மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் மார்க்கமாக செல்லும் மக்களுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட இடம்தான். மாயவரத்துக்கு பழைய தஞ்சை மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாரூர் சுத்துவட்டார பகுதிகளில் இப்படியொரு பாலம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய 300 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் கொள்ளிடத்திலும், திருச்சியிலும் உள்ளதுபோல் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது அல்ல. மயிலாடுதுறை ஜங்ஷனை ஒட்டிய இடத்தில் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்காக கட்டப்பட்ட மெகா பாலம்.
இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மாணவமணி சாரங்கபாணியின் பெயரால் அழைக்கப்படும் இந்த மேம்பாலத்திற்கு வயது சரியாக முப்பது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட பாலம் கட்டுமாண வேலைகள், ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்திருக்கிறது. 5.2.1975 அன்று தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞரால் பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் பாலத்திலிருந்த சில விரிசல்கள் காரணமாக நான்கு மாதம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டபின்பு சுமைதாங்கி வேலையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அப்போது ஏழாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக்கொண்டே ஓட்டிவந்தால் காவேரி நகர் பஸ் ஸ்டாப் வரை போய்விட முடியுமா என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசை. ரோட்டோரமாய் நின்று கொண்டிருக்கும் லாரி சரக்கு போர்ட்டர்கள் எதிர்பார்த்த மாதிரியே எதிரே வந்த லாரிக்காரன் மீது சைக்கிளை மோதியதால் வாழ்க்கையில் புதிதாய் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
1. எசகுபிசகாய் எங்கேயாவது மாட்டிக்கிட்டா எப்படியாவது எஸ்கேப் ஆயிடணும்!
2. ஸ்கூல் கிரா·ப்ட் வாத்தியாரை விட ஜாஸ்தியான கெட்ட வார்த்தைகள் தெரிஞ்சவங்க உலகத்துல உண்டு!