ஸ்டேட் மிஸ் அடிப்பாங்க!
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை நெறிமுறைகள் தேர்தல் நேர பரபரப்பில் அமுங்கிப் போய்விட்டது மாதிரிதான் தெரிகிறது. அரசு ஊழியர்கள் கலை இலக்கிய சங்கதிகளில் பங்கு கொள்வதற்கும் தங்களது படைப்புகளை பிரசுரிப்பதற்கும் முன் அனுமதி பெறவேண்டும் என்ற நடவடிக்கை நிச்சயமாக கருத்து சுதந்திரத்தை கேலிக்கூத்தாகுகிறது. தமிழகத்தில் கலை இலக்கிய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்கு எவ்விதமான பொருளாதார லாபம் எதுவுமில்லை. இங்கே எழுதுபவர்கள் வேறு தொழில்களை மேற்கொண்டிருந்தால் மட்டுமே எழுத்து தொழிலில் பிழைக்க முடியும். கதை எழுதியும் தபால் தலை ஓட்டியும் காலியானவர்கள் நிறைய பேர். வருடாவருடம் ஏறும் தபால் செலவையும் தாக்குப்பிடித்து எழுதித் தள்ளுவதென்பது சாதாரண காரியமல்ல. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுதுவதற்கு காரணம் பொறுப்புணர்வு, புகழ், சமுக பிரக்ஞை என்றெல்லாம் சொல்ல முடியுமே தவிர காசு என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியாது.
அந்த காலத்தில் சட்டத்தை மீறுவதற்கு து¡ண்டக்கூடிய எழுத்துக்களையும் தேச விரோதமாக சித்தரிக்கப்பட்டவைகளை எழுத்துக்களையும் தடை செய்ய ஆங்கில அரசு கையாண்ட யுக்திகள் வேறு ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னரும் இது போன்ற சட்டங்கள் வழக்கில் இருந்தாலும் நடைமுறையில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்களையே யாரும் பொருட்படுத்தியதில்லை. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்ட ஆட்சியாளர்களால் து¡க்கியெறியப்பட்ட இது போன்ற சட்டங்கள் மீண்டும் உலா வருவதன் காரணம்தான் புரியவில்லை. தனக்கு மீடியாவின் ஆதரவு இல்லையென்பதற்காக அம்மா மீடியாவை மண்டிபோட வைக்கும் ஸ்கூல் டீச்சர் வேலை பார்க்க நினைக்கிறாரோ?
தமிழில் தீவிரமாக எழுதிவரும் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் வர்க்கத்தை சார்ந்தவர்கள். இதில் 'அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தேவையற்றது அம்மாவின் ட்ரீட்மெண்ட் சரிதான்' என்று சொன்னவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் கூட இத்தகைய கட்டுப்பாடுகளை ஊழியர்களுக்கு விதிப்பதில்லை. இந்நிலையில் இப்படியரு கட்டுப்பாடுகளை விதிப்பதன் முலம் ஜெ அரசு சாதிக்கப் போவது எதை?
எது எப்படியோ, தமிழகத்தில் தனிநபர் அரசியல் உச்சத்திற்கு போய்விட்டது. உங்கள் தெருவில் லைட் இல்லையென்று முரசொலியில் கலைஞர் எழுதினால் உங்களுக்கு உபத்திரம் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். அரசு ஊழியர் ஸ்டிரைக்கில் தீவிரமாக இருந்து நுலிழையில் வேலையை மிஸ் பண்ணாமலிருந்த என் நண்பனை இலக்கிய கூட்டத்திற்கு அழைத்தால் அரண்டு போகமாட்டானா? "பத்திரிக்கை, எழுத்து, தமிழ், இலக்கியம், தனித்தமிழ், தமிழர் தேசியம், தீவிரவாதம், பொடா, செண்ட்ரல் ஜெயில்.....அய்யோ.. யாரு களி திங்கிறது? எழுதறதா... படிக்கிறதோட நிறுத்திக்க வேண்டியதுதான்..!"
- ஜெ. ரஜினி ராம்கி