Monday, June 20, 2005

டிவியோபியா

டி.வி பார்ப்பது ஒரு பொழுது போக்கு விஷயமாக இருந்த காலம் போய் பொழுது போக்கே டி.வி பார்ப்பதுதான் என்கிற காலமும் வந்தது. அப்போதும் டி.வியில் வரும் நல்ல சங்கதிகளே கண்ணில் பட்டதேயில்லை. சன், ராஜ் செய்திகள், தூர்தர்ஷன் செய்திகளையெல்லாம் சேனல் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு குறை கண்டுபிடிப்பதே வேலையாக இருந்தது. இன்றும் டி.வியில் ரசித்து பார்ப்பது காமெடி காட்சிகள் மட்டும்தான். இல்லாவிட்டால் என்டிடிவி. 'அரட்டை அரங்கம்' ரொம்ப காலம் வரை பிரியமான புரோகிராமாக இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சிக்காக டி.வி முன் தவம் கிடந்த சம்பவங்களெல்லாம் இப்போது காமெடியாகியிருக்கின்றன.

நினைவு தெரிந்து பார்த்த மெகா தொடர், 'இவளா என் மனைவி ?!' சீரியலை பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு பின்னர் படிப்புக்காலம் (பத்தாவது முதல் பிளஸ் டு வரை) வந்துவிட்டது. அப்போது டி.வி கிட்டதட்ட எங்கள் வீட்டின் பரணில் இருந்தது. காலேஜ் வாசலை மிதித்த பின்னர் ரசித்து பார்த்த இன்னொரு தொடர், 'மேல் மாடி காலி'. மத்தியான நேரத்தில் யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்று என்னால் அலட்சியப்படுத்தப்பட்ட 'விழுதுகள்' செம ஹிட். அவ்வப்போது பார்த்து விட்டு எழுதவும் செய்திருக்கிறேன். நியூஸ் முதல் சீரியல் வரை சகலமும் உண்டு.தினமலர் டிவிமலர், தினமணி ஞாயிறுமணி என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்போதெல்லாம் பாராட்டை விட கிண்டல்தான் அதிகமாக வந்து விழும். கையை பின்னுக்கு தூக்கி வடிவேலு சொல்லும் பஞ்ச் டயலாக் மாதிரி... 'வாலிப வயசு!'

Image hosted by Photobucket.com

மெகா சீரியல் காலத்தில் தொழில்நுட்ப சங்கதிகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. எதிர்பார்த்த முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்த வசனங்களும் பேசப்பட்டாலும் 'மெட்டி ஓலி'யின் கிளைமாக்ஸ், ஓரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்த விஷயம் ரசிக்க வைத்தது. எல்லா கேரக்டர்களும் கிளைமாக்ஸில் வரவேண்டும் என்பதற்காகவே பின்னணி காட்சிகளில் மற்ற கேரக்டர்களை உலாவ விட்டிருந்தார்கள். 'சித்தி' போல கிளைமாக்ஸில் சொதப்பவில்லை என்பதே 'மெட்டி ஓலி'யின் பெரிய வெற்றிதான். மெகா சீரியல்களை ஓரேயடியாக ஒதுக்கி தள்ளும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை. சினிமாவில் சொல்வது போல கமர்ஷியல் கட்டாயங்களுக்காக, சில வட்டங்களை போட்டுக்கொண்டு உருண்டு வந்தாலும் மெகா சீரியல்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'கெட்டி மேளம்' பார்க்கிறேன். யாராவது அழ ஆரம்பித்தால் விஜய் டி.விக்கு மாற்றிவிடலாம். ரிமோட் பகவான் வாழ்க!

பின் குறிப்பு - திடீர்னு டி.வி பத்தி எழுதுனதுக்கும் அர்த்தமுண்டு. சும்மா தலைகாட்டிட்டு போற கருத்த மச்சான் கேரக்டருக்கு கூட என்னை கமிட் பண்ணாத டி.வி சீரியல் டைரக்டர்களை கண்டிக்கும் வகையில் ஒரு மாசமா டி.வி விமர்சனம் எழுத ஆரம்பித்திருக்கிறேன், தமிழோவியத்தில்!