Wednesday, February 04, 2004

கூட்டணி தர்மம்?!

சர்வ வல்லவை பொருந்திய பலமுள்ள கட்சியாக கருதப்படும் ஆளும் பாஜக, தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருப்பது காலத்தின் கோலம்தான். ஒரு திராவிடக் கட்சி கதவை முடினால் இன்னொரு திராவிடக் கட்சி கதவை திறந்து வைக்கும் என்கிற எதிர்பார்ப்பு முற்றிலுமாக பொய்த்து போகாவிட்டாலும் பாஜக போன்ற தேசியக் கட்சிக்கு இது பின்னடைவுதான். ஆனாலும் அதிமுகவின் பெருந்தன்மையால் பாஜக பிழைத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது. ஆக, இந்த முறை அனாதைகளானது 'பெயர் மாற்ற' புகழ் திருமாவளவனும் 'சண்டியர்' கிருஷ்ணசாமியும்தான்.

இவ்வளவு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தும் திமுக பெற்ற பலன் என்னவென்று கேட்டால் வெறுமைதான் பதிலாக மிஞ்சுகிறது. குஜராத்தின் இனக்கலவரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த திமுக இன்று தனது தலைமையிலான கூட்டணிக்கு மதநல்லிணக்க அணியென்று பெயரிடுவது முரணாண விஷயம். திமுகவுக்கும் காங்கிஸ¨க்கும் இடையே பரஸ்பர புரிதல் உண்மையிலேயே இருக்கிறதா என்பது தொகுதி பங்கீட்டின் போதே தெரிந்துவிட்டது..

அடிக்கடி அமைச்சரவை மாற்றமும் அதிமுக நிர்வாகிகள் நேர்காணலின் முலம் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஆரோக்கியமான ஜனநாயக அணுகுமுறை இல்லையென்றாலும் ஆபத்தான நிலையிலிருக்கும் உள்கட்சி அரசியல் பிரச்சினைகளை அதிரடியாக முடிவுக்கு கொண்டுவர இதைவிட வேறு வழியில்லை. கோஷ்டிப் பிரச்சினைகளுக்கு பெயர் பெற்ற கட்சியின் தலைவர்கள் அம்மாவிடமிருந்து அவசியம் படிக்க வேண்டிய பாடம் இது. அதீத தன்னம்பிக்கையால் நாற்பதும் எனக்கேன்னு அம்மா பகல் கனவு காண்பது குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம்!

குழப்பமும் குளறுபடியுமாக இருக்கும் தமிழக அரசியலை புரிந்து கொண்டு மக்கள் ஏதாவதொரு கூட்டணிக்கோ கட்சிக்கோ பெரும்பான்மையான இடங்களை அள்ளிக் கொடுத்தால் அது ஆச்சரியம் அல்ல... அதிர்ச்சி!

- ஜெ. ரஜினி ராம்கி