நம்மளை தவிர சன் நியூஸ் கூத்தை யாரும் பார்க்கலைன்னு நினைச்சது தப்புதான். இரண்டு பக்கத்துக்கும் நாமதான் நாட்டாமைங்கிற மாதிரி அந்த மாடு போட்ட அட்டகாசம் தாங்கமுடியலை. 1996ஆம் வருஷம் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னர் புது ஆட்சி என்னவெல்லாம் செய்யணும்னு ஒரு வாசகர் கருத்து கேட்டிருந்தது. அதில் அடியேனும் கருத்து எழுதி பிரசுரமானது இன்னும் ஞாபகத்துக்கு இருக்குது. மதுவிலக்கு வேண்டாம்னு எழுதித்தள்ளிட்டு ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மதுவிலக்கு வேண்டும்னு மாத்தி எழுதிக்கொடுத்ததாம் அந்த மாடு. வாக்குமூலம் கொடுத்திருப்பது அப்போது பொறுப்பாசிரியராக இருந்த ஞாநி!
நடிகர் சங்கத்திலிருந்து நோட்டீஸ் வந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கும் ஸாரின்னு சுகாசினி சொன்னதில் 'ஸாரி'ங்கிற வார்த்தையை சரத்குமாரே சென்ஸார் பண்ணிட்டாராம். இப்படியெல்லாம் நடிகருங்களே சென்ஸார் பண்ணிட்டா எஸ்.ஜே. சூர்யாவுக்கு குஷியாக இருக்கும். எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதற்காக துடைப்பக்கட்டையையும் பெருமையா தூக்கிப்பிடித்த திருமாவளவனின் ஆட்டமும் எஸ்.ஜே.சூர்யாவின் டூயட் டான்ஸ் மாதிரி நாராசமாகத்தான் இருந்தது. குஷ்பு விஷயத்தில் சைலண்ட்¡க சதமடித்த பெரிசு கூட சுகாசினி விஷயத்தில் டக் அடிக்க வேண்டியிருந்தது. சுகாசினி தமிழச்சியே கிடையாது. கைபர் கணவாய் வழியா வந்தவர்தான்னு சீமான் பேசியிருக்கிறதை பத்தி ஞாநி கமெண்ட் அடிக்கலாம். ஆனா, நாம கமெண்ட அடிச்சா பூணூலைத்தான் மாட்டிவிடுவாங்க.
நம்ம நமீதா மாதிரி நச்சுன்னு ஞாநி கடைசியா ஒரு கேள்வி கேட்டிருப்பதில் நியாயமிருக்கிறது. பெரியாரின் நாத்திகம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை ஏற்காத ராமதாஸ் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை மட்டும் ஆதரித்து பெரியாரின் வாரிசுன்னு பட்டத்தை வாங்கிக்கும்போது இட ஒதுக்கீட்டை ஏற்காத வாஸந்தி, மாலன் போன்றோர் பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெரியாரின் வாரிசுகளாக ஏன் ஆகக்கூடாது? நமக்கேண்டா வம்பு! திருமாவளவன் வழியையே பின்பற்றலாம். தமிழ்நாடே வெள்ளக்காடா இருக்கும்போது குஷ்பு விஷயத்தை பிடிச்சு தொங்க வேண்டாம்னு சொல்லியிருக்கார். ஓவர் டூ வெள்ள மேட்டர்.

கொள்ளிடத்து மக்கள் கெலிக்கிறாங்க. அரசியல் தலைவருங்க எல்லாம் அடிக்கடி வந்துட்டுப் போறாங்க. பண புழக்கம் ஜாஸ்தியா இருக்குதாம். மணிசங்கர் ஏன் வரலைன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க.கையில துட்டு இல்லை. அதனால வரலை. மக்களை சந்திக்கணும்னா நிறைய சூட்கேஸ் வேணும். அரசியல்வாதிங்க கிட்டே கைநீட்டி காசு வாங்காத தமிழனின் கற்பு கொடி கட்டி பறக்குது! அரசியலுக்கு புதுசா வந்திருக்கும் கரைவேஷ்டியோ கட்டுப்படி ஆகலைன்னு பாதி வழியிலேயே ரிட்டர்ன் ஆயிட்டாராம். இதுக்கெல்லாம் அசராத சமூக நீதி போராளியோ முப்பத்திரெண்டு காரில் வந்திருந்து ஏரியாவையெல்லாம் சுற்றிப்பார்த்து மக்களின் துயர் துடைத்துவிட்டு போயிருக்கிறார். அரசியல் மேட்டரெல்லாம நமக்கெதுக்கு? கொள்ளிடம் இப்போது எப்படி இருக்கிறது? நல்லாத்தான் இருக்குது.
'கொள்ளிட பாலத்துல பன்னிங்க கூட்டமா போயிட்டிருக்கிற மாதிரி போட்டோவை போட்டிருக்கியே... வம்புதானே?'
'அய்யய்யோ.. வேற பொருத்தமான போட்டோ இல்லீங்கண்ணா... வேணும்னா அதை ஆ·ப் த ரெக்கார்டா வெச்சுக்கோங்க'