சலுக்கே கூடை நிறைய மாத்திரையை எழுதிக்கொடுத்து பர்ஸை காலி பண்ணுகிறவர். ஸ்கூலுக்கு டோனேஷன் கொடுக்க வசதியில்லாதவர்களுக்கு பிரிஸ்கிரிப்ஷன் பின்னாடி அவர் கிறுக்கி எழுதி தருவது நேஷனல் ஹைஸ்கூல் அக்கெளண்டடுக்கு நன்றாக புரியும். கிளினிக், ஸ்கூல் தவிர அவ்வப்போது லயன்ஸ் கிளப் அலுவலகத்திலும் அன்னாரை நான் பார்த்ததுண்டு.
நிறைய பேருக்கு தெரிந்த நல்ல டாக்டர்தான். ஆனால் தெரியாத விஷயம், முப்பது கண் பார்வையற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் நடத்தும் காப்பகம்தான். புதுத்தெருவிலிருக்கும் தருமபுர ஆதினத்தின் கட்டடித்தில்தான் காப்பகம் இருக்கிறது. முப்பது பேருக்கும் கண்பார்வை சரிவர தெரியாது என்பதை தவிர பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்கிற ஒற்றுமையும் உண்டு. ஆறு வயதில் ஆரம்பித்து பதினெட்டு வயது வரை விதவிதமான பையன்கள். எல்லோரும் தவறாமல் ஸ்கூலுக்கு போய் படிக்கிறார்கள். போட்டிருக்கும் துணியிலிருந்து படிக்கும் ·பெரயில் எழுத்து புத்தகம் வரை எல்லாமே டாக்டரின் சொந்தப் பணம்தான். முப்பது பெட்ஷீட்களை கொண்டு போய் கொடுப்பதற்காக இரண்டு முறை அலைந்து டாக்டரிடம் பர்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. எதைக் கொடுத்தாலும், யார் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு.
காலை எட்டரை மணிக்கே இவர்களின் ஊர்வலம் ஆரம்பமாகிவிடுகிறது. ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். புதுத்தெரு, மாயூரநாதர் கீழ வீதி வழியாக நேஷனல் ஹைஸ்கூல். திரும்பவும் சாயந்திரம் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்தபடி மீண்டும் காப்பகம். ஆதரவற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு காப்பகம் நடத்துவது இன்னொரு பிழைக்கும் வழியாகிவிட்ட காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல், யாரிடமும் கையேந்தாமல் தனியரு மனிதராக காப்பகம் நடத்துவதற்கு நிறைய மனது வேண்டும். அக்கம்பக்கத்து மக்களும் தங்களது பிறந்தநாள், திருமணநாளன்று இந்த கண்பார்வையற்ற சிறுவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு விடாப்பிடியாக டாக்டரிடம் அலைந்து பர்மிஷன் வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.
கண்பார்வையற்றவர்களெல்லாம் சென்னையில்தான் அதிகமாக இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ரொம்பநாளாக உண்டு. எலெக்டிரிக் டிரெயின், பஸ்ஸ்டாப் என நிறைய இடங்களில் தட்டுத் தடுமாறும் இவர்களை சென்னையில்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. மூன்றில் இரண்டு பேராவது உதவி செய்ய ஓடி வருகிறார்கள். எதற்காக கஷ்டப்பட்டு பஸ் பிடித்து, ரயில் ஏறி அலைகிறார்களோ என்று சில சமயங்களில் கேட்கத் தோன்றும். நிறைய பேர் இப்போதெல்லாம் பிச்சையெடுக்கப் போவதில்லை என்பது ஆறுதலான விஷயம். கைவசம் ஏதாவது ஒரு தொழில் இருக்கிறது. அதேபோல பார்வையற்றவர்களை பார்க்கும்போது உச் கொட்டுவர்களெல்லாம் குறைந்திருக்கிறார்கள். அவர்களும் நம்மை மாதிரிதானே என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டதா அல்லது இரக்க மனப்பான்மையே போய்விட்டதா.. புரியவில்லை!
டாக்டரின் காப்பகத்திலிருந்து போது பழைய ஞாபகம். என்னோடு ஒன்பதாம் கிளாஸில் கொஞ்ச நாள் படித்த அந்த கண்தெரியாத நண்பருக்கு இந்த உதவிகளெல்லாம் கிடைத்திருந்தால் படிப்பை தொடர்ந்திருப்பார். அபாரமான ஞாபக சக்தி. சக மாணவன் பாடத்தை படிக்க படிக்க கிரகித்துக்கொள்ளும் மூளை. செலவு செய்ய ஆளில்லாத காரணத்தால் படிப்பு பாதியிலேயே நின்று போனது. இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் மோசமான நிலையில் இருக்க மாட்டார். எஸ்டிடி பூத்தில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அவர் ஞாபகம்தான் வரும். அப்படியே எங்கேயாவது உட்கார்ந்திருந்தால் கூட நாமாக பார்த்து அடையாளம் கண்டுகொண்டால்தானே உண்டு. உலகம் ரொம்ப சின்னதுதான். என்றைக்காவது ஒருநாள் என் கண்ணில் மாட்டாமலா போய்விடுவார்?