Tuesday, February 22, 2005

சுண்டுவிரலும் டொயோட்டோ காரும்

ராத்திரி நேரத்தில் நள்ளிரவு தாண்டி எ·ப் எம் கேட்பவர்களுக்கு இது ரொம்பவே பரிச்சயம். நேரம் ஆக ஆக வெறும் பாட்டை மட்டும் ஒட விட்டுவிட்டு தொகுப்பாளர் தூங்கப் போய்விடுவார். கே. பாலசந்தருக்கும் அப்படியொரு அலுப்பு வந்ததால் எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியின் கையில் லகானை கொடுத்துவிட்டு பதுங்கிப் போய்ட்டாரோ என்கிற சந்தேகம்தான், படத்தைப் பார்க்கும்போது வரும்.

வெளிநாட்டில் படம்பிடித்தது என்றாலே திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பித்தான் வைத்திருப்பார்கள் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை. ஆஸ்தான 'கதா' நாயகன் அனந்து இருந்தும் அதே கதைதான். சிங்கப்பூர், மலேசியாவை சுத்திச் சுத்தி படம்பிடித்திருக்கிறார்கள். இருபது நிமிஷத்திற்கு ஒரு பாட்டு வருவதால் நமக்கும் ஏதோ வெளிநாட்டு கச்சேரிக்கு வந்த ·பீலிங்க்ஸ். சிங்கப்பூர் மியூசிக் சபா நுழைவாயிலையும் பிரசாத் ஸ்டுடியோ உள்ளரங்கத்தையும் இணைக்கும் எடிட்டிங் வித்தைக்கு ஒளிப்பதிவாளரும், கண்டினியூட்டி பார்த்த அசிஸ்டெண்ட் டைரக்டருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாகவேண்டும்.

புதுமை இயக்குநர் என்று பெயர் வாங்கியிருந்தும் புதுமையே இல்லாத கே.பியின் படம். இளைஞர்களுக்கான படம் என்றதும் ஏதாவது நல்ல விஷயத்தை சொல்லுவார் என்று நினைத்தால் பாட்டையும் கூத்தையும் காட்டி ஏமாற்றியிருக்கிறார். தனது இரண்டு சிஷ்ய கோடிகளையும் செமத்தியாக வேலை வாங்கியிருக்கிறார். நடிப்பில் அல்ல... சிங்கப்பூர் தெருக்களில் அலைய வைத்து!




இயக்கம் - கே. பாலச்சந்தர்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள் - கண்ணதாசன்
நடிப்பு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்ரதா
படம் வெளியான ஆண்டு - 1979


படு பொருத்தமான கேரக்டரில் கமல்ஹாசன். கையில் மைக் சகிதம் காதலியாகிவிட்ட ரசிகையை நினைத்து ரெண்டு ரீலுக்கு ஒரு தடவை ஒரு பாட்டையும் மூணு ரீலுக்கு ஒரு தடவை தன்னுடைய சட்டையையும் அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறார். சினிமாவில் வரும் மேடைப்பாடகனுக்கே உரிய இலக்கணத்தை மீறிவிடவில்லை. ஒவ்வொரு தடவையும் ஹீரோயின் ஏமாற்றிவிட்டு போகும்போது அநாயசமாக வருகிறது நடிப்பு. ஹீரோயின் செய்யும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டு அடிவாங்கி அவஸ்தைப்பட்டு தன்னையும் குழப்பி நம்மையும் குழப்பி... கிளைமாக்ஸ் வரை எழுந்திரிக்க விடவேயில்லை!

டைட்டிலிலேயே 'தில்'லாக இளைஞர்களுக்கான இன்னிசை மழை என்று டைட்டில் போட்டுவிட்டுதான் ஆரம்பிப்பதால் படும் நெடுக மெல்லிசை மன்னரின் அதிரடி இசை. கூட்டணி கோரஸான 'யாதும் ஊரே' பாட்டாகட்டும் மெலடியான 'பாரதி கண்ணம்மா'வாகட்டும் கண்ணதாசன் - எம்.எஸ்வியின் கூட்டணியின் கடைசி மாஸ்டர் பீஸ் (?) களைகட்டியிருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்....', 'நம்ம ஊரு சிங்காரி' என ஆல் டைம் அசத்தலில் படத்தின் குறையெல்லாம் இசை வெள்ளத்தில் ஓரங்கட்டேய்!

குழப்பத்தையே குத்தகைக்கு எடுத்த மாதிரி கதாநாயகி 'சாயனோரா' ஜெயப்ரதா. அநியாயத்துக்கு கான்வென்டில் படிக்கிற குழந்தை மாதிரி இருக்கிறார். எதற்காக அந்த வில்லன் கோஷ்டி அவரை துரத்தி, துரத்தி வருகிறதுங்கிற காரணத்தை ஓரே வரியில் டயலாக்காய் கிளைமாக்ஸில் சொல்லும்போது நமக்கும் அதே ஸ்டைலில் தலையை ஆட்டத்தான் தோன்றுகிறது!

குறுந்தாடியுடன் ஜொள்ளு பார்ட்டியாக வலம் வரும் ரஜினியின் காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலம். காஸெட்டில் வரும் அன்பரே..... குரலை படித்துவிட்டு உற்சாகத்தில் காலை உயர்த்தி அந்தரத்தில் பரபரக்க வைக்கும் வேகமும் அட்ரஸ் புரியாமல் அலைந்து திரிந்து அப்பாவி முகம் காட்டும் சோகமும்.... அட! சிகரெட் தூக்கி போடும் ஸ்டைலையும் சென்டிமெண்டாக, உருப்படியாக உபயோகப்படுத்தி டொயோட்டா காரை விட சுண்டுவிரலே முக்கியம்னு யதார்த்தத்தை சுவராசியமாக சொல்லத் தெரிந்த டைரக்டரின் பலமான காட்சியமைப்பில் கர்ச்சீப் திருடுவது போலவே காமெடி நடிப்பிலும் நம்மை திருடிவிடுகிறார்.

படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே எதாவது ஒரு வகையில் மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகின்றன. சின்ன ரோலில் வந்தாலும் கீதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.வீ.சேகர் என் எல்லோருமே ரசிக்க வைக்கிறார்கள். உருண்ட விழிகளை படபடவென்று மூடித்திறந்து பகபகவென்று சிரித்து பயமுறுத்தி, ரஜினி வாய்பிளப்பது மாதிரியே நம்மையும் அசத்தலான நடிப்பில் அள்ளிக்கொள்கிறார் ஜெயசுதா. ரஜினியின் வழிசல், ஜெயசுதாவின் கடிஜோக்குகளுக்கு நடுவே காமிரா கவர் பண்ணும் சுவர் சித்திரங்கள் கவிதை ரகம். குடிபோதையில் மனைவியின் போட்டோவையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு ராத்திரி பூராவும் பாத்ரூம் பக்கெட்டில் கால்வைத்து ரணகளம் பண்ணும் 'மாமா' நடிகரும் மனசில் நிற்கிறார்.

கே.பியின் டச் இல்லாத படமென்றாலும் கே.பியின் சிஷ்ய பிள்ளைகள் கலக்கியிருக்கிறார்கள். கமலையும் ரஜினியையும் தனித்தனியாக நடிக்கவைத்து, திறமையாக வேலை வாங்கிய இயக்குநர் கே.பிக்கு இந்த படம் இனிக்க வைக்கும் நினைப்பாக இருக்காது. ·பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிஸல்ட் எப்படி? பாஸா? ·பெயிலா? படத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் நிச்சயம் ஹீரோயின் மாதிரி தலையை ஆட்டிக் காட்டுவார்கள்... யாருக்கு தெரியும்? சிவ சம்போ!