Saturday, April 03, 2004

மயிலாடுதுறையின் மணிக்குரல்!



நேத்து NDTVயில் Follow the Leader நிகழ்ச்சியில் மணிசங்கர் ஜயரின் பிரச்சாரத்தை 'கவர்' செய்தார்கள். அதிகாலை நேரத்தில் சர்ச்சுக்கு விசிட்டி அடிச்சு மனுஷர் அசத்தலாக பிரே பண்ணி ஆசிர்வாதம் வாங்குவதிலிருந்து ஆர்ப்பட்டமா ஆரம்பித்தது அன்றைய நாள்.

'நான் இந்த மண்ணின் மைந்தன்' என்று பெருமையாக சொல்லிக்கொண்டார். பேட்டியாளரும் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்பதை வசதியாக மறந்து விட்டார். 1998 தேர்தலில் தனித்து நின்றே அறுபதாயிரம் ஓட்டுக்கள் வாங்கிய ஜயர், தனது ஆபிஸின் வாசலில் கட்டப்பட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் தோரணங்களை பார்த்து இவைதான் பலம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டார். தனது அரைகுறை தமிளில் தாய்க்குலங்களை 'அம்மா....ஓட் போட மர்ந்துடாதீங்க' என்று வழக்கம்போல கைகூப்பி, பொடி பையன்களுக்கும் மரியாதை செய்ய மறக்கவில்லை. வாண்டுகளுடன் கிரிக்கெட் விளையாடி விக்கெட் எடுத்தார். யாரை அவுட் பண்ணப்போறீங்கங்கிற கேள்விக்கு மதவாத கூட்டணியை என்று பளிச் பதில். நான் பாமக கட்சிக்காரன். ஜயருக்காக உயிரையும் கொடுப்பேன்னு உணர்ச்சிவசப்பட்டவரை தடுத்து, ஜயா, உயிர் வேணாம்; உங்க ஓட்டு போதும் என்றார். படு உஷார் பார்ட்டி! அவருக்கு தெரியும்...போன எலெக்ஷனில் கடைசி நேரத்தில் ஆப்பு வெச்சு பரிதவிக்க வெச்சது இதே பாமக ஆட்கள்தாங்கிறது!

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் வலம் வரும் ஆளுங்கட்சியின் மகளிர் அணியை சமாளிக்க செம்பொன்னார் கோயிலில் அசத்தலான மகளிர் கூட்டத்தை கூட்டி பெண்களின் சிறப்பை பற்றி ஒரு லெக்சரர் கொடுத்தார். வழக்கம்போல பள்ளி வாசலில் தொழுதும், கோயிலுக்கு போய் பரிவட்டம் கட்டிக்கொண்டும் மதச்சார்பின்மை இமேஜை பில்டப் பண்ணிக்கொண்டார். காவிரிப் பிரச்சினை சிக்கலானதற்கு காரணமே காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாய் சரியாக செயல்படாததால்தான் என்றார். ஆஹா... சூப்பர் லாஜிக்!

என்னதான் சொன்னாலும் ஜயர், ஜயர் தான்! காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா நிச்சயம் மணிசங்கர் அமைச்சராயிடுவாரு. அது நடக்காவிட்டாலும், குறைந்த பட்சம் ஆக்டிவ்வான, சுதந்திரமான எதிர்க்கட்சி எம்பியாக கலக்குவார். ( ஜெனிடிக் டெக்னாலஜி பற்றிய ஆராய்ச்சி கட்டுரை, பார்வைக்கு )படித்தவர். பண்பாளர். எளிதாக பழக முடியும். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாத பணிவான அணுகுமுறை. எந்த கட்சியில், எந்த கூட்டணியிலிருந்தாலும் அய்யருக்குத்தான் மயிலாடுதுறை மக்களின் ஓட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இம்முறை ஜயர் மோதுவதோ பாதாளம் வரை பாய வல்ல சமாச்சாரத்துடன்!

மக்கள், மணிசங்கரை கைவிட்டு விட்டால் மயிலாடுதுறையை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!