அதைப் பற்றி சொல்லாமலே இருந்திருக்கலாம். இப்போதுதான் உறைக்கிறது. எப்போதும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதது புதிதாக நெஞ்சுக்குழி வரை வந்து நெருடியதால் கேட்டுத் தொலைக்க நேர்ந்துவிட்டது. உச்சி வெய்யிலில் பட்டப்பகலில் பகிரங்கமாக நடப்பதை கண்டு கொள்ளாமலே கிளம்பியிருக்கலாம்! நம்ம சுழி என்றைக்கு சும்மா இருந்திருக்கிறது. 'இந்த லவ்வர்ஸ்க்கு வேற இடமே கிடையாதா... இங்கே வந்து அசிங்கம் பண்ணுதுங்க...' பளிச்சென்று முகத்திலடித்தாற்போல் ஒரு பதில் வரும் எதிர்பார்க்கவேயில்லை. 'உன்னால முடியலைங்கிறதுக்காக அடுத்தவங்களை ஏன் குறை சொல்றே?'
உடனே ஒரு பிகரை தேடிப்பிடித்தாகவேண்டும் என்று விபரீதமாய் முடிவெடுக்காத மனசாட்சியே நீ வாழ்க! என்னதான் நெத்தியடியாக சொன்னாலும் கூடவே வந்த நண்பனின் பதிலில் நியாயமிருக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிட நமக்கென்ன உரிமையிருக்கிறது? சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் என்ன மாமாமனா, மச்சானா? யாரோ எப்படியோ இருந்துவிட்டு போகட்டுமே என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் வாய் மூடி இருந்திருக்கலாம். பேசுவதற்கு முன்னர் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்துவிட்டே பேச வேண்டும் என்று சொன்ன அந்த ஒன்பதாம் கிளாஸ் (கேயார்) வாத்தியார் சொன்னதை எப்போதும் மறப்பதில்லை. அதனாலேயே பல நேரங்களில் எதைப்பற்றியும் பேச முடியாமலே போய்விடுகிறது. எப்படியாவது தப்பித்தவறி பேசினாலும் இதுமாதிரி சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு காரணம்.
குறைவாக பேசி நிறைய சாதிக்கும் பெரிய மனிதர்களை பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. தலையில் இடியே வந்து விழுந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு அசாத்திய பொறுமை அவசியம். எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அனார்த்தமாகிவிடும் உயரத்திலிருக்கும் மனிதர்களுக்கு எதுவுமே அக்னிப்பரீட்சைதான். எந்தப் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வே இல்லை என்கிற நிலையில் இன்ஸ்டெண்ட் தீர்வு என்று சொன்னால் பிரச்னையைப்பற்றி பேசாமலிருப்பதுதான். சரி பேசாமலே இருந்துவிடலாம் என்றால் பக்கத்து வீட்டுக்காரர் பயமுறுத்துகிறார். முக்கியமாக அவர் சொல்லும் சைக்காலஜி. எப்போதும் பேசாமலிருந்தால் இன்·பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்கும்; அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்குமாம்! அட, இதுக்கு எதையாவது உளறி தள்ளிக்கிட்டே இருக்கலாம்!
ரொம்ப பிடிச்ச பன்ச் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. எது நடந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காம அப்படியே அள்ளிவிட்டுக்கிட்டே போவது. பெர்னாட்ஷா சொன்னதை கொஞ்சம் புரட்டிப்போட்டு சொன்ன பன்ச் டயலாக்குதான்.
'இந்த உலகமே நாடகம். நாமெல்லோரும் நடிகர்கள். அலைகள் வந்து வந்து போகும். ஆனால் கடல் மட்டும் மாறாம அப்படியோ இருக்கும். நடிகர்கள் மாறிக்கிட்டே இருப்பாங்க. நாடகம் நடந்துகிட்டேயிருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த பாத்திரங்களை அவனுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சாத்தான் நமக்கு அவன்கிட்ட இடம் கிடைக்கும்... நல்லா இருங்க!'