Saturday, September 25, 2004

எழுத்து மயக்கம் ?!

ஐகாரஸ் பிரகாஷீக்கு வந்த எழுத்து மயக்கம் ஆச்சர்யமளிப்பதாக மூக்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். மேய்ச்சல் நிலமாக இருந்த தனது வலைப்பூவை இத்தனை காலம் தரிசு நிலமாக்கி வைத்திருந்தது இதற்குத்தானா என்கிற அவரது ஆதங்கத்தில் நியாயமிருப்பது உண்மைதான். ஆனால், போகிற போக்கில் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதை சர்வசாதாரணமான விஷயமாக மூக்கன் சொல்லியிருப்பதுதான் உறுத்தலான விஷயம்.

இணையத்தில் வரும் எழுத்துக்களில் அறுபது சதவீதம் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளில் வருபவையெல்லாமே தரமான எழுத்துக்கள்தான் என்று வக்காலத்து வாங்கி உங்களை நான் சிரிக்க வைக்கப் போவதுமில்லை. சிறுபத்திரிக்கையோ, வெகுஜன பத்திரிக்கையோ கட்டுப்பாடுகள் ஜாஸ்திதான். இணையத்தோடு ஒப்பிடும்போது எதிர்வினைகள் கூட குறைவுதான். ஆனாலும் அச்சு ஊடகத்தின் மீதான காதல் மக்களிடையே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் நாலு முன்னணி புலனாய்வு இதழ்கள், 3 ஆன்மீகப் பத்திரிக்கைகள், மருத்துவத்திற்கென்றும், பெண்களுக்கென்றும் பிரத்யேக பத்திரிக்கைகள் என நாளுக்குநாள் வந்துகொண்டேயிருக்காது. தினமணி சென்றடையாத ஊரில் கூட தினத்தந்தியும் ராணியும் அமோகமாக விற்பனையாகின்றன. முப்பது பக்கத்தில் வரும் இந்தியா டுடேவை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கவும் ஆளிருக்கிறார்கள்.

பிரகாஷாவது கட்டுரை எழுதியிருக்கிறார். எட்டு வருஷமாக எல்லா பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் எழுதியிருந்தும் அந்த மயக்கம் எனக்கு இன்னும் மிச்சமிருக்கிறது. பத்திரிக்கையில் நமது எழுத்துக்கள் பிரசுரமாவது என்பது சினிமா மாதிரி. திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது அது. வாசகர் கடிதத்திற்கே நாலு பேர் படித்துப் பார்த்து விஷயத்தோடு இருந்தால் மட்டுமே என்ட்ரி கிடைக்கும். பத்திரிக்கை படிக்கும் பத்து பேரில் நாலு பேர் கூட வாசகர் கடிதம் பகுதியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பைசா நஹி, பேரும் நஹி! பெரிதாக அங்கீகாரம் எதுவும் கிடையாது. எழுதுவதும் வளவளவென்று இருக்காமல் உருப்படியாக இருக்கவேண்டும். யாரையும் தாக்கியும் இருக்கக்கூடாது. நடக்கப்போறதையோ அல்லது நடந்த விஷயத்தையோ எழுதிவிடக்கூடாது. அநாவசிய வார்த்தை அலங்காரம் இருக்கக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில் எழுதக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில்தான் எழுதியாகணும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வாசகர் கடிதத்திற்கே இப்படியென்றால் கதை, கட்டுரை பற்றி கேட்கவே வேண்டாம். ஆபிஸில் ஆளாளுக்கு கத்தரியும் பிளாஸ்திரியுமாக அலைந்து கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் மீறி பிரசவித்து, அதை வாசகன் படித்து, அதற்கொரு எதிர் வினை வந்தால் நிச்சயம் முற்றும் துறந்த ஞானிக்கு கூட போதை வரும்.

நீங்க எழுதியிருந்ததை பார்த்தேன்னு சொல்றவங்களை விட நீங்களும் எழுதுவீங்களான்னு கேட்கறவங்கதான் அதிகமா இருப்பாங்க. பக்கத்து வூட்ல இருக்கிறவருக்கு கூட விஷயம் தெரியாது. பத்து வருஷம் எழுதினா பத்திரிக்கை ஆபிஸ் உள்ளே மட்டும்தான் பெயர் பரிச்சயமா இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசகர் கடிதமா நான் வரைஞ்சு தள்ளினதுக்கு காரணம், நாலு வரியில நச்னு சொல்ற விஷயம் எனக்கு ஏனோ பிடித்திருந்தது. அதுவே கொஞ்சம் அலுத்து போன சமயத்தில்தான் வலைப்பூ மீது வந்தது காதல். இப்போது என்னுடைய நலம் விரும்பிகள் வாசகர் கடிதம் எழுதினா கையை ஒடித்துவிடுவதாக பல்லைக் கடித்தாலும் பழக்க தோஷத்தை விடமுடியவில்லை!

இணையத்தில் வரும் எழுத்துக்கள் பத்து வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமாகப் போவதில்லை என்கிற நிலையில் வெகுஜன பத்திரிக்கைகளின் பார்வை நமக்கு அவசியம் தேவை. கல்கியில் அவர்களாகவே தேடிக் கண்டுபிடித்து எங்களது வலைத்தளத்தை பற்றி எழுதியிருந்ததால் வந்த ரெஸ்பான்ஸ் என்னை மலைக்க வைத்தது. சினிமா மாதிரி வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் கமர்ஷியல் கட்டாயம் இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையுமே குப்பையாக ஒதுக்கிவிட முடியாது. மேட்டர் கிடைக்காத நேரத்தில் பத்திரிக்கையுலக ஜம்பவான்களெல்லாம் இணையத்தைதான் மேய வருகிறார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். இணைய பத்திரிக்கைகள் என்கிற வட்டத்துக்குள் நம்மை அடக்கிக்கொண்டு வெகுஜன பத்திரிக்கைகளிலிருந்து நாமெல்லோரும் விலகிப்போய்விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அதற்காக இப்படி நீட்டி முழக்கி சுயபுராணம் பேசியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு உங்க மனசுக்குள்ள பிராம்ப்டர் ஓடறதை இங்கிருந்தே என்னால படிக்க முடியுதே!

5 comments:

 1. ராம்கி, வெளிநாட்டில் வாழும் நம்மாளுங்க தான் அப்படி நினைக்கிறாங்க். நம்மூரை பொறுத்தவரை புத்தகத்திலே பேர் வந்தால் ஒரு கிக் தான்.

  எனக்கு கூட என் பேர் பத்திரிகைல வரணும், என் கட்டுரைல்லாம் வெளியாகணும்ன்னு ஆசை இருக்கு. ஆனா கூடவே ஒரு பழமொழியும் ஞாபகத்துக்கு வருது.

  "ஆ.இ.அ,அ.இ.க.மே"

  ReplyDelete
 2. இணையத்தில் வரும் எழுத்துக்களில் அறுபது சதவிகிதம் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை! - இந்த வார காமெடியில் இதை போட்டு விடலாமா?! ;)

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. பிராகாZஇன் "தரத்துக்கு" இந்த விரதமெல்லாம் டூ மச்...!!!

  அதுதான் என்னுடைய பதிவின் ஒரு வரி சுருக்கம்.

  வேறு எந்த புடலங்காய்ம் இல்ல ராசா...

  -mookkan

  ReplyDelete
 5. Did you see SivaG.Ramkumar live interview in Podhigai - DD5 yesterday night ? Chandramukhi snippets were shared. He told lot of ladies stuff will be there in the movie. (sentiment stuff)

  - Vijay K

  ReplyDelete