Sunday, October 02, 2005

மனிதன்

ஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மிருகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.

'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)

மனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றிலுமாக விலகிச்செல்கிறது.

'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)

மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.

'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)

யானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே! பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவின் உந்துதல்தானே! உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது!

உணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா? இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.

'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)

Coutesy : www.tamiloviam.com - காந்தீய விழுமியங்கள்