தொண்ணூற்று இரண்டை விட்டு கீழே இறங்காத தமிழ்தான் கணக்கில் எப்போதும் வாங்கும் அறுபத்து மூன்றை மறைத்து பிராக்ராஸ் ரிப்போர்ட்டை பாஸ் வைக்கும் ஆபத்பாந்தவன். சின்ன வயசில் தமிழை விட நல்ல மொழி உலகத்தில் எங்கேயும் இருக்காது என்கிற எண்ணம்தான் எப்போதும். அது காலேஜ் காம்பவுண்டு வரும் வரை இருந்தது என்று சொல்வதை விட மாத்யூ தரகன் 'ஷேக்ஸ்பியர்' எடுத்து அசத்துவது வரை இருந்தது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். கையெழுத்து கொஞ்சம் கோணல் மாணலாக இருந்தாலும் இலக்கணப்பிழை கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். சந்திப்பிழையை இலக்கணப்பிழை லிஸ்ட்டில் நீங்கள் சேர்த்துக்கொண்டால் மேற்சொன்ன வாக்கியத்தை நிச்சயம் நான் வாபஸ் வாங்கிக்கொள்வேன். சந்திப்பிழையை சகித்துக்கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்த கிழக்கு பதிப்பகத்தின் அந்த சப் எடிட்டர் முகத்தை மறக்கமுடியுமா?!
எழுத்துதான் அப்படியென்றால் பேச்சு 'ழ'கர சுத்தமாக நல்லாவே வரும். நண்பர்கள் வட்டாரத்தில் அது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம். அதுவும் சென்னைக்கு வந்த புதிதில் அதுவே பேரதிசயம். 1989 ஆம் வருஷம் என்று ஞாபகம். ஏதோ ஒரு ஸ்கூல் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் அன்பழகன் ஒரு தத்துவார்த்தத்தை அள்ளிவிட்டு போனார். 'எட்டாம் கிளாஸ் படிக்கிறவனுக்கு நாலு வார்த்தை தமிழ்ல எழுத தெரிஞ்சுருக்கணும்; பிளஸ் டூ படிக்கிற பையனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷில் எழுத தெரிஞ்சிருக்கணும்' ஆஹா... நாம ரொம்பவே ஓவராத்தான் வளர்ந்துட்டிருக்கோங்கிற நினைப்புதான் வந்தது. நல்லவேளை, காலேஜ் படிக்கிறப்போ அன்பழகன் அமைச்சரா இல்லை!
போன வாரம் மேஜை டிராயரை குடைஞ்சு பழைய ·பைலை பிரிச்சு பார்க்கும்போது கையில் மாட்டின விஷயம்தான் இது. மூணாங்கிளாஸ் நோட்டு புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்த சில பக்கங்கள். எல்லா பக்கத்திலேயும் பெயர், தேதி, தமிழ் மாதம், ஆங்கில மாதம் என விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் நம்பர், கொஞ்சம் கிறுக்கல்கள், ஏகப்பட்ட இடைவெளி விட்டு தமிழ் ரைம்ஸ். விழுப்புரத்திலிருந்து மாயவரம் வழியா தஞ்சாவூர் போகிற மாதிரியான வார்த்தைகள். ஆங்காங்கே அள்ளித் தெளித்த மாதிரி பென்சில் பூக்கள். ஓரே பக்கத்தில் கணக்கு, தமிழ், வரலாறு என சகலமும். முரசு, இகலப்பையை கண்டுபிடித்தவர்களுக்கு கோடி நன்றி. 'அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் இருக்கேடா ராம்கி'ன்னு யாராவது சொல்லித்தொலைச்சு அது அந்த சப் எடிட்டர் காதுலேயும் விழந்துட்டா....