Wednesday, July 06, 2005

நெய்வேலி ரண்டக்க

ஜுலை மாதம் வந்தாலே மீடியாவை ஆக்ரமிக்கும் செய்தி அது. வருஷாவருஷம் நெய்வலி பழுப்பு நிலக்கரி கார்ப்பரேஷன் நடத்தும் புத்தக கண்காட்சிதான். சென்னை புத்தக கண்காட்சிக்கும் நெய்வேலி புத்தக கண்காட்சிக்கும் நிறைய வித்தியாசம். நெய்வேலியில் புத்தக வெளியீட்டாளர்களுக்கு நஷ்டம் சாத்தியமே இல்லாத விஷயம். சென்னையில் இல்லாத குடை ராட்டினம், உற்சாக ஊஞ்சல்கள் சங்கதிகளால் நெய்வேலியில் தாய்க்குலங்கள், குட்டீஸ்களின் கூட்டத்திற்கு உத்திரவாதமுண்டு.

Image hosted by Photobucket.com

கிரிவலம் போவது மாதிரி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். ஒரு பக்கம் மக்கள் உட்கார்ந்து கேட்க வசதியாக பரந்து விரிந்திருக்கும் ஹால். மேடையில் யாரோ தமிழ் இலக்கியத்தின் பெருமையை சுத்த தமிழில் செப்பிக்கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டமும் பாப்கார்னை ருசித்துக்கொண்டே அசுவராசியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. சரியான நேரத்தில்தான் போய் சேர்ந்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணி. சிறந்த பதிப்பகத்திற்கான விருதை கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக பெற்றுக்கொண்டு பேசிவிட்டு, களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் பத்ரி.

Image hosted by Photobucket.com

புத்தக கண்காட்சியை முழுசா ஒரு ரவுண்டு வர நேரமில்லை. எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் (உபயம் புத்தக விளையாட்டு) என்று மனதுக்குள் போட்டு வைத்திருந்த திட்டம் நேரமின்மையால் பணாலானது. ஆடியன்ஸின் பல்ஸ் தெரிந்து எழுதப்படும் புத்தகங்களுக்கு அட்டகாசமான வரவேற்பு இருப்பது நெய்வேலியிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் மிடில் கிளாஸ் நடுத்தர வயது ஆசாமியாக இருந்தால் நேராக வந்ததும் அள்ள அள்ளப் பணத்தை கையில் எடுக்கிறார். டவுசர் பையன்கள் சச்சினையோ, டிராவிட்டையோ புரட்டி புரட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூல் பையன்களை உஷார் பண்ணுகிறது ஒரு புத்தகம். ஜீன்ஸ் பார்ட்டிகளுக்கு இன்னும் அமெரிக்க கனவு மிச்சமிருக்கிறது. நாரயண மூர்த்தி புத்தகத்தில் எத்தனை சைபர் என்பதை மெனக்கெட்டு எண்ணிவிட்டு சரியா தப்பான்னு செக் பண்ணிவிட்டு போகும் சில குசும்பு பார்ட்டிகள். எதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் டாப் ரேட் புத்தகங்கள் என்பதை போட்டோவில் பார்த்தாலே சொல்லிவிடலாம்.

Image hosted by Photobucket.com

நெய்வேலி பத்தி பத்ரி ஜாலியா நிறையவே எழுதிட்டார் என்பதால் அவர் ஸ்டைலில் ஒரு சீரியஸா சில மேட்டர். நெய்வேலி புத்தக கண்காட்சியிலிருந்து பதிப்புலகம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறது. எந்தவொரு எழுத்தாளருக்காகவும் மக்கள் புத்தகங்கள் வாங்குவதில்லை. புதிய புதிய விஷயங்கள், போரடிக்காத நடை, உள்ளதை உள்ளபடியே சொல்வது, தலையணை சைஸிலோ அல்லது வாய்ப்பாடு சைஸிலோ இருந்துவிடாத புத்தகங்கள், கவர்ச்சிகரமான அட்டை, நியாயமான விலை இதெல்லாம் முக்கியம். புரட்டிப் பார்க்கும் வாசகனை பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை திறக்க வைக்கும் காரணிகள்தான் இவை.

Image hosted by Photobucket.com

அழுக்கேறிய அட்டையில், மங்கலான எழுத்துக்களில் சைவ சித்தாந்தம் பேசும் அந்த கனமான புத்தகங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்தபடியே நகருகிறார்கள். ஷெல்பில் பத்து, பதினைந்து புத்தகங்கள்தான் இருக்கும். சாணி பேப்பரில் நெருக்கமாக அச்சிடப்பட்டு, திறந்தாலே ஓ போட வைக்கும் தூக்க மாத்திரை ரக புத்தகங்கள். பதினோரு மணிக்கு திரைச்சீலையை விலக்கி வியாபாரத்தை ஆரம்பித்த அந்த முதியவர் ஒன்பது மணிக்கு கல்லாவை காலி செய்துவிட்டு சொன்ன டயலாக்கை மறக்கவே முடியாது. 'பரவாயில்ல.. இன்னிக்கு 500 ரூபாய்க்கு வியாபாரம் ஆயிருக்கு...' படிக்கும் பழக்கம் மக்களிடம் அதிகமாகியிருக்கிறது என்றெல்லாம் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் காசு கொடுத்து வாங்கும் பழக்கம்?