பாரதி ராஜா ஆப்சென்ட்டானது வருத்தமாக இருந்தது. தயாநிதி மாறன் சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டால் நிறைய பேர் சினிமாவில் இருக்க முடியாது என்ற பார்த்திபன், கலைஞரை வாழ்த்த தமிழில் வார்த்தை இல்லாததால் இந்தியிலிருந்து கடன் வாங்கினார். பாராசக்தியை ஜெர்மனியில் டப் பண்ணினால் கார்ல் மார்க்ஸ் கதை வசனம் எழுதியதாக நினைத்துக் கொள்வார்களாம்; சீனாவுக்கு அனுப்பினால் மாசேதுங் எழுதியதாக நினைத்துக் கொள்வார்களாம். ஏன் ரஷ்ய மொழியில் டப் பண்ணினால் கதை வசனம் எழுதியது லெனின்தான் என்று அடித்து சொல்வார்களாம். சத்யராஜ் சொன்னதை சத்தியமாக நான் திரிக்கவில்லை.

'கவியரசு' கவிப்பேரரசு வைரமுத்து (டைட்டில் உபயம் விழா அழைப்பிதழ்!) அவசரமாக பேசிவிட்டு சென்றார். மனோராமா லேட்டாக வந்து பேசியதில் புதிதாக ஒன்றுமில்லை. பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் வாலி. 'ஜீன் மாதம் தெரியும்; என் ஜோதிடம் புரியும்' என்று கவிதை பாடி முடித்துக்கொண்டார். பார்க்கலாம்!
தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் வாசனையும் ஏவிஎம்மையும் பெருமைப்படுத்தியாகி விட்டது. இனி எல்.வி.பிரசாத்தையும் சந்தமாமாக்காரரையும் கெளரவிக்கவேண்டும் என்ற பாலசந்தரின் கோரிக்கைக்கு 'நோ பிராப்ளம்' என்று தலையாட்டினார் தயாநிதிமாறன். ஏவிஎம் கிளிப்பிங்ஸை கவனமாக பார்த்தவர்களுக்கு பேச்சில் புதிதாய் எதுவுமில்லை. கிளிப்பிங்ஸில் சொன்ன விஷயத்தையே ரிபீட் செய்தவர்கள் லிஸ்ட்டில் கலைஞரும் உண்டு. வழக்கம்போல் கூட்டத்தினரை கொஞ்சமாவது கலகலப்பாக்கியது விவேக்தான். பத்து நிமிஷம் போரடிக்காமல் பேசிவிட்டு கடைசியாக உதிர்த்த டயலாக்கில் அரங்கம் நிஜமாகவே அதிர்ந்தது.
'யாருக்காவது நாம லெட்டர் போட்டா பதில் லெட்டர் வரும்னு எதிர்பார்ப்போம். பதில் வரலேன்னா இன்னொரு தடவை லெட்டர் எழுதிப்பார்ப்போம்.. அதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லேன்னா மேற்கொண்டு லெட்டர் எழுதவே மனசு வராது. ஆனா, இங்க ஒருத்தர் அம்பது வருஷமாக 'உடன் பிறப்பே'ன்னு ஆரம்பிச்சு லெட்டர் எழுதிட்டே இருக்காரு.....'