நான்காவது நாளாக துண்டிக்கப்பட்டு கிடக்கிறது சிதம்பரம். கொள்ளிடத்தின் அக்கரையிலிருக்கும் பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. 1977 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இப்படியொரு வெள்ள ஆபத்து கொள்ளிடத்தில் ஏற்பட்டதில்லை என்கிறார்கள். இக்கரையில் கொள்ளிடக்கரையோரமாய் இருக்கும் மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம் கிராமங்களில் முழங்கால் வரை தண்ணீர். கொள்ளிடத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா பகுதி தப்பியது. நாகை மாவட்டத்தில் இப்போது நிலைமை பரவாயில்லை. சிதம்பரத்தை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தின் நிலைமைதான் மோசம். கடலூரையும் சிதம்பரத்தையும் இணைக்கும் பாதையில் உள்ள ஆலப்பாக்கத்தில் ரோடு இருக்கும் தடயமே தெரியவில்லை. மேடான பகுதிகளான கிள்ளை, பரங்கிப்பேட்டை போன்றவை வெள்ள ஆபத்திலிருந்து தப்பித்திருக்கின்றன. சிதம்பரத்தை நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்து தெப்பக்குளத்தை ஞாபகப்படுத்துகின்றன. நிஜமாகவே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
நிகழ்ந்திருப்பது சுனாமியை விட மோசமான சம்பவம். சுனாமி வந்த அரை மணிநேரத்திற்குள்ளாகவே மீட்பு படை களமிறங்க முடிந்தது. இரண்டாவது நாளே இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. இப்போதோ நான்கு நாட்களாகியும் பல கிராமங்களை நெருங்கவே முடியவில்லை. உயிர் பலிகள் அதிகமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஞாயிற்றுக்கிழமை இரவு கிடைத்த தகவலின்படி மீட்பு நடவடிக்கைகள் சிதம்பரம், கடலூர் பகுதிகளில் முடிந்துவிட்டன. எல்லா மக்களுக்கும் உணவு, தங்க இடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நாளை முதல் நாகை, தஞ்சை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து உணவுப் பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதோ எல்லாம் விளையாட்டாக நடந்து முடிந்தது போலத்தான் இருக்கிறது. வியாழன் இரவு மழை பெய்ய ஆரம்பித்தவுடனேயே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று நாகை மற்றும் கடலூர் பகுதி கலெக்டர்கள் கெஞ்சித்தான் மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் விபரீதம் புரியாமல் வெளியேற மறுத்த மக்கள் தற்போது திகைத்து நிற்கிறார்கள். திருச்சி - விழுப்புரம், கும்பகோணம் - விக்ரவாண்டி, சீர்காழி - கடலூர் பாதைகள் என மூன்று பாதைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது கடந்த நூறு வருஷங்களில் நடந்திராத விஷயம்.
வழக்கம் போல் மீடியா யுத்தம் தொடர்கிறது. மிரண்டு நிற்கும் மக்களின் முகத்தை காட்டி எரிகள், குளங்கள் நிறைந்துவிட்டதால் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஜெயா டிவி படம் காட்டுகிறது. சன் டிவியோ பிஸ்கெட் விலை முப்பது ரூபாய் என்று பீதியை கிளப்புகிறது. தேர்தல் பயத்தில் மினி விசிட் வந்த திராவிட கட்சித்தலைவர்களை பார்க்க யாருக்கும் ஆர்வமில்லை. ஜாதி கட்சித்தலைவர்களால் மட்டுமே மக்களை எளிதாக அணுக முடியும் என்று விதாண்டவாதம் பேசிய நண்பரை காணவில்லை. நடிகர்கள் கூடிய சீக்கிரம் பெருந்தொகையை முதலமைச்சர் நலநிதிக்கு கொடுப்பார்கள். ஆனால் இயல்பு நிலை திரும்ப நிச்சயம் மாதக்கணக்கில் நாளாகும். வெள்ளிக்கிழமை வரை வெள்ள நீர் ஒழுங்காக கடலில் சென்று சேர்ந்துகொண்டிருந்தாலும் சனிக்கிழமை அன்று மட்டும் கடல் மிரண்டுபிடித்தாக சொல்கிறார்கள். சுனாமி வந்தது, பருவமழை ஆரம்பித்தது, செப்டம்பர் மாதம் முதல் தடவையாக கொள்ளிடத்தில் பயமுறுத்தியது, வெள்ளநீரை உள்வாங்கிக்கொள்ளாமல் கடல் மிரண்டு பிடித்தது எல்லாமே அந்த மாஜிக் 26 ஆம் தேதிதான். இப்போது பிரச்னை சாப்பாடு மட்டுமல்ல; பீதியும்தான்.