Sunday, July 11, 2004
ஆங்!
திருதிருவென முழித்து 'ஆங்' சொல்லும் அரசியல்வாதி, பெரிய உதடுகளுடன் பல்லிளிக்கும் மூப்பனார், கருப்புக் கண்ணாடியையும் மீறி கலைஞரின் கண்களில் தெரியும் சாணக்கியம், ஆந்தையின் முகத்தை ஞாபகப்படுத்தும் ஜெயலலலிதா என உதயனின் கார்ட்டூன்கள் குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம். உதயம் மறைந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. 1995 இறுதிகளிலிருந்து 1996 எலெக்ஷன் முடியும் வரை தினமணி தலையங்கத்தின் எதிர்ப்புறம் மூலையில் உதயனின் ராஜ்ஜியம் உச்சியிலிருந்தது. ஜெயலலிதா அரசின் அராஜகங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள் வரிசையில் சுப்ரமணியம் சுவாமி, ரஜினி, சோ வரிசையில் உதயனும் உண்டு. உதயனுக்கு அப்புறம்தான் மூப்பனாரையெல்லாம் வரிசையிலேயே சேர்க்கவேண்டும். தேர்தலுக்கு பின்னரும் மத்தியில் நடந்து கூத்துக்களை கார்ட்டூனாக்கி பரபரப்புடன் பக்கங்களை திருப்ப வைத்த உதயன் என்ன காரணத்தினாலோ தினமணியை விட்டுவிட்டு நக்கீரனிடம் சேர்ந்துவிட்டார். கொஞ்ச காலம் உதயனின் கார்ட்டூனுக்காகவே நான் நக்கீரன் வாங்கும்படி நேர்ந்தது. மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மறக்காமல் ஓவியர் அரஸ் கூட்டம் கூட்டியிருந்த செய்தி சமீபத்தில் என்னை நெகிழ வைத்தது. தகவல் கிடைத்திருந்தால் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டாவது வந்து சேர்ந்திருப்பேன். தற்போது உதயனின் தினமணி கார்ட்டூன்களை நக்கீரன் கோபால் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறாராம். ஆனால், வீரப்பனை அரக்கனாக காட்டிய உதயனின் தினமணி கார்ட்டூன் தொகுப்பில் இருக்க உத்திரவாதமில்லை!