
காலேஜ் படிக்கிற காலத்தில்தான் அந்தக்கோயில் பழக்கம். 'இந்த சாயந்திர நேரத்துல மேலையூர் பக்கம் போய் என்ன பண்ணப்போறே... காலை ஷோ மட்டும்தானே'ன்னு நண்பர்கள் அடிக்கும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகுவென்று சைக்கிளை மிதித்து கொண்டு செம்பொன்னார் கோயில் சந்து வழியாகக போன இடம். (புரியாதவர்களுக்கு, மேலையூர் மாஸ் தியேட்டர், நம்ம பரங்கிமலை ஜோதி மாதிரி!) கம்மிங் பேக் டு த பாயிண்ட். பூம்புகார் போகும் மெயின் ரோட்டிலேயே குடிகொண்டிருக்கிறார் நம்மவர் பசுபதீஸ்வரர். நினைவு தெரிந்த நாள் முதல் அதே மொட்டை கோபுரம், விரிசலான சுவர், இடிந்து கிடக்கும் சுற்றுப்புறச் சுவர், வற்றிப்போன தண்ணீரோடு குளம் சகிதம் கோயில் அப்படியேதான் இருக்கிறது.

இப்போதெல்லாம் ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் கோயில் பக்கம் போகமுடிகிறது. எப்போது போனாலும் வெளவால், புல் பூண்டுகள் சகிதம் கோயிலின் வலதுகோடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் கெட்அப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. தூசு தட்டிவிட்டு காரை பெயர்ந்து போன தூணில் சாய்ந்து வாசலிலேயே உட்காரும்போது பிள்ளையாரும் பேச ஆரம்பிப்பார். 'நீ வராத இந்த அஞ்சு மாசத்துல என்னை 22 பேரு பார்க்க வந்தாங்க தெரியுமா...'

செருப்பு போட்டுக்கொண்டு சுற்ற வேண்டிய பிரகாரம். காற்று, மழையில் நைந்து போய் அழுக்கேறிய துண்டை சுற்றிக்கொண்டு பெருமிதமாய் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கவேண்டுமானால் காலில் நெருஞ்சி முள் குத்துவதை கண்டுகொள்ளாமல் நடக்கவேண்டியிருக்கும். விஸ்தாரமான பிரகாரங்கள். ஆடு, மாடுகளின் புண்ணியத்தால் புதர் அண்டாமல் இருக்கிறது. சுற்றுப்புற சுவர்களின் செங்கல் அரித்து, சிதைந்து... மனதின் பாரம் இறங்கவேண்டிய கோயில், மனதை இன்னும் கொஞ்சம் பாரமாக்கிறது.

இடிந்து போன முன்மண்டபம், குழந்தைகளின் விளையாட்டு மைதானமாகியிருக்கிறது. நந்திகள் குழந்தைகள் விளையாடும் குதிரைகளாகியிருக்கின்றன. அரைமணிக்கொரு தரம் மினி பஸ் சர்வீஸ். மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கும் பக்தர்களால் நிறைகிறது. பூம்புகார் பக்கம் வந்து செல்பவர்கள் கண்ணை விரித்து வைத்தால் கட்டாயம் சிக்கும் தூரத்தில் கோயில் ரோட்டை தொட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ பேர் பாதையை கடந்து செல்கிறார்கள். யாருக்கும் இறங்கி பார்க்கவேண்டும் என்கிற நினைப்பு வருவதில்லை. ப்ரியா கல்யாணராமன்கள் எழுதிவைத்தாலோ அல்லது ஸ்ரீகாந்த், கோபிகா வகையறாக்கள் ஈஷிக்கொண்டு டூயட் பாடினாலோ இந்த தென்னாடுடைய சிவனுக்கு ஒரு நல்ல காலம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்!