Tuesday, February 17, 2004

காங்கிரஸ் Vs பாஜக

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்கிற கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்கின்றனர் காங்கிரஸின் பெருந்தலைகள். ஒருவேளை காங்கிரஸ் ஜெயிக்கவே ஜெயிக்காது என்று முடிவே கட்டிவிட்டார்களோ?! மன்மோகன் சிங் போன்ற பொருளாதார மாற்றத்துக்கு வித்திட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை சோனியா ஏன் முன்னிறுத்த கூடாது? இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாது என்கிற நிலையிலிருக்கும் காங்கிரஸை புத்துணர்ச்சியுடன் களமிறக்க சோனியா செய்ய வேண்டியது பா.ஜ.க.வின் குறைகளை மட்டும் பட்டியலிடாமல், பாரதத்தின் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி, நாட்டை மேம்படுத்தும் வாக்குறுதிகளை முன்வைப்பதுதான். காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம் உட்கட்சிப் பூசல்கள்தான். இன்னொரு பக்கம் முரண்பாடான கொள்கைகளையுடைய கூட்டாளிகளாக இருந்தாலும் நம்பகமான ஆட்கள். கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் காங்கிரஸ்க்கு நிகர் காங்கிரஸ்தான். யார் என்ன சொன்னாலும் கண்டுக்காததுதன் அதன் ரகசியம்!

பாஜக ஆட்சியில் குறைகளே இல்லையென்கிற பிரமை இன்று முன்னிறுத்தப்படுகிறது. குஜராத் கலவரங்களை திராவிடக் கட்சிகள் மறந்து விடலாம். கூட்டணிக் கட்சிகளை சங்கடப்படுத்த தயங்கும் காங்கிரஸ் கூட வாய் திறக்க மறுக்கலாம். ஆனால் மக்களால் மறந்து விட முடியாத அவமானம் அது. பாஜகவின் ஆட்சி இந்தியாவை மத உணர்வுகளால் முழ்கடித்த காலம் என்று தாராளமாக சொல்லலாம். இது பற்றி பாஜகவினருக்கும் துளியும் குற்ற உணர்வே இல்லாததுதான் அதிர்ச்சியான சங்கதி. 300 இடங்களுக்கு மேல் ஜெயித்து பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பெரிய அபாயமே காத்திருக்கிறது. குறைந்த பட்சம் மக்கள், கூட்டணிக் கட்சிகளை சார்ந்து பாஜக இருந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினாலே போதும். கூட்டாளிகள் என்னும்போது அவர்கள் மிரட்டாமல் இருந்தாகவும் வேண்டும். போன முறையாவது சந்திரபாபு நாயுடு தனியாக மிரட்டிக் கொண்டிருந்தார். இம்முறை காவிரி தந்த கலைச் செல்வி.. நம்முர் அம்மா!

காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரு விசயத்தை தெளிவாக சொல்லாமலிருப்பதுதான் குழப்புகிறது. சோனியா , வாஜ்பாய்க்கு பின்னர் யார் என்கிற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது. எது எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் திராவிடக்கட்சிகளையும் ஜாதிக்கட்சிகளையும் தவிர்த்து இவ்விரண்டு தேசியக் கட்சிகளை ஆதரிப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் தேர்தலுக்கு பின்னர் மிரட்டல் டயலாக் விடும் தமிழக தலைவர்களால் அடுத்தவர்களின் சாபம் நமக்குதான் வந்து சேரும்!

- ஜெ. ரஜினி ராம்கி