Wednesday, January 26, 2005

சுனாமி பாடம்

தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அரசு கட்டிக்கொடுத்திருக்கும் குடியிருப்புகளில்தான் தற்போதைக்கு வாசம். இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்க ஏனோ தயக்கமிருக்கிறது. வேளாவேளைக்கு தேவையான அரிசி, பருப்புகள் அரசாங்க குடோன்களிலிருந்து அன்றாடம் கிடைத்துவிடுகிறது. ஐந்து வருஷத்திற்கொரு முறை வரும் அரசியல்வாதியும் எப்போதாவது வரும் அதிகாரியும் இப்போது அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குப்பத்திலும் புதிதாக ஒரு காவல் நிலையம். நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் வரும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நவீன நாட்டாண்மை அலுவலகங்களாக சிறப்பாகவே செயல்படுகின்றன.



இடம் - மேலமூவர்க்கரை மீனவர்குப்பம், சீர்காழி

யுவ கேந்திரா அமைப்பிலிருந்து சிலர் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் குறைகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். என்ன வேண்டும் என்கிற கேள்விக்கு திணறல்தான் பதிலாக வருகிறது. ஆனாலும் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஒரு லட்சம் கொடுக்கிறது என்பதால் தப்பி வந்தவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும் கடலோரத்திலிருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் என்பதால் மீனவர் குப்பத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வசிப்பவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும்... ஆக, ஆங்காங்கே வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. (ஆண்டவனால் கூட திருப்திப்படுத்த முடியாத பிறவின்னா அது மனுஷன்தான்னு எங்கேயோ படித்த ஞாபம். அதை இங்கே வந்து இடிப்பதற்கு...மன்னிக்கவும்!)

சுனாமி பற்றி முழுமையாக யாருக்கும் தெரியாமலிருப்பதுதான் வேதனையான விஷயம். ஏதோ காத்து, கருப்பு எங்களை துரத்திக்கிட்டு வந்துச்சு என்கிற ரீதியில்தான் அவர்களது பேச்சு இருக்கிறது. ஆறுதல் சொல்ல வருகிறவர்களும் சரி, நிவாரணப்பொருட்களை சுமந்து வருபவர்களும் சரி சுனாமி அலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்று யாருக்குமே தோணவில்லை. போனவாரம் சுனாமி அலைகள் வரும் காரணம் பற்றி விபரமாக விவரித்த திண்ணை கட்டுரையை பல பிரதிகளாக எடுத்துக்கொண்டு போய் விளக்கி சொன்னால் கொஞ்சாமாவது புரிந்து கொள்வார்களா என்பதை பற்றித்தான் தற்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். அடுத்த என்ன லாரி வரும் என்று ஆவலாக காத்திருப்வர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடாது.

அடுத்த ஆண்டு முதல் சுனாமி அலைகள் பற்றிய குறிப்பு எல்லா வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஓகே. பெரியவர்களுக்கு? பிரம்மகுமாரிகள் சங்கம் போல பெரிய பெரிய படங்களில் சுனாமி அலைகள் வருவதன் காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை மீனவர்கள் குடியிருப்புகள் பக்கம் கிளாஸ் எடுப்பது நல்லது. நிவாரணப் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து இங்கே கொட்டுவதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் இறங்கலாம். இல்லாவிட்டால், 'திரும்பவும் 26ஆம் தேதி சுனாமி வரும்னு பேப்பர்ல போட்டிருக்கானே.. வருமா ஸார்'ங்கிற விசாரணைக்கு பதில் சொல்ல முடியாமல் முழிச்சுட்டு நிற்கவேண்டியதுதான்!