கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்லாமல் இலங்கைக்கும் சென்று வந்து அனுபவங்களை தொகுத்து வழங்கியது நண்பர் ஜெகதீசனால் எந்நாளும் மறக்கமுடியாது. பிபிசியின் சென்னை பிரிவில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் ஜெகதீசன் அவரே சொல்வது போல அரிதாரங்களின் தாக்கங்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் முழுவதுமாக அவரால் சொல்ல முடியவில்லை. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் அவரை சந்திக்க முடிந்தபோது ரசிகர் மன்றங்களின் முழு பரிமாணத்தையும் அவர் புரிந்து வைத்திருப்பது தெரிந்தது. நிறைய கேள்விகள், நிறைய பதில்கள். என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட சோகக்கதைகளில் பாதி கூட தொடரில் வரவில்லை என்பது தனிக்கதை. சரி விஷயத்திற்கு வருவோம். எந்தவொரு ரசிகரும் மீடியாவில் செய்தியாகவேண்டும் என்பதற்காகவே பல கேலிக்கூத்துகளை அரங்கேற்றுகிறார்கள். போஸ்டர் முதல் பாலாபிஷேகம் வரை நடக்கும் கூத்துகளுக்கு இதுதான் காரணம். ஆளும் அரிதாரம் சொல்லும் செய்தியும் இதுதான். மீடியா எதையும் செய்தியாக்க தயாராக இருக்கிறது. பரபரப்புக்கு பேர் போன ஒரு ஆங்கில நாளிதழின் சென்னை பிரிவு பத்திரிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு என்னை தொடர்பு கொண்டார்.
'மதுரையில யாரோ ரசிகர் சந்திரமுகி படத்தை தொடர்ந்து பார்த்தாராமே... அவரை பேட்டி எடுக்கணும்... காண்டக்ட் நம்பர் உங்க சைட்டுல கிடைக்குமா?'
'எங்ககிட்ட அதெல்லாம் கிடையாது ஸார்... எதுக்கு அது மாதிரியான ஆசாமிங்களை பத்தி எழுதி பெரிய ஆளாக்கி விடறீங்க? அதுக்கு எழுதாமலே இருக்கலாமே!'
'என்ன பண்றது? அதைத்தான் எங்களால எழுத முடியும்... எனிவே தேங்க்யூ....வேற வழியில டிரை பண்ணிப்பார்க்குறேன்... '
கம்மிங் பேக் டு த பாயிண்ட். ஜெகதீசன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் குஷ்பூவுக்கு கோயில் கட்டப்பட்ட செய்தியின் பின்னணி. இன்று வரை மீடியாவில் அதைப்பற்றி வந்த கிண்டல்கள்தான் அதிகம். கோயில் கட்டிய விபரம் தெரிந்ததுடன் உடனே கண்டித்து குஷ்பு அறிக்கை விட்டதாக காதோரம் ஒரு செய்தி. கோயில் விஷயத்தில் நடந்த உள்குத்து பற்றி விபரமாக இதுவரை பதிவு செய்திருப்பது நண்பர் ஜெகதீசனாக மட்டும்தான் இருக்கமுடியும். முஸ்லீம் மதத்தை சார்ந்த குஷ்புக்கு கிறிஸ்துவ இளைஞர்கள் இந்து முறைப்படி கட்டிய கோயிலுக்கு பின்னணி எப்படியாது மீடியாவில் செய்தியாக வேண்டும் என்பதுதான். 'நாலு பேர் சேர்ந்து ஆளுக்கு நாற்பது ரூபாய் போட்டு கட்டிய கோயிலுக்கு நல்ல பலன் இருந்தது. ரிப்போர்ட்டர்கள் வீடு தேடி வந்தார்கள்' என்று பிபிசியில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்த ரசிகர்.
BBC - ஆளும் அரிதாரம்
ரசிகர் மன்ற கலாசாரம் பற்றி கருத்து சொல்வதற்கெல்லாம் எனக்கு பெரிய தகுதியில்லை. ஆனாலும் ஜெகதீசன் நிகழ்ச்சியில் சொல்லாமல் என்னிடம் மட்டுமே சொன்ன ஒரே ஒரு விஷயத்தில் நானும் உடன்படுகிறேன்.
'நம் எல்லோருடைய கையிலும் ரத்தக்கறை இருப்பது நிஜம்தான்'