Thursday, November 24, 2005

வேண்டாம் கமல்!

ஆஸ்திரேலிய புல்வெளியில் சிவாஜி நடை போடும் குறுந்தாடி கமலை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டே சிம்ரன் பாடும் பாட்டுதான் எனக்கு இன்றைக்கு சுப்ரபாதம். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் கே டிவியின் முகத்தில்தான் கண்விழிக்க வேண்டியிருக்கும். விடிந்தும் விடியாத நேரத்திலேயே ரொமாண்டிக் பாட்டுதான் ரூம்மேட்டின் பேவரைட். அலுத்துக்கொண்டே எழுந்தபோதுதான் செல்பேசி சிணுங்கியது. பெங்களூரிலிருந்து அந்த குறுந்தகவல் (நன்றி - நக்கீரன் கோபால்!) வரவில்லையென்றால் ரிமோட்டுக்கும் வேலை இருந்திருக்காது. 'வணக்கம் தமிழக'த்தில் நம்ம கமலக்கண்ணன்!


Image hosted by Photobucket.com

கமலக்கண்ணன் கொஞ்ச மாதங்களாகத்தான் பழக்கம். அறிமுகப்படுத்தி வைத்தது நம்ம பேட்டை வாத்தியார்தான். (அய்யாவுக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை! வீட்டில் ஒரு மாதமாய் மோட்டுவளை ஆராய்ச்சிதான்!) பொன்னியன் செல்வன் குழும யாத்திரைகளுக்கு கமல்தான் கேப்டன். ஒல்லிக்குச்சி உடம்புக்காரன் என்று சொன்னால் சத்தியமாக அது பொய்தான். மேட்டுப்பாளையத்தில் பிறந்து பெங்களூரில் பொழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாலும் தஞ்சாவூர் பக்கம்தான் அடிக்கடி தலைவைத்து படுக்கிறார். சோழ, பல்லவ காலத்து கோயில் அமைப்புகளையும் அதிலிருக்கும் உள்குத்தையும் அவசரம் காட்டாமல் டாப் டூ பாட்டம் அலசுவதில் ஆர்வமுண்டு. எப்போதும் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பவர். போரடித்தால் பொன்னியின் செல்வனை படிப்பார். வரலாற்றை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் அந்த நால்வர் அணியில் ஒருவர். ஆதித்த கரிகாலன்தான் புனைப்பெயர். நந்தினி உண்டா இல்லையா என்பது பரம ரகசியம். காரணம், ஆசாமிக்கு கால்கட்டு போட்டு ரொம்ப நாளாகுது!

இரண்டு மாதத்திற்கு முன்னர்தான் மூன்றாம் யாத்திரைக்கு போயிருந்தோம். பொன்னியின் செல்வன் உறுப்பினர்களோடு பேசிக்கொண்டே வருவதற்காகவே பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து தஞ்சாவூர் போக எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சில் சோழர், கல்கி வாடை ஜாஸ்தி. இந்த சின்ன வயதிலேயே ஹிஸ்டரி ஸ்காலர் ஆகியிருப்பதில் எனக்கு மட்டுமல்ல வரலாற்று துறையில் இருப்பவர்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வரலாறு தவிர ஜப்பானிய மொழியில் ஆர்வமுண்டு. தமிழ்நாட்டின் கலாசாரத்தை ஒத்த ஒசாகாவில் (அதே இடம்தானுங்கோ!) செட்டிலாவதுதான் லட்சியமாம். இங்கே புல் முளைத்து, புதரில் சிக்கி கலாசார பொக்கிஷங்களெல்லாம் கவனிப்பாரின்றி கிடக்கும்போது அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டு ஓசாகா போகவேண்டும் என்று அவர் நினைத்தால்...'வேண்டாம் கமல்...அது உங்களால் முடியவே முடியாது'ன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.