Monday, January 31, 2005

சின்னங்குடியும் சீட்டாட்டமும்



சின்னங்குடி. ஆக்கூர் முக்கூட்டிலிருந்து இடது புறமாக திரும்பி பொறையார் சாலையில் தொடராமல் நேராக வண்டியை விட்டால் கிட்டதட்ட திருக்கடையூர் கோயிலுக்கு பின்புறமாக ஆறாவது கிலோ மீட்டரில் அமைதியான மீனவர் குப்பம். ஊர் எல்லையிலேயே பழைய துணிகளை குவித்து வைத்திருந்தாக வேண்டும் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை.



ஊர் எல்லையிலேயே பெரிய சைஸில் புயல் பாதுகாப்பு மையம் இருக்கிறது. மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நான் பார்த்திராத விஷயம். ஆனாலும் இந்த மெகா சைஸ் மண்டபத்தின் வாசலில் ஒரே ஒரு ஆட்டை தவிர வேறு ஜந்துக்களே இல்லை.



கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டதால் மோட்டார் வைத்து நீரை இறைப்பதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரண உதவி எதுவுமில்லை என்பதால் புலம்பல்கள் கொஞ்சம் ஜாஸ்திதான். பக்கத்திலிருக்கும் தரிசு நிலத்தை திரும்பிக்கூட பார்க்காமல் விளைச்சல் நிலத்தின் மீது சுனாமி அலைகள் கண் வைத்ததுதான் சோகம்.



சுனாமியால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தனியாக தற்காலிக குடியிருப்பு கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். யார் செய்தார்கள், எப்போது செய்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் குறிப்புமில்லை. உள்ளூர்காரர்களிடம் விசாரித்தால் எல்லாம் தன்னார்வ அமைப்புகளின் பணிகள் என்கிறார்கள். கஷ்டப்பட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்பை கட்டி
முடித்ததும், தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் முடிந்து வரும் போலீஸ் மாதிரி அரசு ஜீப்பில் அதிகாரிகள் வந்து 'தமிழ்நாடு அரசு' சீல் வைத்துவிட்டு போகிறார்கள்!



'எல்லாம் கிடைக்கிறது ஸார். நேத்து கூட யாரே வந்து வேஷ்டி சேலையெல்லாம் கொடுத்துட்டு போனாங்க... ஆரம்பத்துல எல்லோருக்கும் ஒரு பெட்ஷிட் கொடுத்தாங்க.. அதுக்கப்புறம் ஒண்ணுமில்லை. நீங்க கொடுங்க.. யூஸ்·புல்லா இருக்கும்'னு ஒரு +2 சிறுசு கொடுத்த ரெக்கமெண்டஷனால் தெம்பாகி மாரியம்மன் கோயில் வாசலில் வைத்து வேலையை ஆரம்பித்தோம்.



அடுத்த கடற்கரையோர ரவுண்ட் அப். மீன்பிடி தொழில் அதிகமாக இல்லாத இடம் என்பதை கடற்கரையோரத்தில் உலா வரும்போதே தெரிந்து விடுகிறது. மீனவர் குப்பத்திற்கும் கரைக்கும் இடையே தடுப்புச்சுவர் போல கருவேலம் செடி புதர்களாகி அண்டி கிடக்கின்றன. புதர்களுக்கிடையே ஆங்காங்கே சில படகுகளும் சிக்கி கிடக்கின்றன. 'நிறைய பொணம் இங்கே புதர்ல மாட்டிக்கிடந்துச்சு'ன்னு காதோரமாய் வந்த தகவலால் படகுகள், மனித சடலங்கள் மாதிரி கண்ணில் பட்டு பயமுறுத்தின.



புதர்களையெல்லாம் கொளுத்தியிருந்தால் கூட இந்தளவுக்கு இருந்திருக்காது என்று சொல்லும் விதமாக கடல் அலைகள் புதர்களை மூழ்கடித்து பட்டுப் போக வைத்திருக்கின்றன. சுனாமி அலையின் வேகத்தை மட்டுப்படுத்திய இந்த கருவேலம் செடிகளின் தியாகத்தால்தான் சின்னங்குடியில் சில உயிர்கள் நடமாடுகின்றன என்பதை மறுக்க முடியாது.



இது ஐம்பது வருஷத்துக்கு முந்தி கட்டப்பட்ட கோயில். புயல், மழையெல்லாம் கோயிலை இந்த கதிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஏற்கனவே இங்கிருந்த மாரியம்மனுக்கு புதிதாக ஊருக்கு நடுவே கோயில் கட்டியிருக்கிறார்கள். அதன் வாசலில் வைத்துதான் நாம் போர்வை, தரைவிரிப்புகளை விநியோகம் செய்திருந்தோம். பக்கத்திலிருந்த வீடுகளும் தண்ணீர் தொட்டிகளும், மீன்கள் காய வைக்கும் இடமெல்லாம் சுனாமி தாக்குதலில் சுக்குநூறாக ஆயிருந்தாலும் இந்த பழைய கோயிலை மட்டும் அலைகளால் அசைக்க முடியவில்லை.

200 பேர் வசிப்பதற்கென்று குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் பல பேர் ரோட்டோரமாய் உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். இளவட்டங்கள் ஊர் எல்லையிலேயே ஏதாவது நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வேன் வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அறுபது ரூபாய் பாய், இருபது ருபாய்க்கு பெட்டிக்கடையிலேயே கிடைப்பதுதான் சுனாமியின் பெரிய தாக்கம்!



ஒரு பக்கம் எங்கிருந்தோ வந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் பள்ளத்தைத் தோண்டி மூங்கிலை நட்டு மீனவர்களுக்கான குடியிருப்பு வேலைகளில் மும்முரமாக இருக்க இன்னொரு பக்கம் பொழுது போகாமல் மீனவர்கள் சீட்டாடிக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை!