உதயம் தியேட்டர். அலுங்காமல் குலுங்காமல் கியூவில் நிற்காமல் டிக்கெட் வாங்கி இன்னொரு தடவை சந்திரமுகி தரிசனம். சென்னை தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு சந்தோஷமான தருணம் என்பதை நான்கு வருஷ சென்னை வாழ்க்கைக்கு பின்னர் ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை ராத்திரியில்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது. தேவுடா பாட்டின் ஆரம்பத்தில் வரும் அகிலா கிரேன் ஷாட், ராட்டினத்தில் இறங்குவது மாதிரியான ·பீலிங்கை வரவழைத்து வயிற்றை கலக்கியிருந்தது. 'உதயத்துக்கே இப்படியா? சத்யம், தேவி தியேட்டர் பக்கம் போய் பாரு' என்ற நண்பரின் ஆலோசனையை தீவிரமாக பரிசீலிக்கவேண்டும்!
இரண்டாவது முறை பார்க்கும்போதுதான் லகலக ஜோதிலக்காவை ஆரம்பத்திலிருந்தே கவனிக்க முடிந்தது. (எங்க ஊரு பக்கம் 'தடவை'ன்னு சொன்னாத்தான் பேச்சுத்தமிழ். படத்துல ஏகப்பட்ட இடத்தில் 'முறை'ங்கிற வந்து இம்சைப்படுத்தியது!) ஆரம்பத்தில் சந்திரமுகி தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு படமாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். தென்னிந்திய சினிமாவிலேயே முக்கியமான படமாகிவிட்டது. ஜோதிகா சாதாரணமாய் பார்த்தால் கூட ஏதோ பயமுறுத்தும் சங்கதியை கண்ணில் பார்க்கமுடிந்தது. டாக்டர் ராமதாஸ் கூட படம் பார்த்துவிட்டு ரொம்பவே பயந்துவிட்டாராம்! எதைப்பார்த்து பயந்தார் என்பதை பற்றி எல்லோரும் கொஞ்ச நாள் விவாதாம் நடத்தலாம். படத்தில் கமிட் ஆன இரண்டாவது நாளே தான் நடித்து தள்ளிய காட்சியாக பிரபுவிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியை ஜோதிகா தனது ஜெமினி டிவி இன்டர்வியூவில் சொன்னார். கங்கா, சந்திரமுகியாக மாறி பின்னர் திரும்பவும் கங்காவாக மாறும் சவலான காட்சிதான். ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ் சினிமாவுக்கு திறமையான நடிகை கிடைத்திருக்கிறார் என்று கே.பாலசந்தர் பாராட்டினாராம். குருநாதரின் குருநாதர் சொன்னதில் தப்பு லேது?
படம் ஆரம்பித்து சில நிமிஷங்களில் தட்டுத்தடுமாறி வந்தார் அந்த முன்சீட்டு ஆசாமி. வந்தவுடனேயே 'எப்போ போட்டான் படத்தை?' விசாரிப்பு. பார்ட்டி முதல்முறையா படம்பார்க்குதோங்கிற அக்கறையில் பக்கத்து சீட்டு ஆசாமியும் விலாவாரியாக விளக்க, எல்லாவற்றையும் கேட்டுவிட்டு 'அப்ப இனிமேதான் டைட்டில் போட்டு போடுவாங்க'ன்னு ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அந்த பக்கத்து சீட்டு ஆசாமிக்கு எட்டுல சனி. வந்தவர், படம் முடியறவரைக்கும் ஜோதிகா அடுத்து நடிக்கப்போற படத்துலேர்ந்து சந்திரமுகி செஞ்சிருக்கும் சாதனை வரை எல்லாத்தையும் குமுதத்தின் சினிமா ஸ்பெஷல் பிட் நியூஸ் கணக்காய் அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார். எங்க வேணும்னாலும் போய் உட்கார்ந்துக்கலாங்கிற எங்க ஊரு தியேட்டர் சங்கதியின் அருமை அப்போதுதான் எனக்கு புரிந்தது. 'எப்போ படம் போட்டான்?' 'மழை வருமா?', '23சி போயிடுச்சான்னு ஆரம்பிச்சு அருவா, பிளேடு, கத்தின்னு விதவிதமாய் பிரயோகிக்கும் ஆசாமிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது உண்மைதான். இப்போதெல்லாம் மனசாட்சி அடிக்கடி என்னுடன் மாட்லாடுகிறது.
'உனக்கென்ன... ஜோதிகா பத்தி கமெண்ட் அடிக்கணும்னு நாலு வரி தட்டு பிளாக்குல போட்டுடலாம்...நாள் பூரா வேலை செஞ்சுட்டு வூட்டுக்கு போறவன், மெட்டிஒலி மாமா போன சோகத்துல இருக்கும் வூட்டுக்காரியிடம் ஜோதிகா பத்தி கமெண்ட் அடிச்சா உடம்பு என்னாவறது?'