Saturday, September 10, 2005

மூன்றாம் யாத்திரை

வாரம் ஒரு தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான விஷயம்தான். பில்டப் ஸீன்ஸ்! டைட்டில் முடிந்ததும் யாராவது ஒரு ஒப்புக்கு சப்பாணி காரெக்டர் ஓடி வந்து ஹீரோவின் அருமை பெருமைகளை டயலாக்காக எடுத்துவிடும். ஹீரோக்களை மோல்டு செய்யும் இந்த பில்ட் அப்புகளால் ஏ சென்டர் வொயிட் காலர் சாமிகள் நெளிய ரம்பித்தாலும் சி சென்டர்களில் விசில் பறக்கும். கல்லூரி வாழ்க்கையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை உருட்டும் வரை இதுபோன்ற பில்ட் அப்புகளுக்கு பேடன்ட் வாங்கியிருப்பது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். ஷேக்ஸ்பியர் காலம் என்ன சோழர்கள் காலத்திலேயே நம்மூரில் பில்ட் அப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை தெரிந்து கொள்ள 2005 செப்டம்பர் மூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

ஏகப்பட்ட தடவை போயிருந்தும் பெரிய கோயிலில் என் கண்களுக்கு தட்டுப்படாத பிரமிக்க வைத்த விஷயம் அது. பெரிய யானையை பாதி முழுங்கிய நிலையிலிருக்கும் ஒரு ராட்சத பாம்பை காலில் போட்டு மிதித்தபடி, சுட்டுவிரலை நீட்டி மிரட்டும் அந்த ராட்சத சிவ கணங்களின் இன்னொரு கரங்கள் சொல்லும் செய்தி, 'உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரிய' அந்த பெருவுடையாரின் பெருமையைத்தான்.

Image hosted by Photobucket.com

சிலிர்த்தெழுந்த சிவபெருமான் தனது விஸ்வரூபத்தை காட்ட, அஞ்சி நடுங்கி அலறியடித்தபடியே பூத கணங்கள் ஓடும் அந்த சிற்பத்தின் உயரம் இரண்டு செங்கல் கூட இருக்காது. மெளஸ் பேட் சைஸ் கல்லில் நிஜமாகவே கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள். அரை அடி சிற்பத்திற்கும் அரை டஜன் உருவங்கள். அவை காட்டும் முகபாவங்கள் பற்றி முப்பது பக்கமாவது எழுதி தள்ளிவிடலாம். எங்க ஊரு வள்ளலார் கோயிலில் பாதி கூட இருக்காத அந்த புள்ள மங்கை கோயிலில் புதைந்திருக்கும் விஷயங்கள் ஜாஸ்தி. துர்க்கையம்மன் சந்நிதிக்கு கீழ் இருக்கும் அந்த குப்பைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு குனிந்து உட்கார்ந்தபடியே பார்த்தால் கண்ணில் பளிச்சிடுகிறது அந்த சிற்பம். இதுவும் ஒரு பில்ட் அப்தான். குதிரை மீது அமர்ந்தபடியே யாரோ ஒரு வீரன் பின்னால் தொடரும் அந்த முரட்டு யானையை நோக்கி அங்குசத்தை எறியும் காட்சி. மொத்த காட்சியையும் கையளவே இருக்கும் கல்லில் செதுக்கி தள்ளியிருக்கிறார்கள்.

Image hosted by Photobucket.com

பாடல் பெற்ற ஸ்தலங்களை பட்டியிலிடும் ஒரு வங்கி அதிகாரி, ஹிண்டு படிப்பது போல கல்வெட்டை படிக்கும் ஒரு லேடி புரொபஷனல், சரித்திர நாவல்களை கரைத்து குடித்துவிட்டு தமிழ் இலக்கியத்தில் அதன் இடத்தை பற்றி காரசாரமாக விவாதிக்கும் இளைய தலைமுறையினர். கனகாம்பரம் போல் ன்மீகம், வரலாறு, இலக்கியம் என அற்புதமாக தொடுக்கப்பட்டு அரை செஞ்சுரி காலமாய் சமூகத்தின் சாமானியர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியிருக்கும் அந்த சரித்திர நாவல்தான் இவர்களையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்திருக்கிறது. பொன்னியின் செல்வன்! வந்தியத்தேவனையும், குந்தவையையும் மறக்க முடியாமல் பொன்னியின் செல்வனுக்கு பின்னர் சரித்திர நாவல் பக்கமே திரும்பிப்பார்க்காத என்னைப் போன்ற சாமிகள் நாட்டில் நிறைய பேர் என்பதை வரலாறு டாட் காம் ஏற்பாடு செய்திருந்த அந்த மூன்றாம் யாத்திரையில் தெரிய வந்தது. முதன்முதலாக பொன்னியின் செல்வன் தொடரை கல்கியில் ரம்பிக்கும்போது கல்கி கொடுத்த பில்ட் அப் கையில் மாட்டியது. இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என்றெல்லாம் சோழ அரசர்களின் பெயர்கள் ஏற்படுத்தியிருக்கும் குழப்பத்தை தீர்ப்பதும், பிறந்த வீடும் புகுந்த வீடும் சோழநாடாகவே இருக்கவேண்டும் என்று நினைத்த குந்தவை, வந்தியத்தேவன் என்னும் சாமானியனை கைப்பிடித்த கதையை விளக்குவதுமே கல்கியின் நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த ஒரிஜினல் தொகுப்பை உச்சிமோர்ந்த பொ. செ வாசகர்கள் மத்தியில் சுவராசியமான விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. பொன்னியின் செல்வனில் பிடித்தமான பெண் கதாபத்திரம் பற்றி சீரியஸாக ரம்பித்த விவாதம், சிறந்த ஜொள்ளு பார்ட்டியாக வந்தியத்தேவனையும் அடிக்கடி மயங்கி விழுந்து ஓவராக ஸீன் காட்டிய அம்மிணியாக வானதியையும் தேர்ந்தெடுத்துவிட்டுதான் ஓய்ந்துபோனது. வீராணம் ஏரிக்கரையில் விறுவிறுப்பாக தொடங்கிய யாத்திரை பொன்னி நதிக்கரையின் வழியாக நகர்ந்து திரும்பவும் கூவம் நதிக்கரையை அடைந்தபோது மனதில் தோன்றியது இதுதான். பொன்னியின் செல்வனை மிஞ்சும் ஒரு சரித்திர நாவல் தமிழில் இனி சாத்தியமா?