Friday, June 10, 2005

இனி குமுதம்?

ஒரு ஹாட் மேட்டர்

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது. முப்பது வருஷங்களாக தக்கவைத்திருந்த நம்பர் ஓன் இடத்தை சில மாதங்களுக்கு முன் கோட்டை விட்டதிலிருந்தே குமுதம் வட்டாரம் இரும்புக்கோட்டையாகிவிட்டது. அடிக்கடி சினிமா ஸ்பெஷல். விஜயகாந்தோ, விஜயோ தொடர் எழுதினார்கள். மும்பையிலிருந்து கூரியரில் வந்த ஆல்பங்களில் இருந்த சப்பாத்தி சுந்தரிகள் குமுதத்தின் பக்கங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டன. விகடனாருக்கு பதிலடி கொடுக்க ஜெயமோகன்களும் முத்துக்குமார்களும் இயன்றதை செய்தார்கள். எரிகிற கொள்ளியில் எசகுபிசகாய் விழுந்த வெண்ணெய் மாதிரி குறுக்கே வந்த குங்குமம், தேசிய அளவில் டாப் 4க்கு போனது நிலைமையை இன்னும் இறுக்கியது. சின்ன சின்ன மாற்றங்கள் செய்தும் பெரிதாக ரிசல்ட் ஏதும் வராததால் இப்போது குமுதம் அதிரடியாய் களமிறங்குகிறது. கடந்த வாரத்திலிருந்து குமுதம் வட்டாரத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டதாக புரசைவாக்கம் பட்சிகள் தெரிவிக்கின்றன.

Image hosted by Photobucket.com

சம்மர் லீவிற்கும், ரஜினியை பேட்டி காணவும் இந்தியாவுக்கு வந்த எஸ்.ஏ.பி ஜவஹர் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்துகளின் முடிவில் சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக குமுதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த ராவ், தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. இனி குமுதத்தின் ஆசிரியர்களாக ப்ரியா கல்யாணராமனும் கிருஷ்ணா டாவின்ஸியும் பொறுப்பேற்க இருக்கிறார்களாம். மூன்று மாதங்கள் ப்ரியா கல்யாணராமனும் அடுத்து வரும் மூன்று மாதங்கள் கிருஷ்ணா டாவின்ஸியும் சுழற்சி முறையில் ஆசிரியர்களாக இருந்து குமுதத்தை வழிநடத்தப்போகிறார்களாம். பத்திரிக்கை வட்டாரங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டு வரும் இந்த இரட்டையர்களின் கையில்தான் குமுதத்தின் எதிர்காலம் இருக்கிறது. இனியாவது நயன்தாராவின் வாட்ச் பெரிதாக இருப்பது பற்றி யார் கவலைப்பட்டாலும் குமுதம் கவலைப்படாமல் இருக்கும் என்று நம்புவோமாக!