
விஜயகாந்த் ரசிகர்களின் முனகல் சத்தம் கொள்ளிடம் வரைக்கும்தான். திருமுல்லைவாசல் போன்ற சுனாமி ஏரியாக்களில் இன்னும் அ.தி.முக ராஜாங்கம்தான். சீர்காழி டவுணில் நிலைமையோ வேறு. 'எங்க கண்ணு முன்னாலேயே மூட்டை மூட்டையா லாரியில ஏத்திக்கிட்டு போய் அந்த மீனவ குப்பத்துல கொண்டு போய் கொடுத்தாங்க. எங்களுக்கு ஒரு தம்பிடி அரிசி கூட கிடைக்கலை!' சுனாமியால் பாதிக்கப்பட்டது மீனவர்கள் என்றால் நிவாரண உதவி நமக்கும் கிடைக்கவில்லையே என்கிற எரிச்சலில் ஏகப்பட்ட பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொகுதியில் வன்னியர்கள் ஜாஸ்தி. பாட்டாளி மக்கள் தலித் தம்பியை கடைசி நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றிவிடுவார்கள் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.
இந்தப் புரளியையெல்லாம் கண்டுகொள்ளாமல் உடன்பிறப்புகள் உற்சாகம் குறையாமல் ஒடியாடி வேலை செய்கிறார்கள். பன்னீர்செல்வம் தொகுதிக்கு நன்றாகவே தெரிந்த முகம். அமைப்பு ரீதியாகவும் தி.மு.க இங்கே படு ஸ்ட்ராங்க். கலர் டி.வி அறிவிப்பு வந்ததுமே தொண்டர்கள் ஒரு தடாலடி வேலையை செய்தார்கள். வீடு வீடாக போய் ரேஷன் கார்டு ஜெராக்ஸை சேகரிக்க ஆரம்பித்ததால் மக்களுக்கு கலர் டி.வி கனவு உச்சத்துக்கு போயிருக்கிறது. இன்றைய நிலையில் பா.ம.கவே உதவிக்கு வந்தாலும் இங்கே சிறுத்தைகளை காப்பாற்ற முடியாது!