Friday, February 13, 2004

இலக்கியப்பட்டி சிவகாமி!

"தீராநதி: தலித் எழுத்துக்கள், தலித் அல்லாத எழுத்துக்கள் என்கிற இந்தப் பிரிவை, நிரந்தரமான ஒன்றாக கருதுகிறீர்களா அல்லது ஏதோ ஒரு கட்டத்தில் பிரிக்கும் கோடு மறைந்துவிடுமா?

சிவகாமி: சாதி எவ்வளவுக்கெவ்வளவு நிரந்தரமோ, அவ்வளவுக்கவ்வளவு இந்த பிரிவும் நிரந்தரமானது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட்டறையில், ஒரு தலித் எழுத்தாளர், ‘‘நாம் எவ்வளவு நாளைக்கு இப்படி தனியாகவே இருப்பது. பொதுத் தளத்துக்கு எப்போதுதான் போய்ச் சேருவது?’’ என்று கேட்டார். நான் அவரிடம் கேட்டேன்: ‘‘ஏன் பொதுத் தளத்தோடு போய் சேர வேண்டும். அங்கு நமக்காக என்ன வைத்திருக்கிறார்கள். நம்மிடம் இல்லாத எதை நாம் அவர்களிடம் இருந்து பெற முடியும் என்று நினைக்கிறீர்கள்’’. என்னைப் பொறுத்தவரைக்கும் தலித்துகள்தான் பொதுத்தளம். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இல்லாத ஒரு சமூகம்தான் பொதுசமூகம் என்றால், அந்தச் சமூகம் எனக்குத் தேவையில்லை. மற்றபடி இரண்டுக்குமிடையே பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.


தீராநதி: பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுவது தற்போது பெண்கள் கவிதைகளில் அதிகரித்திருக்கிறது. அதிர்ச்சிக்காகத்தான் இது செய்யப்படுகிறது என்றும் ஒரு சிலர் இதுபற்றிச் சொல்கிறார்கள். உங்களது நிலைப்பாடு என்ன?

சிவகாமி: பாலியல் உணர்வுகளை ஆண்கள் வெளிப்படுத்தலாம்; பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை மீற வேண்டும் என்பதை நோக்கிய ஒரு செயலாக இது இருக்கலாம். அதிர்ச்சிக்காகத்தான் செய்கிறார்களா, இல்லையா என்பது பற்றி அவர்களைத்தான் கேட்க வேண்டும். நான் படித்த வரைக்கும், நடப்பவற்றைத்தான் எழுதுகிறார்கள். நடக்காதவற்றை எதையும் அவர்கள் எழுதுவதில்லை. ஆனால், அவர்கள் ஏன் நடப்பவற்றை எழுதுகிறார்கள், அதற்கான அவசியத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதை அவர்களின் கவிதைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியவில்லை."

நன்றி - தீராநதி

தலித் இலக்கியமோ பெண் இலக்கியமோ எல்லாமே தறிகெட்டு போய்ட்ட மாதிரிதான் தெரியுது. நாலு பேரு திரும்பி பார்க்கிற மாதிரி எழுதறதும் பேசறதும்தான் இப்போது ஸ்டைல். இதுக்கு வாயில நுழையாத வார்த்தையை சொல்லி அதுக்கும் ஒரு வியாக்கினம் கொடுக்கிறது. சிவகாமியம்மா தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து படித்து வளர்ந்து பெரிய ஜ.ஏ.எஸ் அதிகாரியாகி ஜப்பான் வரை சென்று வெளியுறவுத் துறையில் பணிபுரிந்த அனுபவஸ்தர். விண் டிவியில் வந்த சிவகாமியுடனான வாஸந்தியின் சந்திப்பை இன்னும் மறக்க முடியவில்லை. தலித் என்னும் அடையாளம்தான் தன்னை இன்னும் பரபரப்பான, பிரபலமான ஏழுத்தாளராகவே வைத்திருக்கிறது என்பதை சிவகாமியம்மா நிச்சயம் மறுக்க மாட்டார்!

- ஜெ. ரஜினி ராம்கி