Wednesday, April 27, 2005

ஓசி, நீ வாசி

மைசூர் பஸ்ஸை விட்டு இறங்கி திக்கு தெரியாமல் அரைமணிநேரம் மெஜஸ்டிக்கையே சல்லடை போட்டு தேடிய பின்னர் ஒரு வழியாக மெளரியா ஓட்டல் பிளாட்பாரத்து வாசலில் கிடைத்தது அது. ஆனந்த விகடன்! முழுசா ரெண்டு நாள் ஆயிடுச்சே, தமிழ் பத்திரிக்கைகளை கண்ணால் பார்த்து. ஒரு வழியாக சென்னை செல்ல பஸ் கிடைத்து, வசதியாக ஜன்னலோரமாய் உட்கார்ந்து ஒரு முப்பது பக்கத்தை கடந்த பின்னர்தான் அந்த நினைப்பு வந்தது. சாயந்திர நேரத்து பெங்களூர் டிராபிக் நெரிசல்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமே...

நல்ல ஐடியாதான். புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். பெங்களூரை மிஸ் பண்ணலாமா? ஐடியாவை செயல்படுத்த ஆரம்பித்தேன். புத்தகத்தை மூடி பைக்குள் வைத்துவிட்டு நிமிரும்போதுதான் பின் ஸீட்டிலிருந்து வந்ததொரு குரல்.

'ஸார்... கதை புஸ்தகம் இருக்குதா?'

ஆஹா.. ஓசி பார்ட்டி! இது போன்ற ஆசாமிகளுக்கு எல்லா புஸ்தகமும் கதை புஸ்தகம்தான். எதையாவது வாங்கிப் புரட்டியே ஆகணும்.

'என்னது?'

கேட்டது புரிந்தாலும், புரியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டுதான் கேட்டேன்.

'உங்க கையில வெச்சிருந்தீங்களே ஒரு புஸ்தகம்... அதைக் கேட்டேன்'

'ஓ.. விகடனா?'

இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் கேட்டும் கொடுக்காத வள்ளல்கள் உலகத்தில் ஆயிரத்தில் இரண்டு பேர்தான் இருப்பார்கள்!

பஸ், எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை தாண்டி வேகமெடுக்க ஆரம்பித்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. எழு மணிக்குள்ளாகவே கண்டக்டர் பஸ்ஸின் எல்லா லைட்டையும் அணைக்க ஆரம்பித்தார். ஓசி பார்ட்டி அசரவில்லை. ஜன்னல் இடுக்குகளில் வழியாக வரும் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தது.

'சே... கையில் எளக்கிய புஸ்தகம் ஏதாவது வெச்சிருந்தா இவ்ளோ கஷ்டமாயிருக்காது.. போன வேகத்துல திரும்பி வந்துருக்கும்'

ஒரு கட்டத்துக்கு மேல் ஜன்னல் வெளிச்சமும் சதிசெய்ய ஆனந்த விகடனை சுருட்டி சீட்டின் இடுக்கில் வைத்துவிட்டு, தூங்க ஆரம்பித்துவிட்டது அந்த பார்ட்டி.

'இனிமே யாருகிட்ட இருந்தா என்ன.. அதான் லைட்டே இல்லையே'... மனசுக்குள் சமாதானம் செய்துகொண்டேன்.

கிருஷ்ணகிரி தாண்டி ரோட்டார மோட்டல். 'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ஸார்' அதே டயலாக். திரும்பிப் பார்த்தேன். பக்கத்து ஸீட்டில் பார்ட்டி அசந்து தூங்கிக்கொண்டிருந்தது. பத்து நிமிஷம் கரைந்தும் வண்டியை எடுக்காத டிரைவரை மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டே திரும்பிப்பார்த்தேன். சீட் இடுக்குகளிலிருந்து விகடனார் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

எடுக்கலாமா, வேண்டாமா...

என்னதான் நம்ம விகடனா இருந்தாலும் அடுத்தவன் ஏரியாவுக்குள் அனுமதி இல்லாமல் போய் கைவைக்கலாமா...

வேணாம், கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்...

கூல் டவுண்... கூல் டவுண்.. எத்தனை பேருகிட்ட ஓசி புஸ்தகம் வாங்கிட்டு வருஷக்கணக்கா திருப்பி கொடுக்காம இருந்திருக்கே... அதான் ஆண்டவன் சான்ஸ் கிடைச்சா அள்ளிப் போட்டு குத்திடறான்....

ஓசி புத்தகம் வாங்குறதும் தப்பு; கொடுக்கிறதும் தப்பு. மனசுக்குள் ஒரு அவசர தீர்மானம்.

மணி பதினொன்றரை. வண்டி வேலூரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

'சே... கதாவிலாசத்தையாவது ஆரம்பத்திலேயே படிச்சி முடிச்சிருக்கலாம்...

கண்டக்டர் பஸ்ஸிலிருக்கும் லைட்டையெல்லாம் எரியவிட்டுவிட்டு டிக்கெட் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். தூக்கமே வரவில்லை. பின் ஸீட் பார்ட்டியை எழுப்பி விகடனை திரும்ப வாங்கிடலாமா...

வேணாம், இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்...

வண்டி கிண்டியை நெருங்கிவிட்டிருந்தது. வேறு வழியேயில்லை. எழுப்பி கேட்டுவிடலாம்.

தலையை சாய்த்து தூங்கிக்கொண்டிந்தவரை தட்டியெழுப்பி விகடனை கேட்டேன். சீட்டுகளுக்கு நடுவே சிறைபட்டிருந்த விகடனாரை தேடி எடுத்து கையில் கொடுத்து, கடன் கேட்க வந்தவனை பார்ப்பது போல் அந்த ஓசி பார்ட்டி விட்ட லுக் மனதை என்னமோ செய்தது.

காசி தியேட்டரில் இறங்கி பேட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நல்ல வேளை எட்டு ரூபாய் விகடனை மிஸ் பண்ணாமல் இருந்தாமோ என்கிற சந்தோஷத்தை தலைகீழாக கலைத்துப்போட்டது மனசாட்சியின் குரல்.

'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'


Image hosted by Photobucket.com

கொசுறு - மைசூர் திப்புசுல்தான் கல்லறை தோட்டத்து வாசலில் நண்பரின் சுட்டிப்பெண். ஆளைப் பார்த்தால் கோமாளியைப் போல் இருக்கிறதோ என்னவோ... என் முகத்தை பார்க்கும் நேரமெல்லாம் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைக்கிறாள். காரணம்தான் புரியவில்லை. என்றைக்கு, எதுதான் நமக்கு ஒழுங்காக புரிந்திருக்கிறது?!

19 comments:

 1. அன்புள்ள ராம்கி,

  அட்டகாசம்!!! ரொம்ப நல்லா இருக்கு!

  என்றும் அன்புடன்,
  துளசி

  ReplyDelete
 2. //'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'//

  இது!

  ReplyDelete
 3. //'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'//


  Good One...

  ReplyDelete
 4. //'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'//

  Good one !...

  Thanks
  Maruthiah

  ReplyDelete
 5. ராம்கி, சாயங்காலமா ரூமுக்கு வரேன். கொஞ்சம் இந்த வாரக் 'குமுதம்' தரீங்களா, படிச்சுட்டு திருப்பித் தந்துடறேன். :-))

  ReplyDelete
 6. ராமரோட அணிலு!!

  thanks for the address!

  ReplyDelete
 7. Nalla ezhudheerukeenga

  ReplyDelete
 8. //'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'//

  30ரூவா சினிமா டிக்கெட்ட 300 ரூவாய்க்கு வாங்கும்போது எப்படி இருந்துச்சாம், அதையும் சொல்லு சொல்லு சொல்லு கண்ணா ஹா ஹா ஹா

  ReplyDelete
 9. கூல் டவுண்... கூல் டவுண்.. எத்தனை பேருகிட்ட ஓசி புஸ்தகம் வாங்கிட்டு வருஷக்கணக்கா திருப்பி கொடுக்காம இருந்திருக்கே... அதான் ஆண்டவன் சான்ஸ் கிடைச்சா அள்ளிப் போட்டு குத்திடறான்

  ReplyDelete
 10. அந்தச் சுட்டிக் குழந்தைக்கு இந்த விசயமெல்லாம் தெரியாதுதானே.

  ReplyDelete
 11. கோயிஞ்சாமிக்ளப்மெம்பர்1Thursday, May 12, 2005

  நன்றாக எழுதப்பட்ட மேட்டர்.

  ReplyDelete
 12. //என் முகத்தை பார்க்கும் நேரமெல்லாம் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைக்கிறாள்.//

  அந்தப் பொண்ணுமா???

  ReplyDelete
 13. ஹலோ அநாமதேயம், ஆண்டவன் புண்ணியத்துல இதுவரைக்கும் எந்தப்படத்துக்கும் பிளாக்குல டிக்கெட் வாங்குனதும் இல்லை; வித்ததும் இல்லை!

  மதி, தெரிஞ்சதான் அந்தப் பொடிசு நக்கலா சிரிக்குதோ என்னமோ?!

  பிரசன்னா, செம குசும்புதான். இருக்கட்டும், மேல்kindல வைக்கிறோம் ஒரு வேட்டு!

  ReplyDelete
 14. If you have saw chandramukhi review in vikatan, you would have thrown that book out of window

  ReplyDelete
 15. ´º¢ Òò¾¸õ «ÛÀÅõ ±ÉìÌõ ¯ñÎ ¿¡ý ¿¢ÉÉòÀÊ ¯í¸û «¨Á¾¢ ÁüÚõ àì¸õ §À¡Â¢üÚ
  8 åÀ¡ Òò¾¸ò¾¢ø ¯í¸û À½ò¾¢ý §À¡Ð þú¢ì¸ §ÅñÊ þÂü¨¸¨Â ÁÈóРŢðÎ Òò¾ì§Á!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!«ó¾ 8 åÀ¡À¡..................................
  Suriyan

  ReplyDelete
 16. Ramki,
  Idhe Madhiri oru anubavam enakkum erpattathu. Salem - Vaniyambadi. Iravu nera payanam. Kaiyil Vairamuthuvin "Thanner Dhesam". Vangina pudhusu. Konjaneramthan padichiruppen. Adhukkulle busla light off. Che.. ennada idhu nnu nonthugitte puthagathai moodi vechitten. konja nerathula conductor light on pannittu thaliai ennigittirukkar. Seri konjam padippamamennu aarambicha udane light off. Ippadiye oor poi serathukkulla ( almost 6 Hrs Journey) ennala muzhusa 3 pakkam kooda padikka mudiyalai. Intha anubavathathan naan en collegela naane ezhuthigittiruntha(kirukkigittiruntha) magazinela "Muzhusai padikka vidum nadathunare" nnu oru kavithai ezhuthinen.

  -Namakkal Shibi

  ReplyDelete