அரசியல் அரிச்சுவடி படிக்கும் கேப்டனை மறைந்து நின்று திகிலோடு பார்க்கும் பெரியார் வழிவந்த பெரிசுகள். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இளங்கோவன் வகையறாக்கள் மட்டும் மிஸ்ஸிங். முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருப்பது கார்ட்டூனில் வரவில்லையோ என்னவோ?! (ஆரம்பிச்சுட்டான்யா... நாயை குளிப்பாட்டி நடு வூட்ல வெச்சாலும்... புது மொழி ஏதாவது சொல்லாம்....அரசியல் வேணாம்னு சொன்னாலும் அடங்காத ராம்கி மாதிரி....ஹி..ஹி.. கரெக்டா கிருபா?) சரி, மேட்டருக்கு வருவோம். ரொம்ப நாளாவே 'வாசகர் கடிதம்' எழுதாம கை துறுதுறுன்னு இருக்குதா... அதான் களத்துல இறங்கியாச்சு!
கோடம்பாக்கம் இருக்கிறவரைக்கும் விகடனார் நம்பர் ஓன்னை தராளாமா தக்க வெச்சுக்கலாம். ஆ.வியில் சினிமா மேட்டர் தவிர வேற என்ன இருக்குதுன்னு கேட்டா பதில் சொல்றதுக்கு செளகர்யமா இருக்கும். நடிப்பு தம்பிகளை பத்தி ராஜாவும், செல்வராகவனும் உருகறாங்க. படத்துல மட்டுமல்ல பேட்டியிலும் குடும்ப 'படம்' தான். கல்யாணம் ஆவறதுக்கு முந்தி வரை மாமா ஒண்ணுமே தெரியாத ஆளா இருந்ததா கேப்டனோடு மச்சான் சொல்லியிருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் சரத்குமார் எப்படியிருக்காரோன்னு யாரும் கவலைப்படவேண்டாம்! செஞ்சரி அடிக்க வந்துட்டாரே!
விஜய், அஜீத்துக்கு ஹாய் சொல்றதும் பதிலுக்கு அஜீத் ஹலோ சொல்றதும் பத்திரிக்கையுலகத்து வட்டாரத்துல... இது மேட்டரு! 'தப்பா நெனைச்சுக்காதீங்க'ங்கிற ஒரு வார்த்தையை வெச்சுக்கிட்டு சும்மா புகுந்து விளையாடியிருப்பவர் பாக்கியம் ராமசாமி. எதுக்கெடுத்தாலும் ஆராயக்கூடாது... அனுபவிக்கணும். கமல் சொன்னது சரிதான். வாழைப்பழத்தை மட்டும் ஏன் கழுவாமல் சாப்பிடுகிறோம் என்கிற அதி புத்திசாலித்தனமான கேள்விக்கெல்லாம் மதன் மாங்கு மாங்கென்று பதில் சொல்லியே ஆகணுமா? உங்க டச்சிங் குறையுதே மதன் ஸார்?!
நீச்சல் போட்டியில் நாலு தங்கப்பதக்கத்தை கடத்திக்கொண்டு வந்த சிவரஞ்சனியை பாராட்டுவதில் தப்பில்லை. அதற்காக டூ பீஸ் உடையில் நாலு ஸ்டில்லையா போடவேண்டும்?! இதில் சிவரஞ்சனியை ஹோம்லி டால்பின் என்று வர்ணித்ததுதான் இந்தவாரத்து மெகா ஜோக்! வார்த்தையை மடிச்சு, மடிச்சு போட்டா கவிதைங்கிறதை வாலி கெட்டியா பிடிச்சுக்கிட்டாரு. கிருஷ்ண விஜயமெல்லாம் புக்கா வரும்போது படிச்சுக்கலாம்!
எங்க காதலுக்கு வில்லன்களே ரசிகர்கள்தான்னு உண்மையை (அட, அங்கேயும் அப்படித்தானா?) சொன்ன மலையாளத்து மீசை மாதவன் பேட்டி படு சிம்பிள். மூணு வருஷமா கேரளத்தை கலக்கிக் கொண்டிருப்பவரை இப்போதான் இங்கே கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த வயதிலும் என்னமா இருக்காருன்னு வியக்க வைத்த நம்பியார், தகுதியுள்ள எவரையும் வரவேற்க மக்கள் தயங்கியதில்லை என்ற நடுநிலையான தலையங்கம் என சில உருப்படியான விஷயங்கள், திருஷ்டிப்பொட்டு மாதிரி!
ஒரு காலத்துல ஆ.வி ஜோக்குன்னா ஆர்வமா எட்டிப் பார்க்குறவங்களுக்கு ஒரு அவசர செய்தி. இந்த வாரத்து ஆ.வியிலிருந்து சுடச்சுட ஒரு ஜோக்.
'சாட்டிங் மூலமா ஏமாத்த பணம் பறிக்கலாம்னு பார்த்தா அவன் கில்லாடியா இருக்கானே... '
'எப்படிச் சொல்றே?'
'என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பினா அவன் சூர்யா படத்தை அனுப்புறான்'
குலுங்கி குலுங்கி சிரித்த மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கீழ்ப்பாக்கம் போக வேன் ரெடி!
சினிமா மேட்டரையும், கடி ஜோக்குகளையும் மேய்ந்துவிட்டு ஓவென்று அழத் தயாராக இருந்தவனை சமாதானப்படுத்த ஒரு ஜில் மேட்டர். மாயவரம் ஆர்.எஸ் கிருஷ்ணா & கோவின் ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய்தான் போயஸ்கார்டனுக்கு சப்ளை ஆகுதாம். புல்லரிக்க வைத்த விகடனாருக்கு ஒரு ஓ! (ஆப்சென்ட் ஆனதுக்கு தேங்க்ஸ் ஞாநியாரே!)