
ஆள் அரவமற்று அழுது வடியும் அந்த பஞ்சாயத்து ஆபிஸ் இப்போது பரபரப்பாய் இருக்கிறது. கக்கூஸில் டியூப் லைட், வாசலில் ஜெனரேட்டர், ஹாலில் டிவி, மேஜையில் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் வகையறாக்கள். கொள்ளிடம் பஞ்சாயத்து ஆபிசுக்கு ஒரு கல்யாணக்களை சே... ஒரு கருமாதி களை வந்திருக்கிறது. இந்த வருஷம் கலெக்டருக்கு தீபாவளி கொள்ளிடத்தில்தான். பத்துமணிக்கு சித்தமல்லிக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு மதியம் நாகப்பட்டினத்தில் சாப்பாடு. மதியம் மூணு மணிக்கு வேளாங்கண்ணியில் ஒரு விசிட். திரும்பவும் சாயந்திரம் ஆறரைக்கு கொள்ளிடம் திரும்பிவிடுகிறார். காலையில் பத்தடி, பதினோரு மணிக்கு பதிமூணு; சாயந்திரம் பதினேழு. திரும்பவும் ராத்திரி பதினோரு அடி என தண்ணீர் ஷேர் மார்க்கெட்டாய் கொள்ளிடத்தில் விளையாடுகிறது. அரசு எந்திரம் பரபரப்பாய்த்தான் இருக்கிறது. கல்யாண மண்டபம், ஸ்கூல் எந்நேரம் மக்களுக்காக திறந்திருக்கிறது. ஒரு பக்கம் பெரிய பெரிய பானைகளில் சமையல் வேலைகள் பிஸி. ஆம்புலன்ஸ், ·பயர் என்ஜின் எல்லாம் ரெடி. ஊர் பரபரப்பு எதுவுமில்லாமல் அமைதியாக இருக்கிறது. மிஸ்டர் பொதுஜனம் கொள்ளிடம் கடைத்தெருவில் தீபாவளி ஷாப்பிங்கில் பிஸி.
'செவ்வாய் கிழமை ராத்திரியில் ஆரம்பிச்சது, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை ஆவுது... ராத்திரி பகல் பாராம வேலை நடந்துட்டிருக்கு...ராத்திரி இரண்டரை மணிக்கு ரவுண்ட்ஸ்க்கு போறாரு. நம்மளை டிஸ்டர்ப் பண்றதில்லை. கிட்டதட்ட ஒரு குட்டி கலெக்டரேட்டே இங்கேதான் போயிட்டிருக்கு' ஒரு பியூனின் புலம்பல் புராணம்.
'இப்படி மாஞ்சு மாஞ்சு வேலை செஞ்சாலும் சன் நியூஸ்ல போட்டு தாளிக்கிறாங்களே... ஜெயா டிவியிலாவது கொஞ்சம் விவரமா எடுத்து சொல்லலாம் இல்லியா...'
'அட நீங்க வேற... கலெக்டருக்கு மவுசு ஜாஸ்தியாயிடுமே... கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாங்க'
தேவுடா, தேவுடா எங்க கலெக்டரை கொஞ்சம் காப்பாத்துடா!