இடித்து தள்ளும் புல்டோசர் ஓரடி கூட நகர்த்த முடியாமல் முடங்கிக்கிடக்கிறது. 'நர்மதா பச்சாவோ' கோஷங்கள் காதை பிளக்கின்றன. இதெல்லாம் ஐந்து வருஷமாக நடக்கிற சங்கதிதான். மத்திய பிரதேச மாநிலத்தின் பெரிய தலைவலி நர்மதா அணைக்கட்டு. டெல்லி என்ன தான் செய்யப்போகிறது எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே கைகட்டி நிற்கிறார்கள். பத்து வருஷத்துக்கு முன்னர்தான் மின்உற்பத்தியை டபுளாக்குவது பற்றியே பேச ஆரம்பித்தார்கள். 2012 மார்ச்சுக்குள் இப்போதைய மின்உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டுமாம். முடியுமா?
என்ஹெச்பிசி (National Hydroelectric Power Corporation) 170 திட்டங்களுடன் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியது. இதில் 162 திட்டங்களுக்கு டெல்லி ஓகே சொன்னது. ஆரம்பத்தில் வழக்கம்போலவே நிதிபற்றாக்குறை. உலகநாடுகள் உதவிக்கு வந்தன. ஸ்வீடன், நார்வே, லண்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் உள்ள முன்னணி வங்கிகளெல்லாம் என்ஹெச்பிசிக்கு கடன்களை அள்ளிக்கொடுத்தது. கடனாக கிடைத்திருப்பதை கணக்கு பண்ணினால் என்ஹெச்பிசி வசமிருக்கும் உடமைகளை விட பத்து சதவீதம் ஜாஸ்தியாம்!
துட்டு ஓகேதான். வேலை நடக்கிறதா? நர்மதா திட்டத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஓம்கரேஷ்வர், இந்திரா சாகர் திட்டங்கள் இரண்டும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கிறது. 92 மீட்டர் நீளத்தில் அணைக்கட்டு கட்டுவதால் கிட்டதட்ட 200,000 விவசாயிகளின் வாழ்க்கையை காலியாகிவிடுமாம். போன வருஷம் பெய்த மழையில் கரண்புரா என்கிற கிராமமே தண்ணீரில் காணாமல் போனது. திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே 120 கிராமங்கள் இருக்குமிடம் தெரியவில்லை. மழை பெய்யும் பட்சத்தில் இன்னுமொரு 130 கிராமங்கள் ஜல சமாதிதான். சர்தார் சரோவர், டெஹ்ரி, மகேஷ்வர், ஒம்கரேஷ்வர், போன்ற திட்டங்களுக்கு சமூக பிரக்ஞை உள்ளவர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு. உயிரை விட்டுதான் கரண்ட் வேணுமா என்று கேள்வி கேட்கிறார்கள். பிரச்னையில் பின்னணியில் இருக்கும் சட்ட சிக்கல்களெல்லாம் சத்தியமாக புரியவில்லை! அவ்வப்போது கோஷம் போட்டுக்கொண்டிருந்த நர்மதா பச்சாவோ அந்தோலன் மேதா பட்கர் ஒரு வாரமாக உண்ணாவிரதத்திலும் உட்கார்ந்துவிட்டார். மத்திய கமிட்டி ஒன்று அணைக்கட்டை சுற்றிப்பார்த்துவிட்டு ஆறு மாசம் கழித்து அறிக்கை கொடுக்கலாம்; மேதா பட்கர் இன்னும் பத்து பேரோடு ஏகப்பட்ட தடவை உண்ணாவிரதம் இருக்க நேரிடும்.
ஆரம்பித்த 30 வருஷங்களில் என்ஹெச்பிசியால் எட்டு திட்டங்களை கூட செய்து முடிக்க முடியவில்லை. ஏகப்பட்ட பேங்க் பாலன்ஸ் இருந்தாலும் 2485 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இன்னும் டிரை பண்ணிக்கொண்டே இருக்கிறார்களாம். பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் படி, இந்தியா 4622 மெகாவாட் மின் உற்பத்தியை கிராஸ் செய்தாக வேண்டும். திட்டம் லேட்டாவதால் ஏகப்பட்ட செலவு. 390 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் டால்ஹாஸ்டி அணைக்கட்டு திட்டம், காஷ்மீரில் இன்னும் ஆரம்ப பணியிலேயே இருந்து வருகிறது. நவம்பர் 1990ல் முடிக்கவேண்டிய திட்டமாம் இது. மார்ச் 2001க்குள் திட்டத்தை முடிப்பதற்கு கெடு வைத்தார்கள். இன்னமும் ஹி..ஹிதான். போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு எகிறியிருக்கிறது. இதே போல் பல்லிளித்த கோயல் கேரோ திட்டத்துக்கும் குட்பை சொல்லிவிட்டார்கள். கோயல் கேரோ திட்டம் இன்னும் நடப்பில் உள்ளதாக என்ஹெச்பிசி அறிக்கை சொல்கிறது. பயங்கர குழப்பம். கரண்ட் கட்டாவதிலிருந்து இந்தியாவை யார் காப்பாற்றப்போகிறார்கள்?