திங்கட்கிழமை (14.06.2004) ஆம்பூரில் இஸ்லாம் புத்தகத்துக்கு வெளியீட்டு விழா, நீ பேசறீயா என்று பா.ராகவன் கேட்க, ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன். புத்தகம் சென்ற புதன்கிழமை என்னிடம்
வந்தது. வெள்ளியிரவுதான் தொட முடிந்தது. 560 பக்கங்கள். குட்டி சைஸ் தலையணை. திங்கட்கிழமை ஆம்பூர் போய்ச் சேரும்வரை படித்துக்கொண்டே இருந்தேன். தேர்வுகளுக்குக் கூட இப்படி படித்திருக்க
மாட்டேன்!!!
ஆனால், அற்புதமான வாசிப்பு. எளிமையான மொழியில், மதரீதியான பிரயோகங்களைப் பெருமளவு குறைத்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், ஒரு முக்கியப் பணியைச் செய்யவே உருவாகியிருக்கிறது.
இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் உலவும் பல்வேறு தவறான எண்ணங்கள்,கருத்துக்களுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது.
1. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
2. திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா?
3. இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை. உண்மையா?
4. இஸ்லாம் அடிமைத்தனத்தைப் பேணுகிறது. உண்மையா?
5. இஸ்லாத்தில் கவிதைக்கு இடமில்லை. உண்மையா?
மிகமிக விரிவாக, ஒவ்வொரு கேள்வியை எடுத்துக்கொண்டு, இந்தக் கேள்வி தோன்றியிருக்கக்கூடிய பின்னணி, அதனுடைய டிப்படையின்மை, பொருத்தமின்மை ஆகியவைகளை, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் துணையோடு தெளிவுபடுத்தியிருக்கிறார், இதன் ஆசிரியரான நாகூர் ரூமி.
இதில் உள்ள தர்க்க நியாயங்களை நீங்கள் படித்துத்ரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வதைவிட, ரூமி சொல்வதை நீங்கள் படித்தால்தான் அதன் நுட்பங்கள் புரியும். என்னை சிந்திக்கத் தூண்டியது, ரூமியின் உழைப்பு. எத்தனை எத்தனை எத்தனை மேற்கோள்கள், உதாரணங்கள், கருத்துக்கள். எண்ணற்ற நூல்களின் ஆழ்ந்த வாசிப்பே, இந்த நூலை எழுத வைத்திருக்கிறது.
அத்துடன், எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம், தொனி. படிப்பவனை மாற்றிவிடவேண்டும் என்ற துடிப்பெல்லாம் இந்த எழுத்தில் இல்லை. இதுதான் உண்மை. உங்கள் தவறான அபிப்பிராயங்களை இங்கே உரசிப்
பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தமுறை, "இஸ்லாமிய தீவிரவாதி" எங்கேனும் எழுதும்படியோ படிக்கும்படியோ நேருமானால், அதற்குள் இருக்கும் முரண் சட்டென எனக்கு உறைக்கும். அதற்கு நிச்சயம் நான் ரூமிக்கே நன்றி சொல்வேன்.
இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்
நாகூர் ரூமி
கிழக்குப் பதிப்பகம்
16 கற்பகாம்பாள் நகர்
மயிலாப்பூர்
சென்னை 4
விலை ரூ.200/-
நன்றி - வெங்கடேஷ், சென்னை