Wednesday, February 11, 2004

ஜெயா வணக்கம்

காலையில் சீக்கிரமா எழுந்திருக்கிறதெல்லாம் நமக்கு பழக்கமே இல்லாத சமாச்சாரம். ஏழு மணி என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை அதிகாலை நேரம்! இன்னிக்கு அபூர்வமா சீக்கிரமா எழுந்து டி.வி ரிமோட்டை கையிலேடுத்தேன். சன் டிவியில் வெறுமாண்டியா போக வேண்டிய விருமாண்டியை விறுவிறுமாண்டியாக்கிய ஆர்ட் டைரக்டர் பிரபாகர் ஏதோ சொல்லிட்டிருந்தார். விஜய் டிவியில் ரதியிடம் அரெஜ்டு மேரேஜா லவ் மேரஜாங்கிற அதி முக்கியமான கேள்வியை கேட்டுட்டிருந்தாங்க. தமிழன் டிவியில் டாக்டர் அய்யா பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தார். ஜெயா டிவியில் பளிச்சென்று ஒரு முகம் பேசிக்கொண்டிருந்தது. அது கோவையின் பிரபல தொழிலதிபர் வானவாராயர் தான் அது!

அவரது பேச்சிலிருந்து சில ஹைலைட்டான சங்கதிகள்

* சுவாமி விவேகானந்தர் தன்னை அதிகமாக பாதித்திருப்பதாக சொன்னார். விவேகானந்தர் சொன்ன ஆன்மீ£கத்தில் தெளிவு இருந்தது தேடல் இருந்தது.. அதெல்லாம் இந்த காலத்தில் குறைஞ்சுகிட்டே வருது என்றார்

* பாரதீய வித்யாபவனின் தலைவராக இருந்து கொண்டு இந்திய கல்வி முறையை மாற்றியமைக்கும் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக சொன்னார். விஞ்ஞானத்தோடு மெய்ஞானமும் இணைந்து செயல்பட்டே ஆகவேண்டும். அதை முன்னெடுத்து செல்ல இந்தியா போன்ற ஆன்மீக கலாசாரத்தை அடிப்படையாக தேசத்தால்தான் முடியும் என்று சொல்லி நிமிர வைத்தார்

* உலகத்திலேயே இந்தியக் கலாசாரம் இன்னும் நீர்த்து போகாமைக்கு காரணம் அது ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டிருப்பதுதான் என்று சொன்னவர் விவேகானந்தர் சொன்ன ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்ட கல்வியை வலியுறுத்துவதில் தப்பில்லை என்றார்

* இந்தியா தனக்கென்று லட்சியம் எதையும் கொள்ளாததுதான் நமது பிரச்சினை என்றவர் மகாத்மா காந்திஜியின் பொருளாதார கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்றார்.

* இன்றைய பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் நாளை எப்படியிருந்தாலும் அதற்கேற்ப பிள்ளைகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமளவுக்கு ஊக்கப்படுத்துதல் அவசியம் என்றார். அடிக்கடி அவர் சொன்ன 'அமர் பாரதம்' வார்த்தை பதம்தான் புரியவில்லை.

ஒரு அருமையான, தெளிவான சொற்பொழிவை கேட்டதில் மனசு சுறுசுறுப்பானது. ஜெயா டிவிக்கு ஜே!