Monday, March 21, 2005

மொட்டை மாடி குச்சி

தூரத்தே தெரியும் பெரிய கோயில் கோபுரத்தை நோக்கி சாய்ந்து நிற்பது போல தோன்றினாலும் இன்னும் உறுதியாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த பச்சை வண்ணம் காணாமல் போய் பழுப்பு வண்ணம் வந்திருக்கிறது. மழையோ, புயலோ எது வந்தாலும் தாங்கிக்கொண்டு நாட்களைக் கடத்துகிறது. கடுமையான வெய்யிலில் வாடி வதங்கிய காலமும் உண்டு. ஆனாலும் நிலை குலைந்து சாய்ந்துவிடாமல் விடாப்பிடியாக இன்னும் நின்று கொண்டே இருக்கிறது.

Image hosted by Photobucket.com

சூரியனின் உதித்த நேரத்திலிருந்தே டியூட்டி ஆரம்பித்துவிடுகிறது. காக்கை, குருவிகள் இளைப்பாறி விட்டு இரை தேட உதவியாய் இருந்தாக வேண்டும். ஒரு காலத்தில் ஆண்டெனாவை ஏந்திக்கொண்டிருந்தது. காலப்போக்கில் கூரையை சுமந்து, பின்னர் துணிகளை காயவைக்கும் கொடிகளை இணைக்கும் வேலையை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் நான் கிறுக்கிய அபத்தமான கவிதைகளையெல்லாம் பக்கத்தில் நின்று பொறுமையுடன் படித்துக்கொண்டிருந்தவை. மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்து நட்சத்திரங்களை எண்ணியபோதெல்லாம் எட்டிப்பார்த்தவை. இரைச்சலோடு வரும் பிபிசி தமிழோசையை கேட்க இரவுப்பொழுதுகளில் கம்பீரமாக எனக்கு துணை நின்றவை. சுற்றிலும் காய்ந்து போன நிலங்களை மட்டுமே கண்டு கொண்டிருந்தவைகளுக்கு இப்போது கண்ணில் தட்டுப்படுவதெல்லாம் தன்னுடைய உயரத்துக்கு சமமான கட்டிடங்கள். கூரையை தாங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய் இப்போது தன்னை யாராவது தாங்கிக்கொள்வார்களா என்று கெஞ்சுவது போல தோற்றம். கடந்து போகும் பிணங்களையும், புது அழுகுரல் எழுந்து அடங்கும் வீடுகளையும் பார்த்தபடி இன்னும் அமைதியாகத்தான் நிற்கிறது.

மொட்டை மாடியின் குச்சிகள் இப்போதெல்லாம் என்னோடு பேச ஆரம்பித்துவிடுகின்றன, குறிப்பாக தூக்கம் வராத பேட்டை இரவுகளில். 'அடிக்கடி ஊருக்கு வந்துவிட்டுப் போய்ட்டு இருக்கியே.... மொட்டை மாடிக்கும் வந்து என் கூடவே கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போனாலென்ன' என்று கேட்பது போல பிரமை. பக்கத்தில் படுத்து ரிமோட்டை உருட்டிக்கொண்டிருக்கும் பேட்டை நண்பரிடம் பிரமைகளை பகிர்ந்துகொண்டால் புருவத்தை நெறித்து வித்தியாசமாக முறைக்கிறார். அடுத்த முறை போனால் மறக்காமல் மொட்டை மாடிக் குச்சிகளை கீழிறக்கி இளைப்பாற வைத்தாக வேண்டும். காக்கைகளின் கஷ்டத்தை நினைத்துப்பார்த்தால் குச்சிகளை காப்பாற்ற முடியாது. முடிந்தால், குச்சிகளின் மேல் சாய்ந்து வானம் பார்த்து இன்னொரு கவிதை எழுதவேண்டும்.