Monday, January 17, 2005

காமேஸ்வர கடற்கரை...

பொங்கல் திருநாள். வழக்கமான விசேஷங்கள் எதுவுமில்லை இந்த வருஷம். காலை பதினோரு மணிக்குத்தான் உள்ளூர் நண்பர் ஒருவர் தொலைபேசினார். காமேஸ்வரம் என்கிற கடற்கரை கிராமத்தில் தனக்கு ஒரு நண்பர் இருப்பதாகவும் அந்தப்பகுதியில் சில உதவிகள் தேவைப்படுவதாகவும் சொன்னார். முதல்நாள் போகியன்று சாயந்திரம்தான் சீர்காழி பகுதிகளுக்கு 220 தரைவிரிப்புகளை அனுப்பி வைத்திருந்தேன். நேரிடையாக மக்களுக்கு விநியோகிப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. சிவில் சப்ளை குடோனுக்கு சென்று கொடுத்தால் அரசுத் தரப்பில் அவர்களே தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகித்துவிடுகிறார்கள். அதற்கு சீர்காழி தாண்டி எருக்கூர் வரை சென்று கொடுத்துவிட்டு வரவேண்டும். அங்கே கொண்டுபோய் கொடுப்பதை விட முடிந்தவரை நேரடியாக விநியோகிப்பதே நல்லது என்று அரசுப்பணியிலிருக்கும் நண்பர் ஆலோசனை சொன்னார். எதிர்பாராமல் வந்த அரிசி மூட்டைகளை சர்வ சுதந்திரமாக உலா வரும் எலிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பும் வந்து சேர்ந்துவிட்டது.நண்பரிடமிருந்து தகவல் வந்ததும் ரெடியாகிவிட்டேன். ராமேஸ்வரம் தெரியும், அதென்ன காமேஸ்வரம் என்று ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். நாகையிலிருக்கும் அறுசுவை பாபுவை தொடர்பு கொண்டேன். காலையில்தான் சென்னையிலிருந்து திரும்பியதாகவும் அவர் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் உதவிகள் எதுவும் தேவைப்படாது என்று சொல்லிவிட்டார். சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் காமேஸ்வர யாத்திரைக்கு ரெடியானேன். மற்ற நண்பர்களுக்கு தகவல் சொல்லி வாகன வசதிக்கு ஏற்பாடு செய்து, பேக்கிங்கை காரில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையிலிருந்து கிளம்பவே நாலு மணியாகிவிட்டது. நாகப்பட்டினம் போகவேண்டியதில்லை என்பதால் திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்வது என முடிவானது.காமேஸ்வரம், வேளாங்கண்ணி - கோடியக்கரை மெயின்ரோட்டில் சரியாக ஏழாவது கி.மீட்டரில் இருக்கிறது. மெயின் ரோட்டிலேயே இடதுபுறமாக அரதப்பழசாக இருக்கும் காமேஸ்வர காலனி போர்டு இருட்டி விட்டதால் கண்ணில் படவேயில்லை. கொஞ்சநேர அலைக்கழிப்புகளுக்கு பின்னர் போர்டை கண்டுபிடித்து அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்று நண்பர் வீட்டை அடைந்தோம். அன்புத்துரை என்னும் அந்த நண்பர் தலைஞாயிறு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்பவர். கல்யாண வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது போல தடபுடலாக வரவேற்று ஏரியா பக்கம் அழைத்து சென்றார். தரைவிரிப்பை விட அரிசி மூட்டைகளுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்தது.பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெள்ளந்தியாக இருந்தார்கள். ஆனால் பலர் பிரமாதமாக பேசினார்கள். கிளி பேச்சு போல ஒரு வார்த்தை பிசகாமல் தங்களது கஷ்டத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். சுனாமி அனுபவத்தை விவரிக்கும்போது 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் டச்சிங். நண்பரிடம் விசாரித்ததற்கு ஆரம்ப கட்ட நிவாரணமான ஐந்தாயிரம் ரூபாய் போனவாரமே வந்துவிட்டது என்றும் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அரசே இந்தியன் வங்கியில் எல்லோருக்கும் கணக்கு ஆரம்பித்து லட்சரூபாய் நிவாரண தொகையை செக்காக வழங்கிவிட்டது என்று தெரிவித்தார்.காமேஸ்வரம் மீனவர் காலனி, பூம்புகாரின் வாணகிரி கிராமத்தை ஞாபகப்படுத்தியது. ஆனால் குடியிருப்புகள் கடலிலிருந்து ஐந்நூறு அடி தள்ளியே இருக்கின்றன. இருட்டிவிட்டதால் படங்களை எடுப்பதற்குள் எனது டப்பா காமிரா படுத்தி எடுத்துவிட்டது. தரைவிரிப்புகளையும் அரிசியையும் விநியோகித்துவிட்டு கடற்கரைக்கு கிளம்பும்போதே இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.கடல் வழக்கத்தை விட தற்போது இருநூறு அடி உள்ளே தள்ளி இருப்பதாக உள்ளூர்வாசிகள் சொன்னார்கள். வேளாங்கண்ணியில் இறந்தவர்களில் எட்டு பிணங்கள் இங்கே வந்து ஒதுங்கியதாக சொன்னார்கள். கடற்கரையோரமாக ஒரு கட்டிடம் சுக்குநூறாக உடைந்து கிடந்து. லட்சக்கணக்கான செலவில் கட்டப்பட்ட மீன்பிடி சேகரிப்புக் கூடமாம். 'திறமையான' ஒரு கட்டிட காண்டிராக்டரின் கைவண்ணம்!சுனாமி பயங்கரத்திற்கு பின்னர் கடற்கரை பக்கம் யாருமே வருவதில்லை என்பதற்கு அடையாளமாக காலடித்தடமே படாத கடற்கரை மணல்வெளிகள். நண்பர் ஒருவர் டார்ச் அடித்து காட்டினார். நண்பரின் செருப்பின் மீதேறி ஒரு நண்டு குடுகுடுவென்று ஓடிய காட்சியும் காமிராவில் சிக்கியது.பக்கத்திலேயே ஒரு சவுக்கைமர காடு. காட்டின் நடுவே எசுகுபிசகாய் சிக்கியிருக்கும் ஒரு பெரிய போட். எழுபதுகளில் வந்த சினிமாக்களில் கடத்தல்கார ஹீரோ காட்டுக்குள் ஒளித்து வைத்த மாதிரி இருந்தது. இன்னொரு பக்கம் கரையோரமிருக்கும் அத்தனை செடிகொடிகளும் தரையில் சாய்ந்து கிடக்கின்றன. இலைகளெல்லாம் பட்டுப்போய் அது கலவர பூமிதான் என்பதை பளிச்சென்று காட்டுகின்றன. இருட்டில் டார்ச் அடித்து பார்ப்பதால் கூடுதலாக பயங்காட்டுகின்றன.

உள்ளுர் நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் பார்த்தால் நான்கு அடி ஆழத்தில் வரிசையாக இருபது அடிக்கு ஒரு பள்ளம். சுனாமி அலைகள் மேலேழும்பி லேண்ட் ஆன இடமாம். நான்கு அடி ஆழத்தை ஏற்படுத்த வல்ல அலைகளென்றால் அதன் வீச்சு எப்படி இருந்திருக்கும்?திரும்பி காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு நண்பர் சுட்டிக்¡ட்டிய இடத்தில் குப்பையாக எதையோ குவித்து வைத்திருந்தார்கள். மார்கழி மாசத்து குளிரில் ராத்திரி பத்து மணிக்கு உப்புக்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தபோது அவர் சொன்ன விஷயம் உடம்பை கொஞ்சம் உலுக்கிப்போட்டது

'இங்க தான் ஏழு பிணத்தை ஒன்ணா போட்டு புதைச்சாங்க...'
காருக்குள் வந்தபின்பும் பேஸ்தடிச்சு போயிருந்தவனிடம் காமிராவை பிடுங்கி என்னையும் ஒரு க்ளிக்கினார் நண்பர். திரும்பி வேளாங்கண்ணி முக்கூட்டு ரோட்டிற்கு வரும்போது மணி ராத்திரி பதினோரு மணி. உள்ளே இரண்டே கி.மீ தூரத்தில் சர்ச். சர்ச் பக்கம் சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசைதான். ஆனால் அர்த்த ராத்திரியில் போனால் என்ன இருக்கப்போகிறது என்பதால் அரைமனதோடு மயிலாடுதுறை திரும்ப தயாரானோம்.ஒரு டீ குடித்துவிட்டு சுற்றுவட்டாரத்தை நோட்டமிட்டபோது பெரிதாக இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது போல தெரியவில்லை. வழக்கம்போல் பயணிகள் மூட்டை முடிச்சுகளோடு வந்து இறங்கியபடிதான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை சர்ச் நிர்வாகம் தத்தெடுத்துக் கொண்டது போலவே எல்லா உதவிகளையும் முன்னின்று செய்வதாக சொன்னார் கடைக்காரர். மக்களிடம் அநாவசியாக பீதி ஏற்பட்டிருக்கிறது என்று ஆதங்கத்தோடு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். படுத்துப்போன கடை வியாபாரம்தான் அவரை பேச வைக்கிறது.

பிரச்னையே இதுதான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைத்துவிடுகிறது. கடற்கரையிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்துகொண்டு சுனாமியால் மறைமுகமாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் மத்தியில் விரக்த ஜாஸ்தி. இது தவிர அந்தந்த ஏரியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட்டில் இடம்பெற்றுவிடலாம். யார் யாருக்கு நிவாரணங்கள் கொடுப்பது பற்றிய பஞ்சாயத்து நடக்கிறது. சில இடங்களில் பிரச்னை முற்றி மோதலாக வெடிக்கிறது. வழக்கம்போல் பஞ்சாயத்து பண்ண வருபவர்கள்... வேறு யார்... நம்மூர் கரை வேஷ்டிகள்தான்!

சேவை செய்ய வந்திருக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருக்கின்றன. கோட் சூட் போட்டுக்கொண்டு பத்துபேர் புடை சூழ நிற்பவர்களிடமிருந்து நான்கு மீனவர்கள் உதவி பெறுவது போல் வரும் படங்களால் பத்திரிக்கையின் ஆறாவது பக்கம் நிறைகிறது. பள்ளிக்கூடங்கள் சொற்ப மாணவர்களுடன் செயல்பட ஆரம்பித்துவிட்டன. கட்டுமரங்களை கைவசம் வைத்திருக்கும் மீனவர்களும் கடலை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்துவிட்டனர். சுனாமிக்காக கடலோரத்தில் பாதுகாப்பு அரண் வைக்கப்போகிறார்களாமேன்னு பேச்சை ஆரம்பித்தால் லேசான புன்னகை வருகிறது. கிண்டலா, விரக்தியா தெரியவில்லை. முட்டி மோதித்தான் உதவிப்பொருட்களை வாங்கவேண்டிய அவசியம் யாருக்குமில்லை. ஆற அமர இருந்த இடத்திற்கே வந்து கொடுத்துவிட்டு செல்கிறார்கள். யாருக்கும் சுனாமி எதனால் வந்தது, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை. 'அகப்பட்டதை சுருட்டுடா'ங்கிற தத்துவம்தான் இங்கே டாலடிக்கிறது.

இன்னொரு சுனாமி வரும்வரை இதுதான் இயல்பு வாழ்க்கை!

7 comments:

 1. //'அகப்பட்டதை சுருட்டுடா'ங்கிற தத்துவம்தான் இங்கே டாலடிக்கிறது.// கஷ்டந்தாங்க ராம்கி. இவர்களுக்கு உதவி செய்வோர்களை அடுத்தமுறை யோசிக்கவைக்காமல் இருந்தால் சரி.

  ReplyDelete
 2. //'அகப்பட்டதை சுருட்டுடா'ங்கிற தத்துவம்தான் இங்கே டாலடிக்கிறது.// கஷ்டந்தாங்க ராம்கி. இவர்களுக்கு உதவி செய்வோர்களை அடுத்தமுறை யோசிக்கவைக்காமல் இருந்தால் சரி.
  -இராதாகிருஷ்ணன்

  ReplyDelete
 3. ராம்கி,
  நல்லது. உங்களது அயராத உழைப்பு பலரது வாழ்வில் ஒளி யேற்றும். உங்களுக்கு நன்றிகள்.
  அன்புடன்
  பாலாஜி-பாரி

  ReplyDelete
 4. This is just to inform you that I have written something about you at http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_19.html . I was forced to write, and I thought you should know about that.

  anbuLLa vasanth.

  ReplyDelete
 5. Sorru it was me, rosavasanth, came as anony. I am refereing to the comment section.

  ReplyDelete
 6. வஸந்த்,

  பார்த்தேன். ஆபாசம் என்றால் 'முத்து' பாடலும் ஆபாசம்தான்; காலச்சுவடு கவிதைகளும் அப்படித்தான். 'முத்து'வை பொறுத்தவரை இதெல்லாம் தவறான விஷயமென்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். வணிக சினிமாவில் இதெல்லாம் தவிர்க்க முடியாது விஷயமென்று சொல்வார்கள். எல்லோருமே இதை நியாயப்படுத்தத்தான் நி¨னைக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு சினிமாக்காரர்களை விட அதிக சமூக பிரக்ஞை இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஜாதி நான்.

  மற்றபடி ரஜினி ரசிகனாக இருப்பதுதான் எனது பலம். அதுவே சில சமயங்களில் பலவீனமும் கூட.

  ReplyDelete