மூன்றாந்தர அரசியல் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டது போல் இருந்தது. உள்ளே நுழைந்தபோது அறுபது எழுபது பேர் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். யாரோ ஒரு பெண்மணி உடைந்த தமிழில் பெண்ணுரிமை பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தார். அடுத்தடுத்து மராத்தான் ரேஸ் போல மாறி மாறி பலரும் மைக் பிடித்து 'பயலுங்கோ...', 'பொறுக்கிப்பசங்க' என்று டீஜென்டான வார்த்தைகளில் திட்டி தீர்க்க ஆரம்பித்த பின்னர்தான் இலக்கிய கூட்டத்திற்கு வந்திருப்பதே உறுதியானது. சண்டைக்கோழி விவாகரத்திற்குத்தான் நாகரீகமாய் எளக்கியவாதிகள் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். வருபவர்களை குட்டி ரேவதியே முன் வந்து வரவேற்று மேடையில் உட்கார வைத்தார்.
வெறும் எஸ்.ராமகிருஷ்ணனை மட்டும் திட்டிக்கொண்டிருந்தால் எடுபடாது என்று நினைத்தார்களோ என்னவோ சினிமாவுக்கு எதிராய் சிக்கியிருக்கிறது விவகாரம். சினிமாவில் பெண் படைப்பாளிகளின் மீதான வன்முறையாக உருவெடுத்திருக்கிறது. மைக் பிடித்த மாதர் சங்கத் தலைவிகளின் பேச்சை பார்த்தால் கூடியே சீக்கிரமே சினிமாவில் பெண்களை சித்தரிப்பதற்கு எதிராக மாறக்கூடும். 'ஒரு பயலும் பஞ்ச் டயலாக் பேசக்கூடாது'ன்னு பணிவாய் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலக்கிய வட்டாரத்தில் சினிமாக்காரங்களுக்கு மரியாதை ஒரு அவுன்ஸ் கூடியிருக்கிறது. சினிமாக்காரனுங்களாக ஆகியிருக்கிறார்கள்!
ரேவதி (குட்டி ரேவதி அல்ல!) கொடுத்த பீடிகைக்கு பின்னர் மைக்கை பிடித்தது 'வெளிநடப்பு புகழ்' பிரபஞ்சன். எஸ்.ராவின் எழுத்தை 'டவுண்லோடு' எழுத்து என்று பிரபஞ்சன் அடித்த கிண்டலுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ். மஞ்சள் கலர் சேலையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த குண்டு பெண்மணி குலுங்கி குலுங்கி சிரித்தார். பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்! குஷியான பிரபஞ்சனும் குட்டி ரேவதியை மறந்துபோய் எஸ்.ராவின் எழுத்தை விமர்சித்துக்கொண்டே போனார். பாதிக்கப்பட்ட பெண் கவிஞர்களுக்கு இப்போதைக்கு பிரபஞ்சன்தான் பிதாமகன். நிகழ்ச்சி நிரலில் வரும் மாற்றங்களெல்லாம் பிரபஞ்சனின் ஆலோசனை படிதான்.
வழக்கம்போல் டீஜெண்டாய் எஸ்.ராவை சாடிவிட்டு உயிர்மை பக்கம் வந்து 'கவிஞர்' மனுஷ்யபுத்திரன் என்று சொல்லி கிண்டலடித்தார் கவிஞர் இன்குலாப். எஸ்.ராமகிருஷ்ணனோடு சம்பந்தப்பட்ட எல்லா சினிமா பிரபலங்களும் இன்குலாபின் அர்ச்சனையிலிருந்து தப்பவில்லை. (உதாரணத்திற்கு... 'எஸ்.ரா, யாரை ஸார்னு சொல்றாரு தெரியுமா?'). பெண்களின் உரிமையை காப்பாற்ற களமிறங்கியிருப்பதாக துப்பட்டாவோடு வந்த ஒரு மாதர் சங்கத்தலைவி எஸ்.ராமகிருஷ்ணன், லிங்குசாமி குடும்பத்து பெண்களை முடிந்தவரை அசிங்கப்படுத்திவிட்டுதான் ஓய்ந்தார்.
அடுத்து பேச வந்தது மாலதி மைத்ரி. அரங்கமே அப்படியொரு அமைதியில். தலை உருண்டுவிடும் என்று பல பேர் பயந்திருக்கலாம்! மனுஷ்யபுத்திரனைப் போல் அல்லாமல் தான் இருபது வருஷமாக எழுதிக்கொண்டிருப்பதாக சந்தடிசாக்கில் ஒரு பில்ட் அப். சு.ராவிலிருந்து கி.ராவரை ஒரு லிஸ்ட்டை சொல்லி அவர்கள் போல எஸ். ராவின் எழுத்துக்கு ஒரு format கிடையாது என்றார். இங்கேயும் இன்னொரு பில்ட் அப். லிஸ்ட்டில் சு.ரா, ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஆளாக சீக்கிரமாகவே வந்தவர் ரமேஷ்-பிரேம்! பாவம் ஜெயமோகன், கி.ராவெல்லாம் கடைசியில்தான். பெண் கவிஞர்களை பற்றி போகிற போக்கில் விண் டிவியில் சினிமாவுக்கு பாட்டெழுதும் சினேகன் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மாலதி பேச்சில் சுவராசிய சங்கதிகள் ஜாஸ்தி. உயிர்மை அரங்கில் எஸ். ராவின் அடியாட்கள் பெண் கவிஞர்களை தாக்க வந்தார்களாம். அப்படி தாக்கியிருந்தால் இந்நேரம் ஆண் இலக்கியவாதிகளெல்லாம் தலையில் துண்டுதான் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றார். பக்கத்திலிருந்து அவரதுகோஷ்டியினர் அது துண்டு இல்லை துப்பட்டா என்று திருத்த... எல்லோரும் சிரித்தார்கள் எதுவும் புரியாமல்!
பின் வரிசையிலிருந்து ஆர்வத்தோடு முன்வரிசைக்கு வந்து மேடையேறிய அரசுவின் பேச்சில் ஆரம்பமே காரம்தான். சினிமாக்காரர்களால் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஆசாமி போல தெரிந்தார். இந்தப் போராட்டம் பெரிய அளவில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னார். அரசு, எழுத்தாளர் மட்டுமல்ல ஆராய்ச்சியாளரும் கூட. சமஸ்கிருதம் பற்றி மனிதர் நிறைய ஆராய்ந்து ஏழுதியிருக்கிறாராம். ஒரு சேஞ்சுக்கு தமிழ் முரசுவில் செய்தி வெளியிட்டவர்கள் பற்றி மேடையில் ஆராய்ந்து சொன்னார். தமிழ் முரசில் அந்த ரிப்போர்ட்டிங்கை செய்தது சில பார்ப்பணர்களாம். சுகிர்தராணி ஒரு தலித் என்பதால் அவரை மையப்படுத்தியிருக்கிறார்களாம். பாவம், சுகிர்தராணி! கொஞ்சமாய் நெளிய ஆரம்பித்தார். அரசுவும் தனது ஆராய்ச்சி முடிவுகளை தொடர்ந்தார். உயிர்மையில் எழுதுபவர்களும் தமிழ் முரசுவில் எழுதுபவர்களும் அடிக்கடி தனி கச்சேரியாக தண்ணீர் கச்சேரி செய்வதுண்டாம். இதையும் மேடையில் சொன்னதும் அடிக்கடி குப்புற விழுந்து கிடக்கும் பழக்கமுள்ள அந்த எழுத்தாள பிரபலம் நிறையவே நெளிந்தார்.
எஸ். ரா துப்பட்டாவை பற்றி எழுதியதுற்கு சுஜாதா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி எழுதப்போயிருக்கலாம் என்கிற ரீதியில் கூட்டத்தில் பேசியவர்களெல்லாம் நிறைய தத்துவங்கள் பேசினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ பாலபாரதி, கொஞ்சம் வித்தியாசமாய் சண்டைக்கோழி படத்தின் திரைக்கதையை சாடி தேவர்மகனை நியாயப்படுத்தினார். 'இப்பக்கூட சென்ஸார் போர்டில் புகார் செய்யலாம்' என்று ஐடியா கொடுத்தவர் முன்னாள் மசாலா பட எடிட்டர் லெனின். லெனின் பேசிய பின்னர்தான் பெண் படைப்பாளிகளுக்கு இந்த ஐடியாவே தெரிய வந்திருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து நாற்பது பேர் மேடையேறி எஸ். ராமகிருஷ்ணனை ஆற அமர விளாசுவதற்கு முண்டிக்கொண்டு முன்வரிசைக்கு வந்தார்கள்.
'சரியோ தவறோ பிரச்னையை பெரிதுபடுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களே நேரடியாக சந்தித்து பிரச்னைக்கு ஒரு சுமூகமான முடிவை கொண்டு வரவேண்டுமே தவிர இப்படி பொதுவிடங்களில் பிரச்னையை பேசி மேலும் பெரிதாக்குவது எனக்கு என்னவோ நல்ல விஷயமாக தோன்றவில்லை' என்று சொல்லிவிட்டு கனமான கைதட்டலுக்கு நடுவே விடுவிடுவென்று மேடையிலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற அந்த பெயர் தெரியாத பெண் எழுத்தாளரின் குரலில் இருந்த நியாயம் மனசாட்சியை உறுத்திக்கொண்டேயிருந்தததால் வேறு வழியின்றி நானும் வெளிநடப்பு செய்ய வேண்டியிருந்தது.