Thursday, January 27, 2005

மயிலாடுதுறையின் அறிவகம்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி போகும் சாலையில் கொத்த தெரு பெரிய மாரியப்மமன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கொஞ்சம் உள்ளடங்கியே இருக்கிறது அறிவகம். தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையினால் நிர்வகிக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம். 90களில் நான் பள்ளி வாழ்க்கையில் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட காப்பகம். நாற்பது குழந்தைகளோடு ஆரம்பித்த இந்த காப்பகத்தில் இப்போது இருப்பதோ நூற்றி இருபது குழந்தைகள்.ஏற்கனவே நான்கு பெட்ஷீட்கள் வைத்திருக்கும் மீனவ குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு பெட்ஷீட்டை கொடுப்பதற்கு பதிலாக நிஜமாகவே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற நண்பர்களின் ஐடியா பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு தகவல் கிடைத்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரையோர மீனவர் குப்பங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் மூன்று பேர் இந்த அன்பகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்தது அந்த செய்தி. நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது தகவலை உறுதி செய்தார்.காப்பகம் இருக்கும் பகுதியின் கவுன்சிலர், குடும்ப நண்பர். படித்துவிட்டு சிவனே என்று பெட்டிக்கடை நடத்தி வந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாக நிற்க வைத்து, மக்கள் இரண்டு முறை வெற்றிக்கனியையும் கையில் கொடுத்துவிட்டார்கள். காப்பகத்திற்கு உதவிகள் கிடைக்காமல் இருந்த காலத்திலெல்லாம் கவுன்சிலர்தான் ஆதரவளித்து வந்ததாக சொல்கிறார்கள். காப்பகத்தோடு தொடர்புடையவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பொருட்களை கொடுப்பதே நல்லது என்று நினைத்து அவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம்.காணும் இடமெல்லாம் செடி, கொடிகளை வளர்த்து காப்பகத்தையே பச்சை பச்சையாக வைத்திருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் வாகன இரைச்சல்களின் பாதிப்பு குறைவாக இருக்கிறது. தங்குமிடம், பள்ளிக்கூடம், உணவுக்கூடம் என்று எல்லாவற்றிற்கும் தனித்தனியாக கட்டிடங்கள் கட்டிவைத்து அழகான தமிழ்ப் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். ஏரியாவை ஒரு ரவுண்டு போய்விட்டு வந்துவிடலாம் என்று நினைத்து முதலில் சாப்பாடு கூடத்திற்கு சென்றோம். யாரோ ஒரு ஸ்பான்ஸர் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது பெயரையும் குடும்பத்தினரது பெயர்களையும் தங்களால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்து கோரஸாக உச்சரித்து தங்களது நன்றியை தெரிவித்துவிட்டு குழந்தைகள் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.·பார்மாலிட்டிக்காக யாரையாவது ஒருத்தரை நிற்க வைத்து பெட்ஷீட்டை கொடுத்து ·போட்டோ எடுத்துக்கொள்வதை இதுவரை முடிந்தவரைக்கும் தவிர்த்து வந்தேன். ஆனால் இங்கே முடியவில்லை. நிர்வாகியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் கூட வந்த நண்பரையும் கவுன்சிலரையும் பொருட்களை கொடுக்கச் சொல்லிவிட்டு காமிராவை கையிலெடுத்துக் கொண்டேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை கூப்பிட்டு பெட்ஷிட்டை வாங்கச் சொல்லிவிட்டார் காப்பக நிர்வாகி. பழைய துணிகளையே பார்த்தும் வாங்கியும் பழக்கப்பட்டு போன காப்பக குழந்தைகளுக்கு கண்ணை பறிக்கும் கலரிலிருந்த பெட்ஷிட்கள் ரொம்பவே கவர்ந்துவிட்டன. காப்பகத்திற்குள்ளேயே எம்ப்ராய்டரி செய்வதற்கான சாதனங்கள் இருக்கின்றன. பெட்ஷீட்களை வாங்கிய கையோடு நான்கு பெண்கள் சேர்ந்து உட்கார்ந்து பெயர்களை எழுதும் எம்ப்ராய்டரி வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.கட்டுமரங்கள் கிடைத்து வசிப்பதற்கு தனியாக வீடும் கிடைத்துவிட்டால் மீனவர்களின் வாழ்க்கை பழையபடி இயல்புக்கு திரும்பிவிடும். இதுபோன்ற ஆதரவற்ற மனநலம் காப்பகங்களின் நிலைமையோ எப்போதும் இப்படித்தான். ஆனாலும் சுனாமிக்கு பின்னர் மீனவர் குப்பங்களுக்கு மட்டும் என்றில்லாமல் எல்லா ஆதரவற்ற காப்பகங்களுக்குமே நிதியுதவியிலிருந்து நிவாரணப் பொருட்கள் வரை கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இது உண்மையிலேயே ஆறுதலான விஷயம்தான். நாங்கள் போன நாளன்று கூட UNICEFலிருந்து அதிகாரிகள் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இந்த காது கேளாதா, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு தேவையான பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். இனி அடுத்த வருஷத்தை பற்றித்தான் அவர்களுக்கு கவலை!

9 comments:

 1. அன்பு நண்பர் ராம்கிக்கு
  ஏவிசி கல்லூரியில் படித்தப் பொழுது, பேராசிரியர் முனைவர் திரு செம்பியன்
  தலைமையில் நாங்கள் நுண்கலைமன்றம் சார்பாக நம் காது கேளாத, வாய் பேசாத
  குழந்தைகளுக்கு "இசை நிகழ்ச்சி" நடத்தினோம். ஒவ்வொருமுறை தமிழகம் வரும்
  பொழுதும் "அறிவகம்" செல்வது கோவிலுக்கு செல்லுவதைவிட மனம் அமைதியை தரும்.
  அதன் நிர்வாகிகள் கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துக்
  கொண்டவர்கள். நீங்கள் அங்குச் சென்று வந்து அதனைப் பற்றி எழதியது மனதிற்கு மிக்க
  மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.பாராட்டுகள்...

  அன்புடன்
  மயிலாடுதுறை சிவா.
  வாசிங்டன்.

  ReplyDelete
 2. I second MP Siva's comment above. Kudos, Ramki, for another well-executed act of thoughtfullness.

  ReplyDelete
 3. மிக அருமையான செயல்.
  வாழ்த்துக்கள் ராம்கி.
  அன்புடன்,
  கணேசன்.

  ReplyDelete
 4. தகவல்களுக்கு நன்றி இராம்கி.மனம் நிறைகிறது.

  'மன நலம் பாதிக்கப்பட்ட' என்பது 'மன நலம் சோதிக்கப்பட்ட' என்றிருந்தால் கொஞ்சம் இதமாயிருக்கும்.

  சிறப்பு குழந்தைகளை நேரில் பார்க்கவாவது மயிலாடுதுறை போகவேண்டும்,அடுத்த பனிக்காலத்தில்.

  நன்றி.

  வாசன்

  ReplyDelete
 5. அன்புள்ள ராம்கி,

  மிகவும் நல்ல காரியம்! பாராட்டுக்கள்.

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 6. அன்பின் இராம்கி, சிவா சொல்வது அன்பகம் இல்லையோ.. அதுதான் வக்கீல் ஞானசம்பந்தமும் அவர் மனைவியும் இணந்து நடத்துவது. எங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் மிக நல்ல நண்பர். அவர் வாழ்நாள் சேமிப்பு மற்றும் வாழ்வையே இந்த குழந்தைகளுக்கு அளித்திடருப்பவர். இந்த அறிவகம் என்பது வேறா? இல்லை இரண்டும் ஒன்றேவா?

  ReplyDelete
 7. அன்பு சீமாச்சு
  இரண்டும் ஒன்றுதான். திரு ஞானசம்மந்தமும், திருமதி ஞானசம்மந்தமும்
  முழு நேரமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். எப்பொழதும் இன்முகத்துடன்
  காணப்படுபவர்கள்.
  நன்றி.
  சிவா.
  வாசிங்டன்.

  ReplyDelete
 8. ரொம்ப சந்தோஷம் சிவா... அன்பகம், அறிவகத்துக்கு நிறைய முறை அப்பா, அம்மா, சகோதரிகள் சென்றிருக்கிறார்கள். நான் பொருளாதார உதவிகளுடன் சரி.. செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.. 1984-88 வாக்கில் அன்பகம் மகாதானத்தெருவில் (கிருபா கிளினிக் அருகில்) இருந்தது. அப்பொழுது அதிகமாகச் சென்றிருக்கிறேன்.. அந்தக் குழந்தைகளுக்கு எப்பொழுதுமே எங்கள் குடும்பத்தில் ஒரு தனி அன்பு உண்டு..
  அம்மா காலமான பொழுதுகூட வக்கீலும், அவர் மனைவியும் வந்திருந்தார்கள்.. பெரிய்ய தொண்டுள்ளம் கொண்ட்வர்கள் அவர்கள். நான் தேசிய மேல்நிலைப்பள்ளியில் (1980) இண்டராக்ட் க்ள்ப் துணைத்தலைவர்ஆக இருந்த்பொழுது வக்கீல் ஞானசம்பந்தம் அவர்கள் தான் ரோட்டரி சங்கத்தலைவர். ஒரு வகையில் எனக்கு சமுகத் தொண்டை அறிமுகப்படுத்தியதே அவர் தான்.
  என்றென்றும் அன்புடன், சீமாச்சு...

  ReplyDelete
 9. நன்றி சிவா, ஸ்ரீகாந்த், கணேசன், வாசன், துளசி, சீமாச்சு

  அன்பகமும் அறிவகமும் ஒன்றுதான். எனக்கு தெரிந்து அறிவகம் கொத்ததெருவில் 1991 முதல் செயல்பட்டு வருகிறது. திரு. ஞானசம்பந்தம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது சமூக பாதுகாப்புத்துறையின் உயர்மட்டக்குழுவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. நாகை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் அறிவகமும் ஒன்று.

  நன்றி வாசன். இனிய 'சோதிக்கப்பட்ட குழந்தைகள்' என்றே எழுத தொடங்கலாம். இன்னொரு விஷயம், அறிவகம் ஆதரவற்றோர் இல்லம் மட்டுமல்ல. கைவிடப்பட்டோர் இல்லமும் கூட.
  பெற்றோர்களால் வலுக்கட்டயாமாக அறிவகத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட சோதிக்கப்பட்ட குழந்தைகளின் கதையை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்.

  ReplyDelete